சென்னை: தமிழக அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் மோதிரம் செய்யும் பணி ஜாய் ஆலுக்காஸ் ஜுவல்லரிக்கு மட்டுமே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஜாய் ஆலுக்காஸ் ஜுவல்லரி உடன் கல்யாண் ஜுவல்லரியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்நிலையில தான் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு மோதிரம் வழங்குவதற்கான பணி ஆணை 2 நிறுவனங்களுக்கு ஒன்று ஜாய் ஆலுக்காஸ். மற்றொன்று கல்யாண் ஜுவல்லர்ஸ். இந்த திட்டத்தின் முழு பொறுப்பும் ஜாய் ஆலுக்காஸ் வசம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில கல்யாண் ஜுவல்லர்ஸ் உள்ளே நுழைந்தது. ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துடன், கல்யாண் ஜுவல்லர்ஸ் எப்படி இந்த திட்டத்தை கைப்பற்றியது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: '' தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதன்கீழ் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஜுன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் தாயையும் கவுரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 14.07.2026 அன்று தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தால் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டன.11 நிறுவனங்கள் TN Tenders Portal மூலமாக பங்கேற்று தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தனர். இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையை தவிர்த்து செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து BIS-தரமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து ரூ 0.01 என ஜாய் ஆலுக்காஸ் என்ற நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியினை அளித்துள்ளது. தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்த புள்ளி சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற பிற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்க கோரப்பட்டது. இதில் கல்யாண் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் மட்டுமே இசைவு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இத்திட்டமானது அண்ணா பிறந்த நாளான 2026 செப்டம்பர் 15ம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது. ஜுன் மாதத்திலிருந்து நான்கு மாதங்களுக்கு தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு மேலே குறிப்பிட்ட குறைந்த விலைப்புள்ளி அளித்து தேர்வு வழங்குவதற்காக செய்யப்பட்டுள்ள நிறுவனமான.ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும், இந்த விலைப்புள்ளியை ஒப்பிட்டு இசைவளித்த கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70:30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரத் திட்டமானது தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2026 ஜூன் மாதம் 22ம் தேதி முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.