திமுக தரமான சம்பவம்.. குதிரை பேரத்தில் எதிர்பார்க்காத இடத்தில் அடித்த அறிவாலயம்.. தவெகவிற்கு சிக்கல்

  • சென்னை: தவெக குதிரை பேரம் செய்வதாக சில ஆதாரங்களுடன் ஆளுநரிடம் எதிர்க்கட்சியான திமுக புகார் அளித்திருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தவெக தரப்பிற்கு பெரிய அழுத்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் தற்போது குதிரை பேரம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    Advertisement

    விஜய் மீது எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான குதிரை பேர புகார்களை அடுக்கத் தொடங்கியுள்ளன. இதன் உச்சகட்டமாக, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றதாகக் கூறி, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் திமுகவின் முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் அக்கட்சியின் வழக்கறிஞர் அணி முறையிட்டு, முறையான விசாரணைக்குக் கடிதம் அளித்துள்ளது.

    ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் என்னென்ன?

    ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக வெற்றிக் கழகம் தங்களது ஆட்சியைத் தக்கவைக்கவும், ஆட்சியை பலப்படுத்தவும் எதிர்க்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியும், ஆசை வார்த்தைகள் காட்டியும் இழுப்பதாகக் குற்றம் சாட்டினார்.

    Advertisement

    இந்தக் புகாருக்கு மிக முக்கிய ஆதாரங்களாக இரண்டு முக்கிய அரசியல் நிகழ்வுகளை திமுக முன்வைத்துள்ளது:

    வைகோவின் பகிரங்கக் குற்றச்சாட்டு

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமீபத்திய பேட்டி இந்த விவகாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தங்களது கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை, பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக சின்னத்தில் மீண்டும் போட்டியிடுமாறு முதல்வர் விஜய் தரப்பு வற்புறுத்தியதாகவும், அதற்குப் பதிலாக அவர்களுக்குப் பெரிய அளவில் நிதி மற்றும் அமைச்சர் பதவிகள் தருவதாக ஆசை காட்டப்பட்டதாகவும் வைகோ தெரிவித்திருந்தார். இதையே முதன்மை ஆதாரமாக ஆளுநரிடம் திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

    Advertisement

    கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வாக்குமூலம்

    அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் விவகாரமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. தங்களை கட்சி மாறச் சொல்லி தவெக தலைமை தொடர்ந்து அணுகியதாகவும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும்படி கூறியதாகவும் அவரே ஒப்புக்கொண்டதை திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

    ஏற்கனவே வைகோ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நாங்கள் புகார் அளித்திருந்தோம். இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரே தங்களை தவெக அணுகியதை ஒப்புக்கொண்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களைத் திட்டமிட்டு விலைக்கு வாங்கும் இந்த ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக ஆளுநர் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    ஆபரேஷன் எல்

    தமிழக அரசியல் வட்டாரத்தில் தவெக ரகசியமாகச் செயல்படுத்தி வரும் இந்த நகர்வுகளுக்கு 'ஆபரேஷன் எல்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்துவிட்டு தவெக நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இன்னும் 10 பேர் அதிமுகவில் இருந்து தவெக செல்ல வாய்ப்புகள் உள்ளன.

    இதனால் அதிமுகவின் பலம் கணிசமாகக் குறைந்து வரும் வேளையில், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கவும், பிற கட்சிகளின் தயவின்றி தனித்து ஆட்சியை நடத்தவும் விஜய் இந்த உத்தியைக் கையாளுவதாக திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று எதிர்க்கட்சிகளுமே ஒரே குரலில் குற்றம் சாட்டுகின்றன.

    Advertisement

    ஏற்கனவே அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கடத்தல் புகார் நிலுவையில் உள்ள சூழலில், தற்போது எழுந்துள்ள இந்த அடுத்தடுத்த புகார்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையையும் திருப்பியுள்ளது.

    தவெக தரப்பின் மறுப்பு

    மறுபுறம், இந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கட்சியில் இணைந்தவர்கள் அனைவரும் தங்களது சுய விருப்பத்தின் பேரிலும், கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுமே இணைந்துள்ளதாகவும், தங்களை வீழ்த்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியல் சதி இது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    எனினும், நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், ஆளுநர் எடுக்கும் அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட நிகழ்வுகள் நடக்கும்.

    English Summary

    How DMK complaints against TVK on the horse trading may cause Vijay huge damage