மட்டன், சிக்கன் ஃபிரஷ்ஷானதா? கடையிலேயே கண்டுபிடிக்கலாம்.. இந்த 5 விஷயங்களை பாருங்க

  • சென்னை: மட்டன், சிக்கன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. இறைச்சி ஃபிரஷ்ஷாக இல்லாமல் பழையதாகவோ, கெட்டுப்போனதாகவோ இருந்தால் அதை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம்.. அதனால் கடையில் இறைச்சி வாங்கும்போதே அதன் நிறம், வாசனை, தன்மை உள்ளிட்டவைகளை கவனித்து வாங்குவது மிகவும் முக்கியம்.

    Advertisement

    முதலில் ஆட்டுக்கறி பற்றி பார்ப்போம்.. மட்டன் வாங்கும்போது முதலில் அதன் கலரை பார்க்க வேண்டும்.. ஃபிரஷ்ஷான ஆட்டிறைச்சி பொதுவாக லேசான சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    Advertisement

    கறி மங்கலான பழுப்பு, கரும் சாம்பல் அல்லது ஆங்காங்கே ப்ளூ கலராக மாறியிருந்தால் அது பழையதாக இருக்கலாம். அதேபோல், மட்டனிலுள்ள கொழுப்பு பகுதி வெள்ளை அல்லது கிரீம் கலரில் இருக்க வேண்டும். மஞ்சள் நிறமாக இருந்தால் கவனமாக இருப்பது நல்லது.

    ஆட்டுக்கறி எலும்பு

    அடுத்து, மட்டனை லேசாக தொட்டு பார்க்க வேண்டும்.. ஃபிரஷ்ஷான மட்டன் கொஞ்சம் விறைப்பாகவும், லேசான ஈரப்பதத்துடனும் இருக்கும். விரலால் அழுத்தியதும் சதை மறுபடியும் பழைய நிலைக்கு வர வேண்டும். மிகவும் வழுவழுப்பாகவோ, அழுத்தும்போது சதை உள்ளே அமுங்கியபடியே இருந்தாலோ அந்த கறியை வாங்க வேண்டாம்.

    Advertisement

    இதில் வாசனையும் ரொம்பவே முக்கியம். ஃபிரெஷ் மட்டனில் இயல்பாகவே இறைச்சி வாசனை மட்டுமே இருக்கும். புளிப்பு வாசனை, அழுகிய நாற்றம் அல்லது மூக்கைத துளைக்கும் அளவுக்கு கடுமையான வாசனை வந்தால் அதை வாங்காமல் இருப்பதே பாதுகாப்பானது...

    ஒருவேளை நீங்கள் எலும்புடன் கறி வாங்குகிறீர்கள் என்றால், எலும்பின் வெட்டுப்பகுதியையும் பார்க்க வேண்டும். அது காய்ந்து பழுப்பு அல்லது கரும் சாம்பல் நிறத்தில் இருந்தால் கறி பழையதாக இருக்கலாம். முடிந்தவரை முழு ஆட்டிலிருந்து நம் கண் முன்னே தேவையான பகுதியை வெட்டித் தரச் சொல்லி வாங்குவது நல்லது.

    சிக்கன் வாசனை, நிறம் முக்கியம்

    Advertisement

    சிக்கன் வாங்கும்போதும் முதலில் அதன் வாசனையைத்தான் பார்க்கவேண்டும்.. ஃபிரஷ்ஷான சிக்கனில் கடுமையான துர்நாற்றம் இருக்காது. புளிப்பு அல்லது அழுகிய வாசனை வந்தால் வாங்க வேண்டாம். கடைக்குள் வாசனையை சரியாக உணர முடியவில்லை என்றால், காற்றோட்டமான இடத்தில் சிக்கனின் வாசனையை கவனிக்கலாம்.

    நிறத்தையும் பார்க்க வேண்டும். ஃபிரஷ்ஷான சிக்கன் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மங்கலாகவோ, வெளிறிப்போயோ இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். சிக்கனை தொட்டுப் பார்க்கும்போது தசை சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். தொட்டாலே கொழகொழப்பாக, வழுவழுப்பாக இருந்தால் வாங்கவே வேண்டாம். அதேபோல் சிக்கனில் இருந்து அதிகமாக தண்ணீர் கசிந்துகொண்டிருந்தாலும் கவனிக்க வேண்டும்.

    Advertisement

    பேக்கிங் தேதி + ஃப்ரிட்ஜ் கறி

    ஃப்ரிட்ஜில் நீண்ட நேரம் வைக்கப்பட்ட அல்லது உறையவைக்கப்பட்ட சிக்கனை வாங்கும்போது கூடுதல் கவனம் தேவை. எவ்வளவு நாட்களாக அது சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரியாது.. அதனால், நம்பகமான கடையில் ஃபிரஷ்ஷாக வெட்டித் தரப்படும் சிக்கனை வாங்குவது நல்லது.

    பேக் செய்யப்பட்ட சிக்கன் வாங்கினால் பேக்கெட்டில் உள்ள தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.. பேக் செய்யப்பட்டது வீங்கியிருந்தாலோ, திறந்தபோது மோசமான வாசனை வந்தாலோ பயன்படுத்த வேண்டாம். மட்டன், சிக்கன் என எதுவாக இருந்தாலும் சந்தேகம் ஏற்பட்டால் வாங்காமல் இருப்பதே பாதுகாப்பானது. சிறிது கவனம் செலுத்தி ஆட்டுக்கறி, கோழிக்கறியை தேர்வு செய்தால், குடும்பத்தின் ஆரோக்கியத்தை நிறையவே பாதுகாக்க முடியும்...!!

    English Summary

    Don't risk your family's health with stale meat. This guide offers essential tips on identifying fresh mutton and chicken based on color, texture, and smell. Learn how to avoid purchasing spoiled products and ensure you bring home only the best, high-quality meat for your healthy meals in 2026.