சென்னை: உங்கள் வீட்டு மின்கட்டணத்தை நீங்களே உருவாக்க முடியும். மொபைல் ஆப் மூலம் மின் மீட்டரை புகைப்படம் எடுத்து எவ்வளவு வந்துள்ளது என்பதை கணக்கிட்டு, அப்படியே மின் கட்டண ரசீதை உருவாக்கி, மின் கட்டணத்தை செலுத்திவிட முடியும். இதற்கான முயற்சியை தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னெடுத்து வருகிறது. மின் மீட்டர் அளவீடு செய்யும் பணியாளர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது மொபைல் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நுகர்வோர் தங்களுடைய மின் மீட்டரின் அளவீட்டைப் புகைப்படம் எடுக்கலாம். அந்த அளவீட்டின் அடிப்படையில், மின் கட்டண மென்பொருள் கடந்த இரண்டு மாதங்களுக்கான மின் நுகர்வைக் கணக்கிட்டு, கட்டண ரசீதை உருவாக்கும். இந்த ரசீது நுகர்வோரின் அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
தற்போது, மீட்டர் அளவீடு எடுப்பதில் தாமதம், மிகையான கட்டணங்கள் மற்றும் மின் நுகர்வு குறித்த தவறான மதிப்பீடுகள் போன்ற புகார்கள் அதிகமாக இருக்கிறது. இந்தச் செயலியின் மூலம் மின் கட்டணத்தைச் செலுத்தவும், புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பிக்கவும், மின் விநியோகம் தொடர்பான குறைகளைப் பதிவு செய்யவும் முடியும். தற்போது இதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த இரு வாரங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும். டிசம்பர் மாதத்திற்குள் இது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார் * TNPDCL மொபைல் செயலியைத் திறக்க வேண்டும். * 'சுய மதிப்பீடு' (Self-assessment) என்ற ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். * உங்கள் மின் இணைப்பு எண்ணை (Service Number) பதிவிட வேண்டும் * 'சரி' (Ok) என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் மொபைலில் கேமரா திறக்கும். * மீட்டரில் உள்ள டிஜிட்டல் அளவீட்டுப் பகுதி கேமராவின் திரைக்குள் (Frame) தெரியுமாறு செல்போனை வைக்க வேண்டும். * மீட்டரில் KWh அளவீடு காட்டப்படும்போது, கேமரா அந்த எண்ணைப் படம் பிடித்துக்கொள்ளும். * 'சமர்ப்பி' (Submit) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். * மின் கட்டண மென்பொருள், முந்தைய அளவீட்டுடன் ஒப்பிட்டு, மின் நுகர்வுக்கான கட்டணத்தைக் கணக்கிட்டு ரசீதை உருவாக்கும். * மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ரசீது அனுப்பி வைக்கப்படும். * இறுதியாக நுகர்வோர் மின் கட்டணத்தை நேரடியாக மின் அலுவலக கவுண்டர்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்திக் கொள்ளலாம் * முந்தைய கட்டணங்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய மதிப்பீட்டில் பெரிய வித்தியாசம் இருந்தால், மென்பொருள் அதைச் சுட்டிக்காட்டும். அத்தகைய இணைப்புகளை மின் பணியாளர்கள் நேரில் சென்று மீண்டும் சரிபார்ப்பார்கள். இரு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மின் அளவீட்டுச் சுழற்சி முடிந்த பிறகு, அடுத்த இரண்டு நாட்களுக்குள் நுகர்வோர் தங்கள் மீட்டர் அளவீடுகளைப் பதிவேற்றலாம். இதன் மூலம், மின் நுகர்வு அளவு அடுத்த கட்டண அடுக்குக்கு மாறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம. ஒரு நுகர்வோர் சரியான சேவை எண்ணை உள்ளிட்டு பல மீட்டர்களின் அளவீடுகளை எடுக்க முடியும். மேலும் சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு மின் கடடண ரசிது அனுப்பப்படும். சென்னையில் சில பகுதிகளுக்கு குழாய் மூலம் எல்பிஜி விநியோகிக்கும் டோரண்ட் கேஸ் நிறுவனம், நுகர்வோருக்குக் கட்டணம் விதிக்க இதேபோன்ற மீட்டர் அளவீடுகளைப் பயன்படுத்தி வருகிறது. அதேபோன்ற திட்டத்தை தான் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. "ஒரு நுகர்வோர் ஒரு மீட்டரின் அளவீட்டை எடுத்து முடித்தவுடன், மதிப்பீட்டாளர்களால் மதிப்பிடப்பட வேண்டிய மீட்டர்களின் பட்டியலிலிருந்து அது நீக்கப்படும்," என்றும் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். எனினும் இந்த முறைக்கு மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது மின் விநியோக நிறுவனத்தின் தவறான நடவடிக்கை என்றும், இது வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள். நுகர்வோரே மின்சார ரசிதை உருவாக்குவது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கும். ஆனால் நாம் 2.5 கோடி நுகர்வோர்களும் உருவாக்கிவிட முடியாது. நுகர்வுக் கட்டணங்களில் மீட்டர் மதிப்பீடும் இருக்கிறது. எப்படி சிலிண்டர் டெலிவரியுடன் சேர்த்தே நிறுவனங்கள் சிலிண்டருக்கு கட்டணம் வசூலிக்கின்றனவோ இதுபோல், தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் மின் கணக்கீட்டுக்கும் சேர்த்து தான் கட்டணம் வசூலிக்கிறது. எனவே தனது பொறுப்பை நுகர்வோர் மீது சுமத்த முடியாது. தற்போதுள்ள டிஜிட்டல் மீட்டர்களுக்குப் பதிலாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டாலும், போதிய அளவு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
---கொடைக்கானல் - தேனி சாலை துண்டிப்பு.. அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையின் நிலை என்ன?
உங்கள் வீட்டு மின் கட்டண ரசீதை நீங்களே உருவாக்குவது எப்படி?
அரக்கோணம்-சென்ட்ரல் ஏசி ரயிலில் 230 ரூபாய்.. மனசாட்சியில்லாத கட்டணம்.. பயணிகள் எதிர்ப்பது ஏன்?
தூத்துக்குடி புதிய அனல் மின்நிலையங்களால் மின் கட்டணம் உயரும்.. தனியார் அமைப்பின் ஆய்வு கூறுவது என்ன