ஒரிஜினல் சொத்து பத்திரங்களை பத்திரமாக பாதுகாப்பது எப்படி? டிஜிலாக்கரில் ஆவணங்களை இப்படி சேமிக்கலாம்

  • சென்னை: ஆவணங்கள் எதுவானாலும் அவைகளை முறைப்படி பாதுகாக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பருவமழை காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் முக்கிய ஆவணங்கள் சேதமடையவோ, தொலைந்து போகவோ வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க வீட்டில் ஒரிஜினல் பத்திரங்களை எப்படி பாதுகாப்பது, டிஜிலாக்கர் மூலம் டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை எப்படி சேமிப்பது என்பதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கும் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் நம்முடையது என்பதை நிரூபிக்க பத்திரங்கள் மிகவும் முக்கியம். இந்த சொத்துக்களின் ஒரிஜினல் பத்திரங்களை பத்திரமாக பாதுகாப்பது மிகவும் அவசியம்.

    Advertisement

    அரசு ஆவணங்கள்

    அதுபோல, அரசு ஆவணங்களில் அந்த சொத்துக்கள் நம்முடைய பெயரில் இருக்கின்றனவா என்பதையும் அடிக்கடி சரிபார்க்க வேண்டும். பத்திரங்கள் மட்டுமல்லாமல் பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களையும் கவனமாக பாதுகாக்க வேண்டும்.

    வீட்டிலுள்ள ஒரிஜினல் பத்திரங்களை சாதாரணமாக எடுத்து வைக்காமல், பாதுகாப்பான இடத்தில் ஒரு கவரில் வைத்து பாதுகாக்கலாம். அதேபோல, ஒவ்வொரு பத்திரத்தையும் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. ஒரிஜினல் பத்திரங்களையும் நகல்களையும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்.

    ஒரிஜினல் பத்திரங்கள்

    பத்திரங்களில் உள்ள சர்வே எண், பத்திரப்பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டால், அவசர தேவைகளுக்கு உதவும். வெளியிடங்களுக்கு செல்லும்போது ஒரிஜினல் பத்திரங்களை எடுத்துச் செல்வதை தவிர்த்து, தேவையான இடங்களில் நகல்களை பயன்படுத்தலாம்.

    Advertisement

    ஒரிஜினல் பத்திரங்களை லேமினேஷன் செய்யக்கூடாது. அப்படி செய்வதால் பத்திரத்தில் உள்ள எழுத்துக்கள் பாதிக்கப்படலாம். மேலும், பத்திரங்கள் கவருடன் ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. பத்திரங்களை ஒன்றாக இறுக்கமாக கட்டி வைக்காமல், ஒவ்வொன்றையும் தனித்தனியாக பாதுகாப்பது நல்லது. பத்திரங்களில் ரப்பர் பேண்ட் அல்லது கிளிப்களை போடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    எப்போதுமே ஈரப்பதம் ஏற்படாமல் பாதுகாப்பான இடத்தில் ஆவணங்களை வைப்பதுடன், அவற்றை அவ்வப்போது சரிபார்ப்பதும் அவசியம்.

    டிஜிலாக்கரில் வைக்கலாம்

    ஒரிஜினல் பத்திரங்களை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், டிஜிட்டல் வடிவிலும் முக்கிய ஆவணங்களை சேமித்து வைக்கலாம். இதற்கு மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிலாக்கர் (DigiLocker) சேவையை பயன்படுத்தலாம்.

    Advertisement

    இந்த சேவையின் மூலம் டிஜிட்டல் ஆவணங்களை ஒரே இடத்தில் வைத்துக் கொள்ள முடியும். தேவைப்படும் நேரத்தில் குறிப்பிட்ட ஆவணங்களை க்யூஆர் கோடு அல்லது பாதுகாப்பான இணைப்பு வழியாக பிறருடன் பகிரவும் முடியும்.

    ஒவ்வொரு பயனருக்கும் 1 ஜிபி வரையிலான கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாக வழங்கப்படுகிறது. இயற்கை பேரிடர்களின்போது காகித ஆவணங்கள் சேதமடைந்தாலும், டிஜிட்டல் வடிவில் சேமித்துள்ள ஆவணங்களை அணுகும் வசதி உதவியாக இருக்கும். ஆனால், டிஜிலாக்கரில் நாமாக பதிவேற்றும் ஆவணங்களும், அரசு அலுவலகங்களில் இருந்து நேரடியாக பெறும் ஆவணங்களும் வேறுபட்டவை. இரண்டையும் ஒன்றாக நினைத்துவிடக் கூடாது.

    Advertisement

    வாட்ஸ்அப் மூலம் டிஜிலாக்கர் சேவை

    ஆன்லைன் வசதியுடன், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ MyGov Helpdesk வாட்ஸ்அப் சேவை மூலமாகவும் குறிப்பிட்ட அரசு ஆவணங்களை பெற முடியும். இதற்கு 90131 51515 என்ற நம்பரில் மெசேஜ் அனுப்பி உரையாடலை தொடங்கலாம்.

    அண்ணன் சீர் திட்டம்! 8 கிராம் தங்கம்+ பட்டுப்புடவை! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன ஆவணங்கள் தேவை?

    அதன்பிறகு, சாட்பாட்டில் கேட்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி தேவையான சேவையைத் தேர்வு செய்து, கிடைக்கும் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வசதி மூலம் குறிப்பிட்ட சான்றிதழ்களை வாட்ஸ்அப் வழியாகவே பெற முடியும்.

    Advertisement

    ஆன்லைனில் டிஜிலாக்கர் கணக்கு

    டிஜிலாக்கர் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது செயலியைத் திறந்து, "Sign Up" என்பதை தேர்வு செய்ய வேண்டும்.. பிறகு ஆதார் அட்டையில் உள்ளபடி பெயர், பிறந்த தேதி, பாலினம், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு, ஆதார் நம்பரை சமர்ப்பிக்க வேண்டும்.

    மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு சரிபார்த்த பிறகு, பாதுகாப்பு பின், பயனர்பெயர், பாஸ்வேர்டை அமைத்து கணக்கைத் தொடங்கலாம். அதன் பிறகு தேவையான ஆவணங்களை டிஜிலாக்கரில் பெற்று, சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்..

    பதிவுத்துறை தனியாரிடம் போகிறதா? அப்ப சொத்து ஆவணங்கள்? ₹67 கோடிக்கு கணக்கு எங்கே? ஹென்றி கேள்வி

    ஒருவேளை ஆவணங்கள் தொலைந்தால்?

    ஒருவேளை ஒரிஜினல் சொத்து பத்திரங்கள் தொலைந்துவிட்டால், உடனே அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து, புகாருக்கான ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு பத்திரம் பதிவு செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி, சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற விண்ணப்பிக்கலாம். பத்திரம் தொலைந்தது தொடர்பாக செய்தித்தாளில் அறிவிப்பு வெளியிட வேண்டியிருக்கலாம். அதனால், ஆவணங்கள் தொலைந்ததும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுப்பது முக்கியம்...!!

    English Summary

    How to Protect Original Property Documents and Save Them Safely in DigiLocker