செங்கோட்டையனுக்கு வந்த பெரிய சான்ஸ்! இறுதி நிமிடத்தில் நம்பர் 2 சீட்டில் நடந்த மத்திய அரசின் ட்விஸ்ட்

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அமைச்சரவை விரிவாக்கம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூத்த தலைவர் செங்கோட்டையனின் திடீர் முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நிதித்துறையை செங்கோட்டையன் தவிர்த்ததாகவும், அதற்கு ஒரு காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை பிரம்மாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 23 புதிய எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் பங்கேற்புடன், மொத்தம் 35 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

    Advertisement

    வரலாற்றிலேயே முதல்முறை

    தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) துறை போன்ற அதிநவீன இலாகாக்கள் உருவாக்கப்பட்டு, தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கிய புதிய பாதையை தமிழகம் தொடங்கியுள்ளது. சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அமைச்சரவையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் துடிப்பான இளைஞர்களின் கலவையாக அமைந்துள்ள இந்த அமைச்சரவை, ஆதிதிராவிடர் நலத்துறையை "சமூக நீதித்துறை" எனப் பெயர் மாற்றம் செய்து, அதற்கு முழுமையான அமைச்சரவை அந்தஸ்தை வழங்கியுள்ளது. தவெகவின் இந்த அரசியல் நகர்வுகள் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன.

    Advertisement


    நிர்மல் குமார் மின்துறை

    இந்நிலையில், இந்த அமைச்சரவை ஒதுக்கீடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதர் பிரகாஷ் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல்வேறு அரசியல் காரணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

    "நிர்மல் குமாரை ஏதோ ஒரு நம்பிக்கையின் காரணமாக மின்துறை பொறுப்பில் அமர்த்தியிருக்கிறார்கள். ஆனால், அதை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் பெரிய கேள்விக்குறி. ஏனென்றால், மின்துறை என்பது எப்போதும் சர்ச்சைக்குரிய துறை. அதில் ஏகப்பட்ட கமிஷன், ஊழல் புகார்கள் எனப் சிக்கல்கள் சூழ்ந்திருக்கும்.

    டிரான்ஸ்பார்மர் போன்ற சிறிய உபகரணங்கள் வாங்குவதில் தொடங்கி, டன் கணக்கில் நிலக்கரியைக் கையாளுவது வரை மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற வாய்ப்புள்ள துறையாகும். அதை நிர்மல்குமார் எப்படி கையாளப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Advertisement

    செங்கோட்டையன் மறுத்த நிதித்துறை

    செங்கோட்டையனை பொறுத்தவரை, தவெகவில் நம்பர் 2 இடத்திலும், முதலமைச்சருக்கு அடுத்தபடியாக உள்ளவராகவும் பார்க்கப்பட்டார். அனைவரும் அவர் நிதித்துறையை ஏற்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், நிதித்துறை வேண்டாம் என்று அவரே ஒதுங்கிக்கொண்டார். வருவாய்த்துறையைத் தான் கையில் எடுத்துள்ளார். அவருக்குப் பதிலாக ஆர்.கே. நகர் எம்.எல்.ஏவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் பெரிய அரசியல் காரணம் இருக்கிறது.

    செங்கோட்டையனுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் 'பல்ஸ்' நன்றாகத் தெரியும். மேற்கு வங்கம், அஸாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பிஸியாக இருக்கும் மத்திய அரசு, அந்தப் பணிகள் முடிந்ததும் தமிழகத்தின் பக்கம் முழுமையாகத் திரும்பும்.

    Advertisement

    மத்திய அரசு தீவிரம்

    தமிழகத்திற்கு ஆர்.எஸ்.எஸ் அல்லது ராணுவப் பின்புலம் கொண்ட ஒரு நபரை ஆளுநராக நியமிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அந்த ஆளுநர் நியமனத்திற்குப் பிறகுதான் தமிழகத்தில் தங்களின் அடுத்தக்கட்ட பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தும். நிதித்துறை போன்ற துறைகளை வசம் வைத்திருந்தால், பிற்காலத்தில் மத்திய அரசின் ரெய்டுகள் நடந்தால் அதை எதிர்கொள்வது மிகக் கடினம்.

    அதனால்தான், தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்க நிதித்துறையைத் தனக்கு வேண்டாம் என்று செங்கோட்டையன் சொல்லிவிட்டாராம்" என்றெல்லாம் அந்த பேட்டியில் தாமோதரன் பிரகாஷ் கூறியிருக்கிறார்.

    செங்கோட்டையனின் ராஜதந்திரம்

    ஆனாலும், தமிழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழலில், அமைச்சரவை விரிவாக்கம் என்பது வெறும் நிர்வாக மாற்றமாக மட்டும் பார்க்கப்படவில்லை. இது தவெகவின் பலம் மற்றும் பலவீனத்தை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் ஒரு சிக்கலான நகர்வாகவே அமைகிறது.

    Advertisement

    குறிப்பாக, சர்ச்சைக்குரிய மின்துறையை நிர்மல்குமாரிடம் ஒப்படைத்திருப்பது, நிர்வாகத் திறமைக்கான சோதனையாகப் பார்க்கப்படும் அதேசமயம், மத்திய அரசின் அரசியல் நகர்வுகளை முன்கூட்டியே கணித்துச் செயல்படும் செங்கோட்டையனின் ராஜதந்திரம், தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு இன்னும் தீவிரமடையும் என்பதையே உணர்த்துகிறது.

    தவெக அமைச்சரவை விரிவாக்கம்

    இந்த அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் செங்கோட்டையனின் விலகல் ஆகியவை, தவெக அரசு தனது அதிகாரத்தை பாதுகாப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறது என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. நிதித்துறை போன்ற முக்கியத் துறைகளைத் தவிர்த்து, வருவாய்த்துறையை செங்கோட்டையன் தேர்வு செய்திருப்பது, வரவிருக்கும் அரசியல் சவால்களை முன்கூட்டியே கணித்து, பாதுகாப்பான பாதையைத் தேர்ந்தெடுக்கும் முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

    இனிவரும் காலங்களில், புதிய அமைச்சர்களின் செயல்பாடுகளும், ஆளுநர் நியமனத்திற்குப் பிறகு மத்திய-மாநில உறவுகள் எப்படி மாறப்போகின்றன என்பதும் தமிழக அரசியலின் போக்கை தீர்மானிக்கும் மிக முக்கியக் காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Did Sengottaiyan Turn Down the Finance Minister Offer? What Is the Central Government’s Role Behind the ‘Number 2’ Politics?