தலைமை தேர்தல் ஆணையர் மத்திய அரசுக்கு அடிபணிய தேவையில்லை.. டிஎன் சேஷன் வீடியோ வைரல்

  • சென்னை: "இந்திய தேர்தல் ஆணையர் என்பதற்கும் இந்திய அரசின் தேர்தல் ஆணையர் என்ற வார்த்தைக்கும் இடையே சிறு வேறுபாடுதான் உள்ளது. ஆனால் அதில் பெரிய வித்தியாசம் அடங்கியுள்ளது.." என்று கர்ஜித்தவர் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மத்திய பாஜக அரசிற்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சேஷன் கொடுத்த பழைய பேட்டி இப்போது வைரலாக சுற்றி வருகிறது.

    Advertisement

    நம் நாட்டு தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன். இவர் தமிழக கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

    Advertisement

    கடந்த 1990 முதல் 1996 வரை இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்தார். 1993ம் ஆண்டில் இந்திய தேர்தலுக்காக அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார்.

    வாக்குக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடி கைப்பற்றல் உள்ளிட்ட சம்பவங்களை அறிந்தாலே தேர்தலை ரத்து செய்து பெயர் பெற்றவர். தேர்தல் நடத்தை விதியை கடுமையாகவும், வாக்காளர்களின் செலவு விவரங்களை கண்டிப்புடன் பின்பற்றி பெயர் பெற்ற இந்த டிஎன் சேஷன் அளித்த பழைய பேட்டியின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் டிஎன் சேஷன் கூறியதாவது:

    Advertisement

    ''நான் மத்திய அரசின் தலைமை தேர்தல் ஆணையர் கிடையாது. நான் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர். இது சின்ன மாற்றம் தான். ஆனால் மிகவும் முக்கியமானது. அதோடு இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. நான் அரசின் ஒரு அங்கம் கிடையாது.

    அப்படியிருக்கும்போது நான் யாருக்கு பதிலளிக்க வேண்டும்?. ஜனாதிபதிக்கு நிச்சயமாக பதிலளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு நிச்சயமாக பதிலளிக்க வேண்டும்.தேவையென்றால் நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும்.. நான் ஏதாவது தவறு செய்தால் நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும்.

    நம்முடைய அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். தேர்தல்கள் மீது நம்பிக்கை, நம்பகத்தன்மை கிடையாது. ஆனால் இந்தியாவில் தேர்தல் நம்பகத்தன்மையுடன் நடக்கிறது என்பதை ஒருவரால் கூற முடியும்'' என்று கூறியுள்ளார்.

    Advertisement

    இதன்மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்பவர் மத்திய அரசுக்கு அடிபணிய தேவையில்லை என்பதை டிஎன் சேஷன் கூறிருந்தார். டிஎன் சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. பிவி நரசி்ம்மராவ் பிரதமராக இருந்தார்.

    தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக நடைமுறையப்படுத்தியதால் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனையானது. இதனால் பிவி நரசிம்மராவ் அவர் மீது அதிருப்தியடைந்தார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. டிஎன் சேஷனின் அதிகாரத்தை கட்டுப்படுத்த பிவி நரசிம்மராவ் முடிவெடுத்தார்.

    அதன்பிறகு தான் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமின்றி கூடுதலாக 2 தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இப்படி பிவி நரசிம்மராவ் - டிஎன் சேஷன் மோதலுக்கு பிறகு தான் இந்திய தேர்தல் ஆணையர் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்களுடன் இன்று வரை செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.