சென்னை: இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலையில் மாரடைப்பால் காலமானார். அதற்கு முன்பாக நேற்று இரவு 10.30 மணிக்கு இயக்குநர் சீனு ராமசாமிக்கு போன் செய்து 'சாரி' சொல்லி பேசியது குறித்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி இயக்குநர் சீனு ராமசாமி கலங்கியபடி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ். நடிகராகவும் பல படங்களில் கலக்கினார். அவருக்கு வயது 73. இன்று காலையில் சென்னையில் நடைப்பயிற்சி முடித்து வீட்டுக்கு சென்ற பாக்யராஜ்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பாக்யராஜ் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் காலமானார். பாக்யராஜின் இந்த திடீர் மறைவு திரையுலகத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ராதிகா உள்பட ஏராளமான திரைபிரபலங்கள் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் பாக்யராஜ் நேற்று இரவில் தன்னிடம் போனில் 'சாரி' சொல்லி பேசியதாகவும், ஆனால் காலையில் அவர் மறைந்த செய்தி கேட்டது ரொம்ப பெரிய அதிர்ச்சியாக இருப்பதாகவும் இயக்குநர் சீனு ராமசாமி கூறியுள்ளார். இதுபற்றி இயக்குநர் சீனு ராமசாமி கூறியுள்ளாதாவது: ''உண்மையிலேயே எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நேற்று இரவு 10.30 மணிக்கு எனக்கு போன் பண்ணி இருந்தார். சிரித்தபடியே போன் பேசினார். சாரி, லேட் நைட் போன் பேசியதற்கு என்று கூறினார். சார்.. சார்..சொல்லுங்கள் என்று நான் சொன்னேன். பேசி கொண்டிருந்தார். எழுத்தாளர் சங்க தேர்தல் வருகிறது. ஒரு பொறுப்பு இருக்கிறது என்றார். அதற்கு நான் சார் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். உங்களின் பின்னால் நான் வந்துவிடுவேன் என்று சொன்னேன். ஆனால் காலையில் பார்த்தால் எனக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் அவருடைய பெரிய ரசிகன். சின்ன வயதில் இருந்து அவரது படத்தை பார்த்து வளர்த்தவன். திரைக்கதையில் எளிய, எதார்த்தங்களை அவரிடம் தான் கற்றுக்கொண்டேன். நிறைய விஷயங்களை அவரிடம் கற்றுள்ளேன். உண்மையில் என்னால் பேசவே முடியவில்லை. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. என்ன ரொம்ப பெரிய மனிதர்கள் எல்லாம் நம்மை விட்டு போய் கொண்டே இருக்கிறார்கள் என்ற எண்ணம் வருகிறது. உண்மையிலேயே அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரை பிரிந்து வாழ்கிற குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய தந்தையை இழந்த மாதிரியான உணர்வு உள்ளது'' என்று உருக்கமாக கூறினார்.