சென்னை: சென்னையில் இன்று தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை புரட்சி அண்ணா திமுக கட்சியின் தலைவர் பெங்களூர் புகழேந்தி சந்தித்து பேசினார். இந்நிலையில் தான் தவெகவில் இதுவரை ஆள் மட்டுமே இணைந்து வந்த நிலையில் புகழேந்தி தனது கட்சியான புரட்சி அண்ணா திமுகவையே தவெகவில் இணைப்பதற்கான சிக்னலை கொடுத்துள்ளார். யார் இந்த புகழேந்தி வாங்க பார்க்கலாம்.
அதிமுகவில் செயல்பட்டு வந்தவர் புகழேந்தி. இவர் பெங்களூரில் வசித்து வந்தார். கர்நாடகா அதிமுக செயலாளராக பதவி வகித்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி - ஓ பன்னீர் செல்வம் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அமமுகவில் சேர்ந்தார். பிறகு ஓ பன்னீர் செல்வம் அணியில் இணைந்து வலம் வந்தவர் அதன்பிறகு தனி கட்சி தொடங்கினார்.
அவரது கட்சியின் பெயர் புரட்சி அண்ணா திமுக. இந்நிலையில் தான் இன்று சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டவர்களை புகழேந்தி சந்தித்து பேசினார். இதனால் அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு புகழேந்தி கூறியதாவது: ''நான் இன்று ஓபனாக இன்று சொல்கிறேன். பல சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் விஜய்யின் தலைமையையேற்று தவெகவில் இணைய உள்ளனர். இதற்கான சூழல் தான் இப்போது உள்ளது. இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைத்தால் அது ஜனநாயக விரோதமாக ஆகிவிடும். இதனால் ஆட்சிக்கு 6 மாதம் வரை தொந்தரவு கொடுக்கிறார்கள். இது மாற வேண்டும். நான் ஒரு தொகுதி விஷயமாக பேச வந்தேன். என்னுடன் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் வென்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்)வந்தார். நாங்கள் புஸ்ஸி ஆனந்தை பார்த்தோம். புஸ்ஸி ஆனந்த் அருமையான அமைச்சர். டெண்டரில் தவறு செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விடுகிறார். ஆதவ் அர்ஜூனா உண்மையை தான் சொல்கிறார். அவர் தனது கருத்துகளை மாற்றி சொல்லவே இல்லை. என்னுடைய நண்பர் ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக இருக்கிறார். அவர்களை மரியாதை நிமித்தமாக பார்த்து செல்ல வந்தேன். சால்வை அணிவித்தேன்'' என்றார். இந்த வேளையில் பத்திரிகையாளர்கள், ''தவெகவில் இணைய வாய்ப்புள்ளதா?'' என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு புகழேந்தி, ''அதற்குரிய நேரம் வரும்போது சொல்கிறேன். அது நடக்கும்போது நான் சொல்கிறேன். ஆனால் நடந்தாலும் நடக்கலாம். இல்லையென்று சொல்வதற்கு இல்லை.ஏனென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதாவை கொண்டாடுகிறார்கள். அண்ணா, அம்பேத்கர், அஞ்சலையம்மாளையும் முன்னிறுத்துகிறார். இவர்களை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்தவர். மேலும் பெரிய பாராட்டுக்குரிய விஷயம் என்னவென்றால் தேர்தலில் ஓட்டுக்கு 10 பைசா கொடுக்காமல் ஆட்சியமைத்த சரித்திரம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜோசப் விஜய் என்ற முதல்வரை சேரும். மக்களிடம் நீங்கா இடத்தையும், இளைஞர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார். இதனால் அவரது தலைமையேற்று அவருக்கு பின்னால் வருவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நேரம் வரும்போது அதுபற்றி உங்களிடம் தெரிவிக்கிறேன்'' என்றார். இதன்மூலம் புகழேந்தி விரைவில் தவெகவில் இணையவதற்கான சிக்னலை கொடுத்துள்ளார். தற்போது அவர் புரட்சி அண்ணா திமுக என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இதனால் அவர் துவெகவில் இணையும்போது அவரது கட்சியை அப்படியே தவெகவில் சேர்த்து அந்த கட்சியின் உறுப்பினராவார் என்பது குறிப்பிடத்தக்கது.