அடிச்சுத் தூக்கிய ஐசிஎஃப்.. வந்தே பாரத் ’டார்கெட்’ முடிஞ்சு! அடுத்த அசைன்மென்டுக்கு ரெடி! மெகா சாதனை


  • சென்னை: இந்திய ரயில்வேயின் பெருமைமிக்க திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐசிஎஃப், இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், இனி முழு கவனமும் ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மீது திருப்பப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டிலேயே 8 புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இந்தியாவில் ரயில் பெட்டி தயாரிப்பில் முன்னணி மையமாக திகழும் சென்னை ஐசிஎஃப், பல தசாப்தங்களாக இந்திய ரயில்வேயின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆயிரக்கணக்கான ரயில் பெட்டிகளை தயாரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது இந்த தொழிற்சாலைtது.

    Advertisement

    இந்நிலையில், ஐசிஎஃப் கடந்த சில ஆண்டுகளாக வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. வந்தே பாரத் ரயிலின் வரலாறு சென்னை ஐசிஎஃப் இலிருந்தே தொடங்கியது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது இந்த ரயில்.

    வந்தே பாரத்

    ஆரம்பத்தில் "ரயில் 18" என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டது. பின்னர் அதற்கு வந்தே பாரத் என்ற பெயர் சூட்டப்பட்டது. 2019ஆம் ஆண்டு புதுடெல்லி - வாரணாசி இடையே முதல் சேவை தொடங்கப்பட்டபோது, இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக அது பார்க்கப்பட்டது. அதன்பிறகு வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வேகம், வசதி, நவீன உள்கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த ரயில்கள் விரைவில் பிரபலமடைந்தன.

    Advertisement

    ஐசிஎஃப்

    தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் 80-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு 97 இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த இலக்கை தற்போது தொழிற்சாலை முழுமையாக நிறைவேற்றியுள்ளது. சமீபத்தில் 97வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு ரயில்வேக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வந்தே பாரத் ரயில்கள்

    இது வெறும் ஒரு உற்பத்தி இலக்கை எட்டிய சாதனை மட்டுமல்ல. இந்திய ரயில்வே அடுத்த கட்ட வளர்ச்சிக்குள் நுழைந்திருப்பதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை அதிக அளவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை வந்தே பாரத் ரயில்கள் பெரும்பாலும் பகல் நேர பயணங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

    Advertisement

    ஸ்லீப்பர் வந்தே பாரத்

    ஆனால் நாடு முழுவதும் இரவு நேர நீண்ட தூர பயணங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ரயில்கள் தேவைப்படுவதாக பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கான பதிலாகவே ஸ்லீப்பர் வந்தே பாரத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வகை ரயில்கள் ஏற்கனவே சோதனை அடிப்படையில் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் காமாக்யா இடையே இயங்கும் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    ரயில் பெட்டி தயாரிப்பு

    இதுவரை பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நான்கு ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் மேலும் ஆறு ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. அதோடு, சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையிலேயே இரண்டு ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை முழுமையாக தயாரிக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    நவீன இரவு நேர ரயில் சேவை

    மேலும் எதிர்காலத்தில் 24 பெட்டிகள் கொண்ட நீளமான ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களையும் தயாரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரயில்வே நாடு முழுவதும் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது. அதில் முக்கிய பங்கு ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் விமானப் பயணத்திற்கு மாற்றாக வேகமான, வசதியான மற்றும் நவீன இரவு நேர ரயில் சேவையை பயணிகள் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இருக்கை வந்தே பாரத்

    சென்னை ஐசிஎஃப் தற்போது இருக்கை வந்தே பாரத் தயாரிப்பை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஸ்லீப்பர் வந்தே பாரத் தயாரிப்பில் முழு கவனம் செலுத்துவது இந்திய ரயில்வேயின் புதிய வளர்ச்சி பாதையை சுட்டிக்காட்டுவதாக ரயில்வே நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக தென்னிந்தியாவின் தொழில்நுட்ப திறனை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபிக்கும் வகையில் இந்த திட்டம் அமையும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

    English Summary

    Chennai ICF finishes chair car Vande Bharat production and gears up to manufacture new sleeper Vande Bharat trains.