சென்னை: அதிமுகவை சேர்ந்த சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இன்று ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைகின்றனர். இவர்களுடன் இன்னும் ஏராளமான அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாகி உள்ளனர். இதற்கான விழா மாமல்லபுரத்தில் இன்று காலை 10 மணி நடக்கும் நிலையில் கட்சியில் சேர வந்த அதிமுகவினருக்கு சுடச்சுட உணவுகள் பரிமாற்றப்பட்டு வருகிறது.
அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் விராலிமலை சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சி விஜயபாஸ்கர், கரூர் தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று தங்களின் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைகின்றனர்.
இவர்களுடன் இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாக உள்ளனர். இதற்கான விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. ஹோட்டலின் நுழைவுப்பகுதியில் சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரின் போட்டோக்களுடன் வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன இன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் காலை முதலே அதிமுகவினர் கூட்டம் கூட்டமாக வந்தனர். இன்னும் 200 பேருந்துகள், 500 கார்களில் வந்தனர். இவர்களுக்கு சுடச்சுட இட்லி, பொங்கல், வடை வழங்கப்பட்டது.
அதன்படி முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி, முன்னாள் எம்எல்ஏக்கள் இளம்பை ஆர் தமிழ் செல்வன், எம் ராம்குமார், எஸ்பி திருஞானசம்பந்தம், எம்எஸ்ஆர் ராஜவர்மன் உள்ளிட்டோர் தவெகவில் இணைய உள்ளனர்.