ஜூன் 5க்குள் நான் வரலைனா போலீசுக்கு போயிடு! காதலனுக்கு வந்த வீடியோ.. காட்டித் தந்த ஆந்திரா சக்தி ஆப்

  • சென்னை: ஆந்திராவில் 24 வயது இளம்பெண் ஒருவரின் திடீர் மரணம், அந்த பகுதி முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ரயிலில் பயணிக்கும் போது அவர் தனது காதலனுக்கு அனுப்பிய ஒரு செல்ஃபி வீடியோ, இந்த மரணத்தின் மீது மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அவசர அவசரமாக எரிக்கப்பட்ட ஒரு உடலின் பின்னணியில் இருக்கும் அந்த மர்ம முடிச்சை, ஆந்திர காவல் துறையின் "சக்தி" செயலி எவ்வாறு அவிழ்த்தது என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், குடும்பக் கவுரவத்திற்காகப் பெற்ற மகளையே அடித்துக் கொலை செய்துவிட்டு, மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடிய தாய் மற்றும் கணவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து அந்த இளம்பெண் தனது காதலனுக்கு அனுப்பிய செல்ஃபி வீடியோவே இந்த கொடூரக் கொலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

    Advertisement

    ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோர்லிகாம் கிராமத்தை சேர்ந்தவர் தும்பாலா ஹரிணி.. 24 வயதாகிறது.. இந்த பட்டதாரி பெண்ணுக்கும், தந்தேஸ்வர ராவ் என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    ஹரிணி எடுத்த முடிவு

    ஹரிணி அரசுப் பணித் தேர்வுகளுக்காக ஹைதராபாத்தில் தங்கிப் படித்து வந்தபோது, அங்கு நாகேந்திரா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நட்பு காதலாக மாறிய நிலையில், ஹரிணி தனது கணவரைப் பிரிந்து நாகேந்திராவைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் பாலாநகர் போலீஸ் ஸ்டேஷ்னை அணுகி விவாகரத்து கோரி புகாரும் அளித்துள்ளார். மகளின் இந்த முடிவு அவரது குடும்பத்தினருக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது.. .

    Advertisement

    முன்கூட்டியே ஹரிணிக்கு வந்த டவுட்

    இதனால் விவாகரத்து விவகாரத்தை சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாக சொல்லி, ஹரிணியை அவரது குடும்பத்தினர் சொந்த ஊருக்கு அழைத்துள்ளனர். இதனால் சொந்த ஊருக்கு ரயிலில் கிளம்பினார்.. இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தினர் மீது ஹரிணிக்கு சந்தேகம் வந்தது.. அதனால் ரயிலில் போகும்போதே, தனது காதலன் நாகேந்திராவுக்கு உருக்கமான செல்ஃபி வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில், "விவாகரத்து குறித்து பேசவே என்னை ஊருக்கு கூப்பிடறாங்க.. ஆனால் எனக்கு அவங்க மீது நம்பிக்கையில்லை. ஜூன் 5ம் தேதிக்குள் நான் ஹைதராபாத் திரும்பாவிட்டாலோ அல்லது என் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்திருந்தாலோ எனக்கு ஏதோ ஆபத்து நடந்துவிட்டது என்று அர்த்தம்.. அப்போது உடனே என் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்" என்று பேசி வீடியோவையும் அனுப்பிவிட்டார்.

    Advertisement

    நள்ளிரவில் கொடூரக் கொலை

    இதனிடையே, மே 31ம் தேதி சோர்லிகாம் கிராமத்திற்கு வந்த ஹரிணி, அன்று நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோதே மிக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அதாவது அம்மா விஜயகுமாரி ஹரிணியின் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாராம்.. தாத்தா பாலு, பெரிய இரும்பு கம்பியால் ஹரிணியின் தலையில் அடித்தே கொலை செய்துள்ளார்.

    சடலத்தில் ஏற்பட்ட ரத்தக் காயங்களையும், ஆதாரம் இல்லாமல் துடைத்து எடுத்துள்ளனர்.. பிறகு இந்த விவரத்தை, கணவர் வெங்கடேஸ்வர்ராவுக்கும் தெரிவித்துள்ளனர்.

    மறுநாள் காலை, தங்கள் மகள் ஹரிணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாக சொல்லி நம்ப வைத்துள்ளனர். போலீசாருக்குத் தகவல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜூன் 2ம் தேதி அதிகாலையிலேயே உடலை அவசர அவசரமாகத் தகனம் செய்து சாம்பலாக்கியுள்ளனர். ரத்தக் கறை படிந்த துணிகளையும் முழுமையாக எரித்து ஆதாரங்களை அழித்துள்ளனர்.

    Advertisement

    அம்பலப்படுத்திய சக்தி ஆப்

    ஹரிணி சொன்னபடி ஜூன் 5ம் தேதி கடந்துவிட்டது.. அவர் ஹைதராபாத் வராததால், காதலன் நாகேந்திரா டென்ஷன் ஆனார்.. செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.. இதனால் பதட்டமடைந்த நாகேந்திரா, ஜூன் 6ம் தேதி ஆந்திர காவல் துறையின் "சக்தி" (Shakti App) செயலி மூலம் புகார் அளித்தார். ஹரிணி தனக்கு அனுப்பிய செல்ஃபி வீடியோவையும் ஆதாரமாக இணைத்தார்.

    உடனடியாக கன்ட்ரோல் ரூமிலிருந்து இதற்கான அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. ஸ்ரீகாகுளம் போலீசார் சோர்லிகாம் கிராமத்திற்கு சென்று ஹரிணி குடும்பத்தாரிடம் தீவிர விசாரணையும மேற்கொண்டார்கள்.. ஆரம்பத்தில் தங்கள் மகளுக்கு மாரடைப்பு என்றார்கள், பிறகு தற்கொலை என்றார்கள்.. இறுதியாக போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில்தான், கொலையை ஒப்புக்கொண்டனர்.

    Advertisement

    இதையடுத்து ஹரிணியின் தாய் விஜயகுமாரி, தாத்தா பாலு மற்றும் கணவர் வெங்கடேஸ்வர்ராவ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை ஹரிணி அந்த செல்ஃபி வீடியோவை அனுப்பாமல் இருந்திருந்தால், இந்த கொடூரக் கொலை ஒரு சாதாரண மாரடைப்பு மரணமாகவே மூடி மறைக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் போலீசார்....!!!!

    English Summary

    If I Don’t Return by June 5, Go to the Police!” Video Sent to Boyfriend... Andhra’s Shakti App Exposes a Chilling Twist