3 தமிழர்களை இனவெறியில் கொன்றுவிட்டார்கள்.. கர்நாடகா எல்லைகளில் வாகன மறியலுக்கு தயாரான வேல்முருகன்

  • சென்னை: ''கர்நாடகா வனத்துறை அநியாயமாக, அக்கிரமமாக, மான் வேட்டையாட வந்தார்கள் என்று பழிசுமர்த்தி 3 தமிழர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளது. 3 பேரின் உயிர்களுக்கும் தமிழக அரசு நீதி பெற்று தராவிட்டால் கர்நாடகா எல்லைகளில் வனத்துறை வாகனங்களை மறிக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம்'' என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி வேல்முருகன் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

    Advertisement

    கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் மான் வேட்டையாடிய புகாரில் 3 தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். ஹனூர் அருகே தொமியார்பாளையா கிராமத்தில் வசித்து வந்த அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகியோரை வனத்துறை சுட்டு கொன்றுள்ளது.

    Advertisement

    இவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் மான் வேட்டைக்கு செல்லவில்லை. ஆனாலும் வனத்துறையினர் அவர்களை சுட்டு கொன்று விட்டதாக கூறி அவர்களின் உறவினர்கள் கர்நாடகாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த விவகாரத்துக்கு திமுக, பாமக, கம்யூனிஸ்ட்டுகள், தேமுதிக உள்பட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். உடனடியாக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதோடு, உரிய இழப்பீட்டை3 பேரின் குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் தான் 3 தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கர்நாடகா - தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி வேல்முருகன் வார்னிங் கொடுத்துள்ளார். இதுபற்றி தி வேல்முருகன் இன்று கூறியுள்ளதாவது:
    ''நேற்றைய தினம் தமிழ்நாட்டை தாயகமாக கொண்டு தங்களின் வாழும் உரிமை, வேலை உள்ளிட்ட பிற காரணங்களுக்காக கர்நாடகா மாநிலத்துக்கு சென்று தங்கி அங்கு இருந்த 4 தமிழர்கள் தங்கள் மாடுகளை தேடி காடுகளுக்குள் சென்றனர்.

    Advertisement

    அப்போது கர்நாடகா வனத்துறை அநியாயமாக, அக்கிரமமாக, மான் வேட்டையாட வந்தார்கள் என்று அபாண்டமாக பழிசுமர்த்தி அவர்களை அருகில் அழைத்து விசாரிக்காமல் தமிழில் பேசியதை புரிந்து கொண்டு இனவெறியோடு சுட்டு படுகொலை செய்திருக்கிறது. இதில் இறந்த அந்தோணி சாமி, குமார், பீட்டர் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. இன்று அவர்கள் மிகப்பெரிய மனஉளைச்சலுக்கு ஆளாகி, கர்நாடகாவில் வாழ்கிற ஆயிரக்கணக்கான தமிழர்கள் போராடி திட்டமிட்ட படுகொலை என்று கூறியுள்ளனர்.

    இதற்கு நீதி விசாரணை வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடி இருக்கிறார்கள். போராடியவர்களை கர்நாடகா காவல்துறை காட்டுமிராண்டிதனமாக தாக்கி உள்ளது. அதில் 5 பேரை கைது செய்து காவல்நிலைய சித்ரவதைக்கு உள்ளாக்கி உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    Advertisement

    இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக வாய் திறந்து பேச வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கவும், தவறு செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய அறிவிப்பு செய்ய வேண்டும். 3 பேரின் உயிர்களுக்கும் தமிழக அரசு நீதி பெற்று தராவிட்டால் கர்நாடகா எல்லைகளில் வனத்துறை வாகனங்களை மறிக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம். எவ்வளவு பெரிய கொம்பனின் காராக இருந்தாலும் மறிப்போம்.

    போராட்டத்துக்கு தேதி எல்லாம் சொல்லிவிட்டு முன்கூட்டி எல்லாம் சொல்லமாட்டோம். இதற்கு முன்பு ஆளுநரை வெளியே வராவிடாமல் 5 மணிநேரம் முற்றுகையிட்டோம். தமிழர்களின் உயிர்கள் பற்றிய அச்சமே இல்லை. தமிழ்நாட்டில் பெரிய கட்சிகள், எதிர்க்கட்சிகள் இதுபற்றி வாய் திறக்கவேயில்லை.

    Advertisement

    தமிழக அரசு கள்ள மவுனம் காப்பது ஏன்? மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் தமிழர்களுக்கு எதிராக அநீதி நடக்கிறது. வாட்டாள் நாகராஜ் கும்பல் வன்முறையை தூண்டி விடுகிறது. இந்த நாட்டு (தமிழ்நாடு) மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ உங்களுக்கு (விஜய்) வாக்களித்து முதல்வராக்கி விட்டார்கள். கர்நாடகாவின் உங்களின் புகைப்படத்தை செருப்பால் அடிக்கிறாங்க. புகைப்படத்தை கிழிக்கிறாங்க. உங்களை அவமானப்படுத்துவது 8 கோடி தமிழர்களை அவமானப்படுத்துவதாக நாங்கள் கருதுகிறோம். நீங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. நாங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வழக்கு வாங்குகிறோம் '' என ஆக்ரோஷமாக சாடினார்.

    English Summary

    Tamilaga Vallvurimai Katchi leader T Velmurugan says that, ‘‘The Karnataka Forest Department has unjustly and brutally shot dead three Tamils, accusing them of coming to hunt deer. If the Tamil Nadu government does not secure justice for the lives of these three individuals, we will launch a protest to intercept Forest Department vehicles at the Karnataka borders,".