சென்னை மாநகராட்சியில் சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு வெளியான முக்கியமான அறிவிப்பு

  • சென்னை: குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர் இணையவழி மூலம் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் விண்ணப்பதாரர் வழங்கும் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாக இருந்தால் விண்ணப்ப செயல்முறை 15 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

    Advertisement

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், "சென்னையின் எல்லை விரிவாக்கம் காரணமாக வடசென்னை, தென்சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

    Advertisement

    மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோக குழாய்கள் அமைக்கப்பட்டு, சென்னை குடிநீர் வாரியத்தின் தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம்...எனவே, சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பித்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இணைப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.

    சென்னை குடிநீர் வாரியத்தின் https://wsc.chennaimetrowater.in/#/nc/login என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள் இணைய வழி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர் இணையவழி மூலம் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் வழங்கும் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாக இருந்தால் விண்ணப்ப செயல்முறை 15 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படும்.

    Advertisement

    சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் நிலையான குடிநீர் வழங்குவதற்கு சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, புதிதாக குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற விரும்புவோர் சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை குடிநீர் வாரியம் இன்று வெளியிட்டுள்ள இன்னொரு அறிவிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு-199, TNHB-A பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் அமைப்பதற்காக, அப்பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாய் வழித்தடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் 20.09.2026 முதல் 29.09.2026 வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மண்டலம் 13 மற்றும் 14-க்குட்பட்ட சில பகுதிகளில் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.மாற்று ஏற்பாடாக அப்பகுதிகளுக்கு செம்பரம்பாக்கம் 530 MLD குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு-199, TNHB-A பிரதான சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக அப்பகுதியில் ஏற்கெனவே உள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் 1400 மில்லி மீட்டர் விட்டமுடைய பிரதான குடிநீர் குழாயின் வழித்தடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் 20.09.2026 முதல் 29.09.2026 வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆகையால், 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டு மாற்று ஏற்பாடாக, செம்பரம்பாக்கம் 530 MLD குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படும். வேளச்சேரி ,உள்ளகரம் , புழுதிவாக்கம் , மடிப்பாக்கம் , பள்ளிக்கரணை, ஜல்லடியம்பேட்டை பகுதி பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Advertisement

    அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The Chennai Water Board has announced that applications for drinking water and sewage connections must be submitted only online.