சென்னை: லண்டனில் இருந்து சென்னை திரும்பயதுமே பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வு நடத்தி வருகிறார். இந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் மற்றும் நடந்த சில விருப்பத்தகாத சம்பவங்களால் சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதல்வர் விஜய் அதிருப்தி அடைந்துள்ளாம்.. எனவே அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் தீவிரமாக யோசித்து வருகிறாராம். யாருக்கு அமைச்சர் பதவி பறிபோக போகிறது. யாருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து விவாதங்களை சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியானது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. அரசு பொறுப்பேற்றது. அதிமுகவில் இருந்து 27 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவாக செயல்பட்டனர். இன்னும் சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த சூழலில் முதல்வர் விஜய் பதவியேற்கும் போது, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அதன் பின்னர் கூட்டணி கட்சியினர் உட்பட மற்ற அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த சூழலில் முதல்-அமைச்சர் விஜய், தனது அமைச்சரவையில் உள்ளவர்களை கடுமையாக எச்சரித்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகினால் பதவியை விட்டு உடனடியாக தூக்கிவிடுவேன் என்றே கூறியுள்ளார். அதேபோல் அமைச்சர்களாக உள்ளவர்கள் எந்த சர்ச்சையிலும் சிக்கிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அப்படி சிக்கினால் எவர் என்றும் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர்களை எச்சரித்துள்ளார். அண்மை காலத்தில் சரத், ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, பார்த்திபன், நிர்மல்குமார் உள்பட சில அமைச்சர்கள் மீது சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் அதிகமாக எழுந்து வருகின்றன. இந்த விமர்சனங்கள் ஒருபுறம் எனில் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்தது. அதில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் விஜய்க்கு திருப்திகரமாக இல்லையாம். அதேபோல் சில அமைச்சர்கள் மீது அதிருப்தியிலும் உள்ளாராம். மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தனிநபர் விமர்சனங்கள், போதைப்பொருள் பிரச்சனை போன்றவை முதல்வர் விஜய்யை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளன. அதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவமானம் நேர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு போன்ற சம்பவங்களை கேட்டு முதல்வர் விஜய் கோபம் அடைந்தாராம். இதில் அதிருப்தியை போக்க வேண்டுமென்று விரும்புகிறாராம். அதற்காக ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கை எடுக்க போகிறாராம். இதற்காக ஒவ்வொரு அமைச்சர்களின் செயல்பாடு பற்றிய விவரங்களையும் முதல்வர் விஜய், உளவுத்துறை மூலமாக வாங்கி வைத்துள்ளாராம். உளவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் யார் யாரை சந்திக்கின்றனர்? என்ன பேசுகின்றனர்? கெட்ட பெயர் வரும்படி நடந்து கொள்வது யார் என்பது உள்ளிட்ட விவரங்களை முதல்வரின் டேபிளுக்கு கொண்டு போய் உள்ளார்களாம். தற்போது இடைத் தேர்தல் நேரத்தில் அமைச்சரவை மாற்ற வேண்டும் என்று தள்ளிவைத்துள்ள முதல்வர் விஜய், இடைத்தேர்தல் முடிந்த பின்னர் சிலரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும், சிலருக்கு துறையை மாற்றவும், சிலரை சேர்க்கவும் முடிவு செய்துள்ளாராம். எனவே எம்எல்ஏக்கள் சிலர் இப்போதே அமைச்சர் பதவிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.