நவம்பர் 1 முதல் செல்போனில் அழைப்பவரின் பெயர் கட்டாயம்.. மக்கள் அறிய மத்திய அரசின் புதிய ரூல்ஸ்

  • இந்தியாவில் வரும் நவம்பர் 1 முதல் செல்போன்களில் அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண உதவும் வகையில், அழைப்பவரின் பெயரைக் கட்டாயமாகக் காட்டும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. தொலைத்தொடர்புத் துறையான டிராய், செல்போனில் அழைப்பவரின் பெயரை காண்பிக்கும் வசதியை ( Calling Name Presentation ) என்ற வசதியைச் செயல்படுத்துமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதன் மூலம், 4G மற்றும் 5G போன்ற புதிய தொழில்நுட்ப நெட்வொர்க்குகளில், அழைப்பு வரும்போது தொலைபேசி எண்ணுடன் அழைப்பவரின் பெயரும் இயல்பாகவே நவம்பர் 1 முதல் தெரியும்.

    Advertisement

    இந்தப் புதிய முறை, அழைப்பவரை அடையாளம் காண்பதை மேம்படுத்துவதுடன், உண்மையான அழைப்புகளையும் மோசடி அழைப்புகளையும் பயனர்கள் வேறுபடுத்திக் கண்டறிய உதவும் . தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது தரவுத்தளங்களில் சேமிக்கப்பட்டுள்ள சந்தாதாரர்களின் தகவல்களைப் பயன்படுத்தி பெயர்களைக் காட்ட வேண்டும் என்று DoT உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், 2G, 3G நெட்வொர்க்குகள் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளில் இந்த வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து தனியாகப் பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    புதிய அழைப்பாளர் அடையாள முறை எவ்வாறு செயல்பட போகிறது?

    உங்களுக்கு செல்போனில் அழைப்பு வரும்போது, உங்கள் தொலைபேசித் திரையில் உங்களை அழைப்பவரின் தொலைபேசி எண்ணும் பெயரும் காட்டப்படும். அந்த எண், அழைப்பைப் பெறுபவரின் தொடர்புப் பட்டியலில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டிருந்தால், அதில் உள்ள பெயரே காட்டப்படும் என்று டிராயின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த எண் தொடர்புப் பட்டியலில் சேமிக்கப்படவில்லை என்றால், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அமைப்பில் அழைப்பவர் பதிவு செய்துள்ள பெயர் காட்டப்படும்.
    சர்வதேச அழைப்புகள் வரும்போது, தொலைபேசித் திரையில் "International Call" என்று கண்டிப்பாக காட்டப்படும்.

    இந்த வசதையைச் செயல்படுத்த, ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரும் சந்தாதாரர்களின் பெயர்களையும் அவர்களது தொலைபேசி எண்களையும் இணைக்கும் தரவுத்தளத்தை உருவாக்கி பராமரிக்க வேண்டும் என்றும் அழைப்பைப் பெறும் தொலைத்தொடர்பு நிறுவனமானது, தேவையான தகவல்களைப் பெற்று, அழைப்பு வரும்போது திரையில் காட்ட வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    CNAP வசதி பயனர்களின் தனியுரிமையைப் பாதிக்குமா?

    தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. தகவல் கோருதல் மற்றும் பதிலளித்தல் முறையின் மூலம் பெறப்படும் அழைப்பாளர்களின் பெயர்களை, அழைப்பு முடிந்த பிறகு நிறுவனங்கள் சேமித்து வைத்திருக்கக் கூடாது. Calling Line Identification Restriction (CLIR) வசதியைச் செயல்படுத்தியுள்ள சந்தாதாரர்களுக்கு மட்டும் இந்த நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அவர்களது பெயர்கள் Calling Line Identification Restriction முறையில் பட்டியலிடப்படாது.

    நிறுவனங்கள் வேறு பெயரைக் காட்ட முடியுமா?

    நிறுவனங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான இணைப்புகளைப் பயன்படுத்துபவர்கள், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சந்தாதாரர் தரவுத்தளத்தில் உள்ள பெயருக்குப் பதிலாக வேறு பெயரைக் காட்ட அனுமதிக்கப்படலாம். ஆனால், அந்தப் பெயருக்கு ஆதாரமாகப் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை அல்லது சரக்கு மற்றும் சேவை வரி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட வணிகப் பெயர் இருக்க வேண்டும்.

    Advertisement

    விரும்பிய பெயரையும் அதற்கான ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டியது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பொறுப்பாகும். அழைப்பின்போது காட்டப்படும் தங்களது வணிகப் பெயரைப் புதுப்பிக்க விரும்பும் சந்தாதாரர்கள் அதற்கான கோரிக்கையை தொலைப்பேசி நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    பியூட்டிஷியன் போட்ட டிராமா.. ஆடைகளுக்கு அடியில் செல்போன்.. அதில் ஒரு மெசேஜ்.. அசிங்கமா சிக்கிட்டாரு

    CNAP முறையை அரசு ஏன் அறிமுகப்படுத்துகிறது?

    சமீபத்திய மாதங்களில் 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 2024-ல் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய பரிந்துரைகளிலும் இந்த வசதி வர வேண்டும் என்று இடம்பெற்று இருந்தது. 2025 அக்டோபரில், CNAP வசதையை இயல்பாகவே அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு டிராய் ஒப்புதல் அளித்தது. முன்னதாக, பயனர்கள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே இந்த வசதையைச் செயல்படுத்த வேண்டும் என்று டிராய் பரிந்துரைத்திருந்தது.

    Advertisement

    தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள பெயர்களை மட்டும் நம்பியிருக்காமல், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் உள்ள சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர் தகவல்களைப் பயன்படுத்தி, அழைப்பவர்களை அடையாளம் காணும் வசதையை அதிகமானோருக்குக் கிடைக்கச் செய்வதே மத்திய அரசின் நோக்கமாகும். இந்தத் திட்டம் வரும் நவம்பர் 1 முதல் அறிமுகப்படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.

    English Summary

    Starting November 1, the Central Government of India is set to introduce a system that will mandate the display of the caller's name for incoming calls on mobile phones, helping users identify calls from unknown numbers. Here are the new rules from the Central Government that the public should be aware of.