சென்னை: சுதந்திர தினத்தையொட்டி நாளை சென்னை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் மாநில ஆளுநர்கள் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டு வரும் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல் முதலாக நாளை அவர் பங்கேற்பார் என்ற நிலையில் தேநீர் விருந்து இல்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்என் ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு தமிழகத்துக்கு தனியாக ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநர் தான் உள்ளார். கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார். இவர் தான் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் உள்ளிட்டவை செய்து வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மாநில ஆளுநர்கள் அங்குள்ள ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். தேசத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலும், அரசு, அரசியல் கட்சியினர் உடன் ஆளுநர் மாளிகைக்கு இருக்கும் உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் தேநீர் விருந்து என்பது விவாதத்தை கிளப்பும். எந்த கட்சியினர் பங்கேற்கின்றனர்? எந்த கட்சியினர் பங்கேற்கவில்லை என்பது உன்னிப்பாக கவனிக்கப்படும். ஆர்என் ரவி ஆளுநராக இருந்தபோது அவருடனான மோதல் காரணமாக திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தேநீர் விருந்தை புறக்கணித்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் நாளை நடக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் விஜய் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழகத்தில் நாளை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தேநீர் விருந்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளாவின் ஆளுநராக இருக்கிறார். இதனால் நாளை அவர் கேரளா செல்கிறார். அங்கும் தேநீர் விருந்து விழா நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்துக்கான தேநீர் விருந்து கிடையாது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் தேநீர் விருந்து ஏன் நாளை கிடையாது? என்பது பற்றியும், மாற்று தேதியில் தேநீர் விருந்து வழங்கப்படுமா? என்பது ஆளுநர் மாளிகை எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.
ஆனால் திடீரென்று தேநீர் விருந்து இல்லை என்று தமிழக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளா செல்ல உள்ளதால் நாளை தேநீர் விருந்து இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.