சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக, சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்கிறார்.
SIR விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர், மாணவர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தவெக, விசிக, மதிமுக, ஐயுஎம்எல், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெற்றிருப்பதாக காங்கிரஸ் மற்றும் தவெக தலைவர்கள் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், முதல்முறையாக இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தவெக பங்கேற்கிறது. தவெக சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், தவெக கொள்கை பரப்புச் செயலாளருமான ராஜ்மோகன் பங்கேற்க இருக்கிறார். தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தவெக வலுவாக குரல் கொடுக்கவில்லை, விஜய் இதுவரை ஒரு எதிர்ப்பைக் கூட பதிவு செய்யவில்லை என்ற விமர்சனங்கள் உள்ள நிலையில், இன்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தவெக பங்கேற்பது கவனம் பெற்றுள்ளது.