30000 டன்.. இந்திய வீடுகளில் தூங்கும் பெரிய பூதம்! எழுப்பிவிட்டால் என்ன நடக்கும்? சீக்ரெட் பிளான்!

  • சென்னை: இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்லாது, குடும்ப கவுரவமாகவும், தலைமுறையாக பாதுகாக்கப்படும் சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இதே தங்கம்தான் இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய சிக்கலாகவும் மாறியுள்ளது. இந்திய மக்களிடம் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் டன் வரை தங்கம் இருப்பதாகவும், தற்போதைய சந்தை மதிப்பின்படி அதன் மதிப்பு சுமார் 5 டிரில்லியன் அமெரிக்க டாலரை (5 லட்சம் கோடி டாலர்) தாண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    இவ்வளவு பெரிய அளவில் தங்கம் நாட்டுக்குள்ளேயே இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா புதிதாக ஆயிரக்கணக்கான டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதற்காக பில்லியன் கணக்கான டாலர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றன.

    Advertisement

    கோல்டு மானிடைசேஷன்

    இது இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை அதிகரிப்பதோடு, ரூபாயின் மதிப்பிலும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த முரண்பாட்டை சரி செய்யும் முயற்சியாக மத்திய அரசு மீண்டும் "கோல்டு மானிடைசேஷன் ஸ்கீம்" (Gold Monetisation Scheme) என்ற திட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை வங்கிகள் மட்டுமின்றி நகைக்கடைகளையும் இதில் இணைத்து, மக்களிடம் இருக்கும் தங்கத்தை பொருளாதார பயன்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப்படுகிறது.

    உணர்வுப்பூர்வமான சொத்து

    இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆசை என்பது நேற்றோ இன்றோ உருவானது அல்ல. திருமணம், விழாக்கள், குழந்தைகள் பிறப்பு, பண்டிகைகள் என எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. பல குடும்பங்கள், தங்கத்தை வெறும் முதலீடாக மட்டும் பார்க்காமல் உணர்வுப்பூர்வமான சொத்தாகவே பார்க்கப்படுகிறது. அதனால்தான் விலை உயர்ந்தாலும் வாங்குவதை மக்கள் நிறுத்துவதில்லை.

    Advertisement

    தங்க இறக்குமதி

    ஆனால் இதுதான் அரசுக்கு கவலையாக மாறியுள்ளது. 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் 71.9 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்ததால், இறக்குமதி செய்யப்படும் அளவு குறைந்திருந்தாலும், செலவாகும் தொகை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
    இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையில் பெட்ரோலியப் பொருட்களும் தங்கமும் சேர்ந்து பாதிக்கும் மேல் பங்கு வகிக்கின்றன. அதாவது, கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகமாக வெளியே அனுப்பும் பொருள் தங்கம்தான்.

    ஆர்பிஐ

    இதற்குத் தீர்வு காணும் நோக்கில் கடந்த 2015-ம் ஆண்டு கோல்டு மானிடைசேஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் தங்கத்தை வங்கியில் ஒப்படைத்தால் அதற்கு வட்டி கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. வங்கிகள் அந்த தங்கத்தை சுத்திகரித்து, மீண்டும் நகைத் துறைக்கு வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 2024 இறுதி வரை வெறும் 31 டன் தங்கம் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு வந்தது. நாடு முழுவதும் சுமார் 5,700 பேர் மட்டுமே இதில் முதலீடு செய்தனர்.

    Advertisement

    வங்கி நடைமுறை

    இதற்கு பல காரணங்கள் இருந்தன. குறிப்பாக தலைமுறை தலைமுறையாக வீட்டில் இருந்த நகைகளை உருக்க மக்கள் விரும்பவில்லை. திருமண நகைகள், முன்னோர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் மீது மக்களுக்கு உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருந்தது. மேலும், கிடைத்த வட்டியும் மிகவும் குறைவாக இருந்தது. வங்கி நடைமுறைகளும் சிக்கலாக இருந்ததால் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    மத்திய அரசு

    இந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு தற்போது திட்டத்தில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக நகைக்கடைகளை இதில் இணைக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளை விட தங்களுக்கு பழக்கமான நகைக்கடைகளையே அதிகம் நம்புகின்றனர். எனவே நகைக்கடைகள் மூலமாக தங்கத்தை சேகரித்தால் மக்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது.

    Advertisement

    மின்னணு தங்கச் சான்றிதழ்

    இதன் மூலம் மக்கள் கொடுக்கும் தங்கம் சுத்திகரிக்கப்பட்டு, மின்னணு தங்கச் சான்றிதழ்களாக (Electronic Gold Receipts) மாற்றப்பட்டு, மீண்டும் நகை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடனாக வழங்கப்படும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து புதிய தங்கம் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஓரளவு குறையலாம். இதற்கிடையே இந்தியாவில் தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.

    334 டன்

    முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ், ஐஐஎஃப்எல் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களிடம் அடமானமாக உள்ள தங்கத்தின் அளவு 334 டன்னை தாண்டியுள்ளது. உலகின் பல நாடுகளின் மத்திய வங்கிகளில் இருக்கும் தங்க இருப்பை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. மக்கள் தங்கத்தை முழுமையாக விற்க தயாராக இல்லாவிட்டாலும், தேவையான நேரத்தில் அதனை பொருளாதார பயன்பாட்டுக்கு கொண்டு வர தயங்கவில்லை.

    Advertisement

    மொத்த உள்நாட்டு உற்பத்தி

    எனவே, எளிமையான நடைமுறை மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்பட்டால் புதிய தங்க சேமிப்பு திட்டத்திற்கும் வரவேற்பு கிடைக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நிபுணர்களின் கணிப்புப்படி, இந்திய குடும்பங்களிடம் இருக்கும் தங்கத்தில் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார பயன்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், 2047-க்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் தங்க இறக்குமதி குறையும், அந்நியச் செலாவணி சேமிக்கப்படும், ரூபாயின் மீது இருக்கும் அழுத்தமும் குறையும்.

    5 டிரில்லியன் டாலர்

    எனவே, இந்தியாவின் மிகப்பெரிய "தூங்கிக் கொண்டிருக்கும் சொத்து" என்று அழைக்கப்படும் இந்த 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை, பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடாக மாற்ற முடியுமா என்பதே தற்போது மத்திய அரசின் முக்கிய சவாலாக மாறியுள்ளது. இந்த முறை நகைக்கடைகளின் பங்களிப்புடன் வரும் புதிய திட்டம் வெற்றி பெறுமா என்பது வரும் மாதங்களில் தெரியவரும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

    English Summary

    India plans to revive gold monetisation by involving jewellers to reduce imports and unlock idle household gold.