7.8% ஜிடிபி வளர்ச்சி பொய்? இந்தியாவின் உண்மை வளர்ச்சி 2.6% தான்.. முன்னாள் நிதித்துறைச் செயலாளர்

  • சென்னை: மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட தகவலின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% என்ற அபார வளர்ச்சியை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் 7% கணிப்பை விட அதிகம்.

    Advertisement

    உற்பத்தித் துறை 9.2%, சேவைத் துறை 10%, மூலதன முதலீடு 11.9% என அனைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதாகவும், உலகிலேயே அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா நீடிப்பதாகவும் அரசு கொண்டாடுகிறது.

    Advertisement

    ஆனால், இந்த 7.8% கொண்டாட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய கணக்கு தில்லுமுல்லு ஒளிந்திருப்பதாக வெட்டவெளிச்சமாக்கியுள்ளார் இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கர்க. ஊடகங்களில் அவர் முன்வைத்த ஆய்வின்படி, இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 7.8% கிடையாது, வெறும் 2.6% மட்டுமே!

    பொதுவாக ஜிடிபியை அளவிட இரு வழிகள் உண்டு. ஒன்று பணவீக்கத்தைக் கழித்து கணக்கிடும் நிஜ ஜிடிபி, மற்றொன்று தற்போதைய சந்தை விலையில் பண மதிப்பை வைத்து கணக்கிடும் நாமினல் ஜிடிபி. இதில் அரசு செய்துள்ள அடித்தள திருத்தம் அதாவது Base Revision தான் அனைத்து மாயைக்கும் காரணம் என்கிறார் கர்க்.

    Advertisement

    கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் தற்போதைய சந்தை விலையிலான நாமினல் ஜிடிபி சுமார் 86 லட்சம் கோடி ரூபாய் என அரசு முன்பு கணக்கிட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த பழைய கணக்கை திடீரென 80 லட்சம் கோடி ரூபாயாக அரசு குறைத்து மாற்றியெழுதியுள்ளது.

    கடந்த ஆண்டின் வளர்ச்சியை 6.9% என பின்னோக்கி குறைத்ததால், இந்த ஆண்டுக்கான வளர்ச்சி தானாகவே 7.8% என பெரிய அளவில் உயர்ந்து நிற்கிறது. சுருக்கமாகச் சொன்னால், சென்ற ஆண்டு மதிப்பெண்ணைக் குறைத்து காட்டி, இந்த ஆண்டு மாணவன் அதிக முன்னேற்றம் அடைந்துவிட்டதாகச் சொல்வது போன்றது இது. இந்த திடீர் மாற்றத்தைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் நாமினல் வளர்ச்சி படுமோசமாக வீழ்ந்திருக்கும். எதற்காக கடந்த ஆண்டின் மதிப்பீட்டில் இவ்வளவு பெரிய திருத்தத்தை அரசு செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்புகிறார் கர்க்.

    Advertisement

    அரசுத் தரவுகளின்படி வேளாண்மை 3.6% மிதமான வளர்ச்சியையும், சுரங்கத் துறை 2.4% சரிவையும் சந்தித்துள்ளன. உற்பத்தித் துறை 9.2% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், பழைய கணக்கீட்டோடு ஒப்பிடும்போது உற்பத்தித் துறை மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது. அதேநேரம், வேளாண்மை மற்றும் சுரங்கத் துறைகள் முன்பு நினைத்ததை விட ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

    அரசு போடும் பாலங்கள், சாலைகள், உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவை கர்க் சந்தேகிக்கவில்லை. அரசு உண்மையில் மூலதனச் செலவை அதிகரித்துள்ளது உண்மைதான். பழைய கணக்கீட்டின்படி பார்த்தாலும் உள்கட்டமைப்புச் செலவுகள் 15 சதவீதத்திற்கும் மேல் வலுவாகவே உயர்ந்துள்ளன.

    Advertisement

    மக்களின் வாங்கும் சக்தி சரிவு

    ஆனால், கர்க்கின் மிகப்பெரிய கவலையும் எச்சரிக்கையும் சாதாரண மக்களின் வாங்கும் சக்தி மீதுதான் உள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு செய்யும் செலவுக்கான பழைய கணக்கீட்டையும் அரசு பெருமளவில் குறைத்துள்ளது. கர்க்கின் கணக்கீட்டின்படி, மக்கள் இன்று செய்யும் செலவை அரசு முன்பு வெளியிட்ட கடந்த ஆண்டின் உண்மையான செலவுக் கணக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அதன் வளர்ச்சி 7.1% உயர்வுக்குப் பதிலாக மைனஸில் போய்விடும் அபாயம் உள்ளது. மக்கள் வாங்கும் சக்தி உண்மையில் சுருங்கி வருகிறது என்றால், நாடு எப்படி வலுவாக வளர முடியும்?

    Advertisement

    எளிமையான உதாரணம்

    நாட்டு மக்களின் சராசரி வருமானம் என்பது சில தொழிலதிபர்களின் சொத்துக் கணக்கு அல்ல. இதை மிக எளிய உதாரணத்தின் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம். லட்சக்கணக்கான ஏழை மக்கள் அமர்ந்திருக்கும் ஒரு விளையாட்டு மைதானத்திற்குள் திடீரென உலகப் பெரும் பணக்காரர்களான எலான் மஸ்க்கும், ஜெஃப் பெசோஸும் நுழைகிறார்கள் என வைத்துக்கொள்வோம். இப்போது அந்த மைதானத்தில் உள்ளவர்களின் 'சராசரி சொத்து மதிப்பு' பல நூறு கோடிகளாக எகிறிவிடும். ஆனால், அங்கு அமர்ந்திருக்கும் சாதாரண மனிதனின் பாக்கெட்டில் ஒரு டீ குடிக்கக் கூட காசு கூடியிருக்காது. 7.8% என்ற சராசரி ஜிடிபி வளர்ச்சியும் இதே நகைச்சுவை போன்றதுதான்.

    அரசு புள்ளிவிவரங்களை அழகுபடுத்துவதை விட்டுவிட்டு, நாட்டின் எளிய நடுத்தர மக்களின் பாக்கெட்டுகளிலும் வீடுகளிலும் இருக்கும் பொருளாதார பலவீனத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். அடித்தட்டு மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும் உண்மையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதே நாட்டை உண்மையான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதே கர்க் விடுக்கும் எச்சரிக்கை.

    English Summary

    India’s 7.8% GDP Growth a Statistical Illusion? Former Finance Secretary SC Garg Explains