இந்தியாவில் அடுத்த ஆண்டு டெங்கு தடுப்பூசி அறிமுகம்! 4 வகைகளுக்கும் என்ட் கார்டு! அப்போ Dengue கொசு?

  • சென்னை: அடுத்த ஆண்டு, 2027ஆம் ஆண்டு மத்தியில் இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசியான "கியூடெங்கா (Qdenga)" அறிமுகப்படுத்தப்படுகிறது. இது 4 வகையான டெங்கு காய்ச்சல்களுக்கும் தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம்.

    Advertisement

    ஏடீஸ் எனும் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இது பெரும்பாலும் பருவமழை காலத்திற்கு பிறகு பருவமழையின் போதும் பரவுகிறது. டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்தால் உயிரிழப்பை கூட ஏற்படுத்தும்.

    Advertisement

    தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் அதீதமாக இருந்தால் உடனே டெங்கு காய்ச்சல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதில் டெங்கு இருப்பது உறுதியாகிவிட்டால், ரத்த தட்டுக்களின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

    இதன் அளவு 1 லட்சத்திற்கு கீழ் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கென பிரத்யேகமாக எந்த மருந்து மாத்திரையும் இல்லை. ஆன்டிபயாடிக்கும் , காய்ச்சலுக்கான மருந்தும், நீர் ஆகாரங்களும் கொடுக்கப்படுகிறது.

    டெங்கு காய்ச்சல் எப்படி பரவும்?

    டெங்கு காய்ச்சல் ரத்தக் கசிவை கொடுக்கும் என்பதால் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். இந்த டெங்கு காய்ச்சலை ஏடீஸ் எனும் கொசுக்கள்தான் ஏற்படுத்துகின்றன. இவை பகலில் கடிக்கும். இவைதான் டெங்கு காய்ச்சல் வைரஸ்களை சுமந்து வந்து மனிதர்களுக்கு செலுத்துகின்றன.

    Advertisement

    அதிலும் இந்த ஏடீஸ் கொசுக்கள் தேங்கியிருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். எனவே வீட்டை சுற்றிலும் உள்ள பூத்தொட்டிகள், பிளாஸ்டிக் டயர்கள், காலி பாட்டில்கள், ஆட்டுக்கல்கள், காலி பக்கெட்டுகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி போடப்பட்டது போல், உயிரிழப்பை ஏற்படுத்தும் டெங்கு காய்ச்சலுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    அந்த வகையில் தற்போது ஜப்பான் நாட்டின் டேகேடா ஃபார்மாகூட்டிக்கல் (Takeda Pharmeceuticals) நிறுவனமும் இந்தியாவின் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் டெங்கு தடுப்பூசியை விநியோகிக்கவுள்ளது.

    Advertisement

    இதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஜூலை மாதம் அங்கீகரித்தது. இந்த தடுப்பூசியை 4 வயது முதல் 60 வயது வரை உள்ள நபர்களுக்கு செலுத்தலாம்.

    இந்த தடுப்பூசியைச் செலுத்துவதற்கு முன்பு, அந்த நபர் ஏற்கெனவே டெங்குவால் பாதிக்கப்பட்டாரா இல்லையா என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டிய அவசியமில்லை. இந்த ஊசியை 3 மாதங்களுக்கு ஒரு முறை இரு அளவுகளாக (டோஸ்), அதாவது தலா 0.5 மில்லி லிட்டர் செலுத்தலாம்.

    கியூடெங்கா எப்படி செயல்படுகிறது?

    டெங்கு வைரஸ்கள் DENV-1, DENV- 2, DENV- 3, DENV- 4 என நான்கு முக்கிய வகைகளை கொண்டுள்ளது. பலவீனப்படுத்தப்பட்ட DENV-2 என்ற வைரஸை கொண்டு மற்ற 3 வகைகளின் புரதங்களை இணைந்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. இது உடலில் செலுத்தியதும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி, 4 வகையான டெங்கு வைரஸ்களையும் எதிர்த்து போராடும்.

    Advertisement

    இந்த டெங்கு காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் டெங்குவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 80 சதவீதம் தடுக்கிறது. அது போல் டெங்கு பாதிப்பை 60 சதவீதம் வரை தடுக்கிறது என்கிறார்கள். இந்த ஊசி உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இது 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு செயல்திறனும் நன்றாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

    தடுப்பூசியில் ஏன் DENV-2?

    4 டெங்கு வகைகளில் DENV- 2 என்பதுதான் மிகவும் ஆபத்தானது. இதுதான் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். காது, மூக்கு, பல் ஈறுகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரத்தக் கசிவை ஏற்படுத்தும். DENV 1, 4 ஆகிய வகைகள் காய்ச்சல், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும். குறைந்த ஆபத்துடையவை. DENV-3 என்பதும் சற்று மோசமானதுதான், ஆனாலும் DENV -2 தான் வேகமாக பரவக் கூடும். எனவே இந்த வைரஸை உடலில் செலுத்திதான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்க முடியும்.

    Advertisement

    இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

    ஜப்பான் நிறுவனமும் இந்தியாவின் ரெட்டீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் கியூடேங்கா தடுப்பூசியானது வரும் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு கிடைக்கும். கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 1,13,450 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 95 பேர் இறந்துவிட்டனர். எனவே இந்த தடுப்பூசி விற்பனைக்கு வந்தால் டெங்கு பாதிப்பும் உயிரிழப்பும் கணிசமாக குறையும் என்கிறார்கள்.

    தடுப்பூசி என்ன செய்யும்?

    தடுப்பூசி டெங்கு வைரஸ் நம் உடலினுள் நுழையாதபடி பாதுகாக்கும். ஆனால் அவற்றால் தேங்கியிருக்கும் தண்ணீரையும் கொசுக்களின் இனப்பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாது. இதற்கு பொது சுகாதார நிர்வாகமும் மக்களும்தான் போராட வேண்டும்.

    எத்தனை ஊசிகள் தயாரிப்பு?

    டேகேடா நிறுவனமானது உலகம் முழுவதும் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்க முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் டெங்கு காய்ச்சல் கணிசமாக உயர்ந்துள்ளதாகவே டேகேடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தடுப்பூசி விலை எவ்வளவு?

    இந்தியாவில் இனிதான் மார்கெட்டுக்கு இந்த தடுப்பூசி வருகிறது என்பதால் இதன் விலை என்னவாக இருக்கும் என தெரியவில்லை. எனினும் ஜெர்மனி, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒரு டோஸின் விலை இந்திய மதிப்பில் ரூ 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அது போல் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் ஒரு டோஸ் ரூ 3000 முதல் 6000 வரையும் பிரேசில் போன்ற நாடுகளில் மானிய விலையிலும் இலவசமாகவும் இந்த ஊசி கிடைக்கிறது. இந்தியாவில் இந்த தடுப்பூசி ரூ 1500 முதல் ரூ 3000 வரை விற்பனை செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் மார்க்கெட்டுக்கு வந்து விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே அதன் உண்மை விலை தெரியவரும்.

    English Summary

    India's first Dengue vaccination Qdenga will be introduced in 2027 mid. It will be manufactured by Reddy's company with the help of Japan's Takeda pharmaceuticals.