நாட்டின் முதல் வந்தே பாரத் சரக்கு ரயில்.. சென்னை ICF தயாரித்த 130 கி.மீ. வேகம்.. என்னென்ன வசதிகள்?

  • சென்னை: சென்னை பெரம்பூர் ஐசிப் தொழிற்சாலை, நாட்டின் முதல் வந்தே பாரத் சரக்கு ரயிலை உருவாக்கி உள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் கதிரூ - மஹ்பூ ரயில் நிலையங்களுக்கு இடையே மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் வெற்றிகரமாக இயக்கி சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் உள்ள ஸ்பெஷாலிட்டிகள் என்ன தெரியுமா? ரயிலின் அமைப்பு எப்படி உள்ளது தெரியுமா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    இந்திய ரயில்வே துறையில் மிகப்பெரிய சாதனை ஒன்று தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ளது.. பயணிகளின் வரவேற்பை ஆரம்பம் முதலே பெற்று வரும் வந்தே பாரத் ரயில்தான், மீண்டும் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது..

    Advertisement

    சரக்கு வந்தே பாரத் ரயில்

    அந்த லிஸ்ட்டில், இப்போது நாட்டின் சரக்கு போக்குவரத்து துறையிலும் களமிறங்க தயாராகிவிட்டன. சென்னை பெரம்பூரில் உள்ள புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ICF) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட நாட்டின் முதல் "வந்தே பாரத் சரக்கு ரயில்" தனது முதல்கட்டச் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தின் கதிரூ மற்றும் மஹ்பூ ஆகிய பகுதிகளுக்கு இடையே இதற்கெனவே அமைக்கப்பட்ட ஸ்பெஷல் பாதையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. சில வாரங்களாகவே ரயில்வே வல்லுநர்களின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த சோதனையில், வந்தே பாரத் சரக்கு ரயில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து இந்த திறனை நிரூபித்துள்ளது.

    Advertisement

    மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம்

    இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாகும். கடந்த மார்ச் மாதமே இந்திய ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த ரயில், அதற்கு பிறகுதான் கள ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது.

    மொத்தம் 16 பெட்டிகளை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்தச் சரக்கு ரயிலில் சுமார் 264 டன் எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியுமாம். அதேபோல காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற எளிதில் கெட்டுப்போகும் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லக் கூடிய ஏசி வசதிகள் இந்த ரயிலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    ஐசிஎப் தயாரித்த ரயில் - என்னென்ன வசதிகள்

    அதுமட்டுமல்ல, பொருட்களை விரைவாக ஏற்றி இறக்குவதற்கு வசதியாக, தரைப்பகுதியில் ஆட்டோமெடிக் ரோலர்கள் மற்றும் அகலமான ஆட்டோமெடிக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரயிலின் பாதுகாப்பை பொறுத்தவரை, இந்திய ரயில்வேயின் உள்நாட்டுத் தொழில்நுட்பமான "கவச்" தானியங்கி விபத்து தடுப்பு அமைப்பு இதில் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 24 மணி நேரமும் கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள், தீ அணைக்கும் கருவிகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இ-காமர்ஸ் நிறுவனங்களின் பார்சல்களை வெகு சீக்கிரத்திலேயே கொண்டுபோய் சேர்த்துவிடக்கூடிய பெஸ்ட் சாய்ஸாக இது அமையும்.

    வழக்கமான சரக்கு ரயில்களைவிட இந்த ரயில் வேகமாக செல்லும் என்பதால், டெல்லி - மும்பை போன்ற நீண்ட தூர வழித்தடங்களில் பயண நேரம் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை குறையும். நம்ம சென்னை மண்ணில் உருவான இந்த தொழில்நுட்ப சாதனை, நாட்டின் வர்த்தக வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், இந்திய ரயில்வேயின் வருவாயையும் பல மடங்கு உயர்த்ததும் என்றே தெரிகிறது.. சூப்பர்ல..!!!

    English Summary

    India's First Vande Bharat Cargo Train.. Chennai ICF-Built Rail Hits 130 kmph in Trial