சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இல்ல திருமண விழாவில் ஒரே மேடையில் முதல்வர் விஜய்யும் தொழிலதிபர் கௌதம் அதானியும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் அனில் ரெட்டியின் மகள் ஷ்ரேயா ரெட்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள சொகுசு விடுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் இதில் திரிஷாவும் கலந்து கொண்டார். விஜய்யின் தாய் ஷோபா உள்ளிட்டோர் இந்த விழாவுக்கு வருகை தந்தனர். ஷோபாவை விஜய் கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் கௌதம் அதானியும் வந்திருந்தார். அவர் முதல்வர் விஜய், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார். இந்த புகைப்படம், வீடியோ வைரலானது. நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அதானி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்புறவுடன் இருந்து வரும் நிலையில் தென்னிந்தியாவில் முக்கிய அரசியல் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டியின் இல்ல திருமணத்திற்கு வந்திருந்ததுடன் அங்கு முதல்வர் விஜய்யுடன் பேசிக் கொண்டிருந்தது, அரசியல் மற்றும் தொழில் ரீதியாக கவனத்தை பெற்றுள்ளது. இந்த விழாவுக்கு வந்த விஜய், தனது சொகுசு காரில் தனியாகவே வந்திருந்தார். எனினும் மேடையில் மணமக்களுடன் மேடை ஏறும் போது விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக சென்று வாழ்த்தினர். இந்த திருமண வரவேற்பு விழாவை முன்னிட்டு ஹோட்டல் வளாகம், சாலைகளில் மிகவும் பெரிய பெரிய கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு அறப்போர் இயக்கத்தினர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு மிக பிரமாண்டமான கட் அவுட்கள் விஜய்க்கும் ஜெகனுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது மழைக்காலம் என்பதால் காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் கட்அவுட்கள் சரிந்தால் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என்பதால் அந்த கட் அவுட்களை நீக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவை நீக்கப்பட்டன. விஜய் இந்த நிகழ்ச்சிக்கு பழுப்பு நிற உடையிலும், திரிஷா இளஞ்சிவப்பு நிற புடவையிலும் வந்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடந்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி சுரேஷ் இல்ல திருமண விழாவிலும் விஜய், திரிஷா கலந்து கொண்டிருந்தனர். அது போல் முதல்வராக பதவியேற்றதும் அஜித்தின் தாய் மறைவிற்கும் விஜய்யுடன் திரிஷா வந்திருந்தார். அது போல் ஜெகன் மோகன் ரெட்டியின் மற்றொரு உறவினரின் திருமண நிகழ்வில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர் ஜெகன்மோகன் ரெட்டி. கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் இவரது கட்சி படுதோல்வி அடைந்தது. எனினும் 2019 ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் வெல்ல இவர் எடுத்த முன்னெடுப்புகள் இன்றும் பேசப்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் கட்சி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.