சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் ₹1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என்ற அரசின் அரசாணை வெளியான நாள் முதல், கடலோரப் பகுதிகள் கொந்தளித்துக் கிடக்கின்றன.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், முள்ளிக்குப்பம், நொச்சிக்குப்பம் என பல கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், "எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கி, மீன் விற்பனையை முடக்கி, எங்களை இங்கிருந்து விரட்டப் பார்க்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி, செப்டம்பர் 21-க்குள் அரசாணையை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சூழலில், பட்டினப்பாக்கம் திட்டத்திலிருந்து அரசு பின்வாங்கத் தயாராகிவிட்டதாகவும், இதையும்கூட ஒரு மிகப்பெரிய அரசியல் லாபமாக மாற்ற தவெக தலைமை கணக்கு போட்டு வருவதாகவும் தலைமைச் செயலக மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிக வலுவான தகவல்கள் கசிந்துள்ளன. அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களின்படி, இந்த விவகாரத்தில் தவெக தலைமையின் திட்டம் மிகவும் விசித்திரமானது. முதலில் மக்களின் கருத்துக்களைக் கேட்காமல், எதிர்ப்பு வரும் என்று தெரிந்தே அவசர அவசரமாக ஒரு அரசாணையை வெளியிடுவது.. பின்னர் மக்கள் கொந்தளித்து வீதிக்கு வரும்போது, முதலமைச்சரே நேரில் சென்று, "மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தலைவன் விஜய்.. மீனவர்களின் குரலைக் கேட்டு, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுகிறேன்" என்று ஒரு அறிவிப்பை வெளியிட வைப்பதுதான் இந்த வியூகத்தின் அடிநாதம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம், ஆரம்பத்தில் நடந்த தவறான திட்டமிடலை மறைத்துவிட்டு, முதலமைச்சர் விஜய்யை "ரியல் சுறா" "மீனவர்களின் காப்பான்" "உங்க வீட்டு பிள்ளை" "மீனவர்களின் காவலன்", "மக்களின் மனதை அறியும் எளிய தலைவர்" என்று ஒரு புதிய பிம்பத்தைக் கட்டமைக்க தவெகவின் வியூக வகுப்பாளர்கள் களம் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக அரசியலில் எதிர்ப்புகள் வரும்போது திட்டங்களைத் திருத்திக்கொள்வது வழக்கம். ஆனால், இங்கு நடப்பது வேறு மாதிரியான ஒரு தந்திரம் என அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்: திட்டமிடப்படாத அறிவிப்பு: 2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட, எழில் கொஞ்சும் அதே வேளையில் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் மென்மையான கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் (CRZ) ₹1,200 கோடியில் 15 அடுக்கு மாடி கட்டிடம் கட்ட அரசு ஏன் முதலில் திட்டமிட வேண்டும்? அருகில் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் வாழ்வதும், லூப் சாலையில் தினமும் மீன் சந்தை நடப்பதும் அரசுக்குத் தெரியாதா? எதிர்ப்பை வளர விடுவது: அரசாணை வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியவுடன், உடனடியாக அதை விளக்குவதோ அல்லது மாற்று வழி காண்பதோ செய்யாமல், விவகாரத்தை ஒரு வாரத்திற்கும் மேலாகப் பேசுபொருளாகவே வைத்திருப்பது. முடிவில் மீட்பர் நாடகம்: இறுதியாக ஒரு சந்திப்பை நடத்தி அல்லது ஊடகங்கள் முன் தோன்றி, "மக்களுக்காகத் திட்டமே தவிர, திட்டத்திற்காக மக்கள் இல்லை" என்று சினிமா பாணியில் பேசிவிட்டு திட்டத்தைத் திரும்பப் பெறுவது. தேவையில்லாத ஒரு குழப்பத்தை அரசே தன் கையால் உருவாக்குகிறது.. பின்னர் மக்களே போராடித் தடுத்த பிறகும், "நானே உங்கள் குரலைக் கேட்டு இறங்கி வந்துவிட்டேன்" என்று கூறி அதற்கான பெருமையையும் தானே தட்டிக்கொள்ளப் பார்க்கிறது. இல்லாத நோயை உருவாக்கிவிட்டு, அதற்குத் தானே மருந்து தருவதாகக் கூறிக்கொள்வதைப் போன்றது இது. இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் நிம்மதியை இழந்து தவிப்பது என்னவோ கடலோர எளிய மீனவ மக்கள்தான். தலைமுறை தலைமுறையாக கடலோடு வாழ்ந்து, மெரினா லூப் சாலையில் மீன் விற்றுப் பிழைப்பு நடத்திவரும் பெண்கள், "எங்கள் தலைக்கு மேல் எப்போது எந்த உத்தரவு விழுமோ, எப்போது போலீஸ் வந்து எங்களை அப்புறப்படுத்துமோ" என்ற அச்சத்திலேயே நாட்களை நகர்த்த வேண்டியுள்ளது. வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் காக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதை, அரசு தனது அரசியல் விளம்பரத்திற்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்ற ஆதங்கம் மீனவப் பிரதிநிதிகளிடம் வெளிப்படுகிறது. ஒருபுறம் மாநிலம் நிதிப் பற்றாக்குறையில் இருக்கிறது என்று கூறிக்கொண்டே, மறுபுறம் எம்.எல்.ஏ.க்களுக்கு கார்கள் வழங்குவது, நாமக்கல் கவிஞர் மாளிகையை மாற்றி அமைப்பது, இப்போது பயன்படாத ஒரு திட்டத்திற்கு அரசாணை போட்டுவிட்டு அதை ரத்து செய்து விளம்பரம் தேடுவது என மக்கள் வரிப்பணமும் அரசு இயந்திரமும் வீணடிக்கப்படுவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. ஆட்சி அதிகாரம் என்பது எளிய மக்களின் உணர்வுகளை வைத்து அரசியல் லாபம் ஈட்டுவதற்கான களம் அல்ல. ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டு, மக்கள் எதிர்த்ததும் அதிலிருந்து பின்வாங்குவது ஜனநாயகத்தின் இயல்பான கடமையே தவிர, அது கொண்டாடுவதற்குரிய மாபெரும் தியாகம் அல்ல. பட்டினப்பாக்கம் திட்டத்தை அரசு திரும்பப் பெற்றாலும், அதை "மீனவர்களின் நண்பன்" என்ற அரசியல் முகமூடியாக மாற்ற முயன்றால், எளிய மீனவ மக்களும் தமிழக வாக்காளர்களும் இந்த நாடகத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்பதே தற்போதைய கள நிலவரம் உணர்த்தும் பாடம்.திட்டமிட்ட பின்வாங்கல்: 'மீனவர் நண்பன்' பிம்பத்திற்கான வியூகம்
இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஹீரோவாகும் அரசியலா?
மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்