விஜய் அரசின் 2 சொதப்பல்கள்.. அங்கே ஒரு பேச்சு, இங்கே ஒரு செயல்.. அதிகாரிகளும், உளவுத்துறையும் எங்கே?

  • சென்னை: விஜய் அரசு செய்துள்ள 2 சொதப்பல்கள் தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகின்றன... கோவளத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் முன்வைத்த கருத்துக்களும், அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. அத்துடன் எதிர்க்கட்சிகளுக்கும் கிலோ கணக்கில் அவல் அள்ளிப் போட்டது போலாகியும் விட்டது.

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு, அதன்பிறகு 12 ஆம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை படித்தது விஜய்தான். இதற்கு திமுகவும் ஆதரவு தெரிவித்தது. இந்த தீர்மானத்தின் முக்கியமான கருத்து, 543 என்ற எம்.பிக்கள் எண்ணிக்கையை மாற்றவே கூடாது என்பதுதான். தொகுதி மறுவரையறையே வேண்டாம் எனத் தீர்மானமாகச் சொன்னார் விஜய்.

    Advertisement

    கோவளம் - தொகுதி மறுவரையறை

    ஆனால், கோவளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் "பாதிப்பு இல்லாத மறுவரையறைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம் வேண்டும்" என்று விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார்.. ஒரே வாரத்தில் இந்த அந்தர் பல்டி அடித்த செயல், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் வகையில் உள்ளதாக, கண்டனங்கள் கிளம்பி உள்ளன.

    கொள்கையில் உறுதியில்லாமல் வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவது அரசின் நம்பகத்தன்மையைச் கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், அரசியல் களத்தில் கட்சியின் பிம்பத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    "எட்டப்பர்கள்" என்ற சொல்லாடல் வரை விவாதம் சென்றுள்ள நிலையில், இது அரசுக்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    "விஜய் அடித்த பல்டி" என்று எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய அளவுக்கு இந்நிகழ்வு விமர்சிக்கப்பட காரணமே முதல்வர் விஜய்யை சுற்றியுள்ள அதிகார வர்க்கத்தின் மெத்தனமும், உளவுத்துறையின் தோல்வியும்தான்..

    அரசியல் விளைவுகள்

    ஒரு அரசு எடுக்கும் முடிவு, குறிப்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கியமான விவகாரத்தில், அடுத்த சில நாட்களில் நிலைப்பாட்டை மாற்றுவது எவ்வளவு பெரிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது முதன்மைச் செயலாளர்கள் மற்றும் அரசியல் ஆலோசகர்களின் கடமையாகும்.

    ஆனால், இங்கே அதிகார வர்க்கம் முதலமைச்சரை முறையாக வழிநடத்தவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல, தொகுதி மறுவரையறை குறித்து கோவளத்தில் விஜய் பேசியபோது, அது முந்தைய சட்டமன்ற தீர்மானத்திற்கு முரணாக அமையும் என்ற அடிப்படை அரசியல் புரிதல் கூட அந்த அதிகாரிகளுக்கு இல்லாமல் போனதுதான் முதல் தோல்வி என்றும் கருத்தை முன்வைக்கிறார்கள்..!!!

    Advertisement

    அரசு பணத்தில் சொகுசு கார்

    அடுத்ததாக, மகளிர் உரிமைத்தொகை போன்ற அத்தியாவசிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க திணறும் சூழலில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு பணத்தில் சொகுசு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது நிர்வாக ரீதியான முதிர்ச்சியின்மையாகவே சோஷியல் மீடியாவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    அரசின் வருவாயை பெருக்க அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவிடம் கூட ஒரு வார்த்தை ஆலோசனை கேட்காமல் இந்த முடிவை எடுத்தது, அந்த குழுத் தலைவரையே கொதிப்படைய வைத்து விட்டதாம்.

    உளவுத்துறை என்பது வெறும் தகவல்களைத் திரட்டுவதற்கு மட்டுமே கிடையாது.. ஒரு அரசு எடுக்கும் முடிவு மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே மோப்பம் பிடித்து, முதல்வரை எச்சரிக்க வேண்டிய அலாரம் போன்றது..

    Advertisement

    உளவுத்துறை எங்கே

    அப்படிப்பட்ட உளவுத்துறை, கார் விவகாரத்தால் மக்களிடையே எழும் கோபத்தை கணிக்க தவறிய விட்டது, நிர்வாகத்தின் பலவீனத்தையே காட்டுகிறதோ என்ற ஐயத்தை கிளப்பி விட்டுள்ளது.

    அதனால்தான், அனுபவம் வாய்ந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள், இதுபோன்ற சலுகைகள் பொதுவெளியில் அம்பலமானால் தங்களுக்கு வரும் கெட்ட பெயரை முன்கூட்டியே உணர்ந்து, தங்களது எம்எல்ஏக்களை அதை ஏற்க வேண்டாம் என்று தடுத்துள்ளன. அந்தப் பக்குவம் தவெக அரசிற்கு இல்லாமல் போனதுதான் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்...

    2 சொதப்பல்கள்

    இந்த 2 விவகாரங்களிலும் அடிபட்ட விஜய், இப்போது "தப்பு பண்ணிட்டோமோ" என்ற கவலையில் ஆழ்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது..

    Advertisement

    எனவே தவெக அரசு தனது அதிகார வர்க்கத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லாவிட்டால் வாரம் வாரம் இப்படி அரங்கேறும் சொதப்பல்கள், சி.ஜோசப் விஜய்யின் அரசுக்கு மீள முடியாத கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்துவிடும் என்றும் அரசியல் நிபுணர்கள் அலர்ட் செய்கிறார்கள். .

    அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்பதைப் போல, நிலைப்பாடுகளும் மாறுபடுவது இயல்புதான்.. ஆனால், மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய தலைவர்கள் எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்தும் பாடம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Intelligence Failure in Vijay Government? 2 Major Goof Ups.. One Statement There, One Action Here.. Where Are Officials?