சென்னை: சென்னையில் இவ்வளவு தீவிரத்தன்மை கொண்ட கனமழை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று பிரபல வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையில் அரிதாக பார்க்க கூடிய அதிவேக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக கூறிய பிரதீப் ஜான், கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மேக வெடிப்பு போல் திடீரென கனமழை பெய்து வருகிறது. மாலை 7 மணியளவில் பெய்ய தொடங்கிய மழையால் வடசென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஒரு பக்கம் மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் மழைநீரை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் பாரிமுனையில் 27 செ.மீ. கத்திவாக்கம் 26 செ.மீ., திருவொற்றியூர் 19 செ.மீ., எண்ணூர் 17 செ.மீ., தண்டையார்பேட்டை 14 செ.மீ., ராயபுரம் 12 செ.மீ., மணலி புதுநகர் 11 செ.மீ., பேசின் பிரிட்ஜ் 10.2 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது. இதனால் அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேக வெடிப்பு ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் மேக வெடிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளன. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னையில் பெய்து வரும் கனமழை என்பது நமது வாழ்நாளில் பார்க்கக் கூடிய அரிதான மழைப்பொழிவு ஆகும். கத்திவாக்கத்தில் 260 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. வெறும் 1 மணி நேரத்தில் 148 மி.மீ. மழை பொழிந்துள்ளது. சென்னையில் இவ்வளவு தீவிரத்தன்மையுடன் மழை பெய்ததை பார்த்ததே இல்லை. கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தென் சென்னையை சூழ்ந்திருந்த மழை மேகங்கள், மெல்ல வடக்கே நகர்ந்து மத்திய சென்னையை நோக்கி சென்று மீண்டும் வட சென்னையை அடைய தொடங்கியுள்ளன. ஏற்கனவே பலத்த மழை பெய்த பகுதிகளில் மீண்டும் பெருமழை பெய்யக் கூடும். அதேபோல் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள மத்திய மற்றும் வடசென்னையின் சில பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரித்து வருவது போல் தெரிகிறது. இந்த மழையால் ஏற்கனவே மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் சூழல் மோசமாகலாம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள சாலைகளை மக்கள் தவிர்க்க வேண்டும். அதேபோல் மழை தொடர்வதால் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்கமாறு எச்சரித்துள்ளார்.