பரந்தூரை ரத்து செய்ய விஜய்க்கு அவசரம்.. 3 விஷயம் சொல்லியும் கேட்கலயா.. திமுக குடும்ப முதலீடு

  • சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் குறித்த தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.. முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், முதல்வர் ஏன் இப்படியொரு முடிவை பேரவையில் அறிவித்தார் என்பது குறித்து நமக்கு சில பிரத்யேகமான தகவல்கள் கிடைத்துள்ளன.. அதை குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    பேரவையில் விதி 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முழுமையாக கைவிடுவதாகவும், இந்த திட்டத்திற்காக விரைவில் மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    பரந்தூர் விமான நிலைய திட்டம்

    இந்த அதிரடியான முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்னதாக, அரசின் உயரதிகாரிகள், தனது தனிப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் 2 அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டாராம்.. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, அதிகாரிகளுக்கும் அரசியல் ஆலோசகர்களுக்கும் இடையே நிலவிய கருத்து மோதல்கள் மற்றும் பல்வேறு அதிர வைக்கும் உண்மைகள்தான் இப்போது கசிந்துள்ளன.

    அதாவது, அதிகாரிகள் தவிர மற்ற அனைத்து தரப்பினரும், இந்த விமான நிலைய திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் ரீதியான அழுத்தங்களை முதல்வர் விஜய்யிடம் தீவிரமாக முன்வைத்திருக்கிறார்கள்..

    Advertisement

    திமுக முதலீடு விஷயம்

    குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியில் குடும்ப உறுப்பினர்கள் சில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளதாகவும், அந்த நிறுவனமும் குறிப்பிட்ட சில திமுக அமைச்சர்களும் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரிய அளவில் நிலங்களை வாங்கி குவித்து வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    அந்தப் பகுதிகளில் உள்ள நிலங்களின் சந்தை மதிப்பை செயற்கையாக உயர்த்தவே சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூர் பகுதியில் அமைக்கும் திட்டத்தை முந்தைய அரசு கொண்டு வந்ததாக வாதிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தினால் ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதாரம் வளர்வதை விட, குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் மட்டுமே அபரிமிதமான வளர்ச்சி அடையும் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதிகாரிகள் தந்த 3 எச்சரிக்கை

    ஏற்கனவே பரந்தூர் பகுதி விவசாயிகளுக்கு நாம் ஆதரவாக நிற்போம் என்று தேர்தல் காலத்தில் வாக்குறுதி தந்திருப்பதால், தற்போது இந்த திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் தமிழக விவசாயிகளின் முழுமையான ஆதரவை எளிதில் பெற முடியும் என்றும், அந்த விவசாயிகளின் அசைக்க முடியாத ஆதரவு அடுத்தடுத்து வரக்கூடிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பலமாக அமையும் என்றும் முதல்வர் விஜய்யை அவர்கள் வெற்றிகரமாக சம்மதிக்க வைத்துள்ளனர்.

    இருந்தாலும், இந்த அரசியல் கணக்குகளுக்கு அரசு தரப்பு உயரதிகாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகளும் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன..

    Advertisement

    மத்திய அரசின் இந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு இடம் தேர்வு செய்தது மட்டுமே முந்தைய அரசின் முடிவாக இருந்தது என்றும், திட்டத்தை நடைமுறைப்படுத்த பரந்தூர் பகுதியை மட்டும் அந்த அரசு தனியாக தேர்வு செய்யவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அதன் மூலம் 3 வெவ்வேறு இடங்களை மத்திய அரசுக்கு முந்தைய அரசு பரிந்துரைத்திருந்தது என்றும், இறுதி கட்டமாக பரந்தூர் பகுதியை தேர்வு செய்து முத்திரை குத்தியது மத்திய அரசுதான் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

    90 சதவீதம் நிலம்

    இப்போது இத்திட்டத்தின் ஆரம்ப மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அரசின் முறையான கவனத்துக்குக் கொண்டு செல்லாமலே திட்டத்தை திடீரென ரத்து செய்யும் முடிவை எடுப்பது அரசியல் ரீதியாக கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பல்வேறு சட்டச்சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    குறிப்பாக, திட்டத்திற்குட்பட்ட ஒரே ஒரு கிராமத்தை தவிர மற்ற அனைத்து கிராம விவசாயிகளும் அரசின் திட்டத்திற்கு தங்களின் முழு ஒப்புதலை அளித்து, தாமாக முன்வந்து தங்கள் நிலங்களை அரசுக்கு விற்றுவிட்டனர். அதற்குரிய உரிய இழப்பீட்டுத் தொகையையும் அவர்கள் ஏற்கனவே பெற்றுவிட்டனர்.

    அப்படியிருக்கும்போது, திடீரென திட்டத்தைக் கைவிட்டால், கையகப்படுத்தப்பட்ட அந்த நிலங்களை மீண்டும் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

    விஜய்க்கு வந்த அவசரம்

    ஒருவேளை நிலங்களை திரும்ப ஒப்படைக்க அரசு நினைத்தாலும், ஏற்கனவே விவசாயிகள் பெற்றுக்கொண்ட இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்து சட்டப்பூர்வமாக மீட்பதும் இயலாத காரியமாகும். மாறாக, எந்தப் பொது நோக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்தை மீறி வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் இந்த நிலங்களை மாற்றவோ பயன்படுத்தவோ முடியாது.

    இதையும் மீறி அரசு நிலங்களை வேறு தேவைக்குப் பயன்படுத்தினால், அப்போது விவசாய நிலங்களும் விவசாயிகளும் பாதிக்கப்பட மாட்டார்களா என்ற நியாயமான எதிர் கேள்விகளும் பொதுமக்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களாக எழும்.

    இது தவிர, மாற்று இடத்தை உடனடியாக தேர்வு செய்யாமலேயே தன்னிச்சையாக திட்டத்தை ரத்து செய்வதும் நிர்வாக ரீதியாக எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல என்றெல்லாம் முதல்வர் விஜய்யிடம் அரசு அதிகாரிகள் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்துள்ளனர். ஆனால், அதிகாரிகளின் இந்த சட்டப்பூர்வமான வாதங்கள் மற்றும் எச்சரிக்கைகள் எதுவும் முதல்வர் விஜய்யிடம் எடுபடவில்லை என்றும், அரசியல் நிலைப்பாடே இறுதியாக வெற்றியடைந்துள்ளது என்றும் கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன...!!

    - நமது சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Investment of DMK Family in Parandur.. Why Was Vijay in a Hurry to Cancel the Airport Project? 3 Warnings Ignored