சென்னை: தமிழக அரசு கடன் வாங்குவது 21 சதவீதம் குறைந்திருக்கிறதாம்.. அதிக கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் 2-வது இடத்திலிருந்த தமிழ்நாடு, இப்போது 5-வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது. இதை தவெக அரசு சாதனையாகக் கூறி வரும் நிலையில், கடன் குறைந்ததன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு கடன் வாங்குவதைக் குறைத்திருக்கிறது. 2026-27 நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் தமிழக அரசு பத்திரங்கள் மூலம் வாங்கிய கடன் 21 சதவீதம் குறைந்து, ரூ.51,300 கோடியிலிருந்து ரூ.40,500 கோடியாக சரிந்துள்ளது. இதனால், அதிக கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் 2-வது இடத்திலிருந்த தமிழ்நாடு 5-வது இடத்துக்கு இறங்கியுள்ளது.
ஜிஎஸ்டி வசூல், சீரான வரி வருவாய், மத்திய அரசின் வரிப் பங்கீடு ஆகியவை இதற்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன. ஆனாலும், தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளது. இதில் அரசின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடி, பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடி. மின்சாரத் துறையின் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாகவும், போக்குவரத்து நிறுவனங்களின் கடன் ரூ.43,865 கோடியாகவும் உள்ளது. இதற்கிடையே, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ.48,000 கோடி கடன் வாங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், திமுக இதனை விமர்சித்துள்ளது.. அரசு கடன் வாங்கும் திறனை குறைத்தது எப்படி? நிர்வாக திறனின்றி திணறி வருகிறதே? இதை ஒரு சாதனையாக தவெக முன்னிறுத்துகிறதே என்றெல்லாம் விமர்சித்துள்ளது அந்தவகையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகச் சொல்லி அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் தவெக அரசு, எவ்வாறு இந்த கடன் தேவை குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா? கழக ஆட்சியின் கடந்த 2025-26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் ரூ.13,002.22 கோடி அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது. தவெக அரசு, இந்த நிதி ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கு இன்னும் தவெக அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா? வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா? முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா? த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். எனவே, இதனை தங்களின் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்" என தவெக அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.தமிழக அரசு கடன்
திமுக விமர்சனம்
முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
கடன்கள், நிதி மேலான்மை
வருவாய், முதலீட்டு செலவு