சென்னை: விஜய் அரசு, தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்யவுள்ள நிலையில், "வெற்றி தமிழ்நாடு" முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.1.02 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. வெறும் 100 நாட்களில் இவ்வளவு பெரிய தொகையை ஈர்த்திருப்பது அரசியல் களத்திலும் தொழில்துறையிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.. இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம்? தவெக அரசு உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் புதிய தொழில்கள் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நேற்றைய தினம் ஒரே நாளில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ.67452 கோடி மதிப்பிலான உடன்பாடுகள், 1.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என வெளியாகி இருக்கும் எண்கள், அனைவரின் கவனத்தை ஈர்க்கக் கூடியவையாக உள்ளன.. முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட தகவல்களின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமின்றி ரூ.4,476 கோடி மதிப்பில் 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், ரூ.2,676 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகள் உடனடியாகத் தொடங்கி வைக்கப்பட்டும் உள்ளன. அதுமட்டுமல்லாமல், சிப்காட் மற்றும் டிட்கோ சார்பில் ரூ.777.74 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் ரூ.39,000 கோடியில் கப்பல் கட்டும் தளம், தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தை, தொழில் அனுமதிகளுக்கு 21 நாட்கள் காலக்கெடு என போன்றவையெல்லாமே, தொழில்துறையை துரிதப்படுத்த முதல்வர் விஜய் மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு எடுத்துள்ள முயற்சிகள் சரியான திட்டமிடலை காட்டுகின்றன. எந்தவொரு புதிய அரசும் தன்னுடைய தொடக்க காலத்திலேயே இவ்வளவு பெரிய தொகையை முதலீடாக ஈர்ப்பது பாராட்டுக்குரியதுதான்.. அதேசமயம், கையெழுத்தான ஒப்பந்தங்கள் அனைத்தும் நிஜமாகவே தொழிற்சாலைகளாக மாறுமா? என்பதும் இங்கு பிரதான கேள்வியாக உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் நாம் எத்தனையோ முதலீட்டாளர் மாநாடுகளை பார்த்திருக்கிறோம். அதில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களில் பாதிக்கும் மேலானவை கடைசி வரை காகித அளவிலேயே நின்றுவிடும் என்பதே நிதர்சனம். வெறும் அறிவிப்பு நிலையை தாண்டி, இந்த ரூ.1.02 லட்சம் கோடி உண்மையான தொழிற்சாலைகளாக மாறி, கிராமப்புற இளைஞர்களின் கைகளில் வேலைவாய்ப்பாக சேரும்போது மட்டுமே இது முழுமையான சாதனை என்ற தகுதியைப் பெறும். அதுமட்டுமல்ல, இந்த நகர்வுகளுக்கு பின்னால் சில சவால்களும் உள்ளன.. . தொழில் தொடங்குவதற்கான 21 நாள் காலக்கெடு என்பது அதிகாரத்துவ தாமதங்களை குறைக்க உதவும் என்றாலும், நடைமுறையில் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதும் சந்தேகம்தான்.... புதிய தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் எழும் உள்ளூர் பிரச்சனைகள், நிலத்தடி நீர்வளப் பாதுகாப்பு போன்றவற்றையெல்லாம் இந்த தவெக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதும் மிகப்பெரிய சவால்தான். அதனால், வெறுமனே நம்பர்களை காட்டி அரசியல் மைலேஜ் எடுப்பதை விட்டுவிட்டு, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதையும், சூழலியல் சமநிலையை பேணுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்... இவ்வளவு பெரிய முதலீடுகளை ஈர்த்தது ஒரு நல்ல தொடக்கம்தான்.. அதை மறுப்பதற்கில்லை.. ஆனால், அந்த வாக்குறுதிகளை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து தடைகளை தாண்டுவதில்தான் இந்த ஆட்சியின் உண்மையான முதிர்ச்சியும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!தவெக அரசு விஜய்
100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடு
விஜய் முன் உள்ள சவால்கள்