சென்னை: சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நிறைவடைந்திருக்கிறது. சரியாக காலை 11 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, மதியம் 12.20 மணிக்கு தேசிய கீதத்துடன் முடிவடைந்தது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. அதேபோல் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சென்னையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக மொத்தமாக ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இதன் மூலமாக 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சி அமைந்து முதல் முதலீட்டாளர்கள் மாநாடு என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வெறும் 1.20 மணி நேரம் மட்டுமே இந்த மாநாடு நடைபெற்றது. ஜெர்மனியின் பிட்செர் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடும், ஜப்பாஇன் ஒய்கேகே நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1,651 கோடி முதலீடும், ஜெர்மனியின் டாம்ளர் நிறுவனர் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடும் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் கோபைன் நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடும் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்துள்ளது. ஈவி தயாரிப்பில் லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. அதேபோல் அக்னிகுல் காஸ்மோஸ் ரூ.400 கோடியும், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தூத்துக்குடியில் ரூ.400 மற்றும் 250 கோடிகள் முதலீடு செய்கின்றன. தூத்துக்குடியில் லைன்ஹவுஸ் க்ரீன் என்ற நிறுவனம் ரூ.10,000 கோடியும் டேட்டா செண்டர் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு செய்தியாளர்கள் அழைக்கப்படவோ, அனுமதிக்கப்படவோ இல்லை. வழக்கமாக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டு, முதலீட்டாளர்களுடன் உரையாடல் நடத்த அனுமதிக்கப்படுவார்கள். திமுக ஆட்சி காலத்தில் இப்படியான முறை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் தவெக ஆட்சி அமைத்த பின் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை. முதலீட்டாளர்களை மட்டுமே அனுமதித்தது. அதேபோல் அமைச்சர் கீர்த்தனாவும் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் இந்த விவகாரம் சர்ச்சையாகி இருக்கிறது.