ஐயாரெட்டு பல்லுகாரி! சினிமா பாடல்களில் அடிக்கடி வரும் IR8 என்றால் என்ன? தமிழகத்தை மாற்றிய ஒரு விஷயம்

  • சென்னை: "ஐயாரெட்டு நாத்து கட்டு: "ஐயாரெட்டு போல பல்லு..." "ஐயாரெட்டு பல்லு காரி: என்று தமிழ் சினிமா பாடல்களில் நாம் ரசித்துக்கேட்ட ஒரு வார்த்தைக்கு பின்னால், ஆசிய கண்டத்தையே பெரும் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றிய ஒரு மாபெரும் வரலாறு ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா!

    Advertisement

    IR8 அதாவது விவசாயிகளால் அன்போடு 'ஐயாரெட்டு' என்று அழைக்கப்படும் ரகம் என்பது வெறும் நெல் ரகம் மட்டுமல்ல.. அது இந்திய மற்றும் தமிழக விவசாயிகளின் தலையெழுத்தையே மாற்றியமைத்த ஒரு வரலாற்றுப் புரட்சி.

    Advertisement

    பசியின் பிடியில் இந்தியா

    1950 மற்றும் 1960-களில் ஒட்டுமொத்த ஆசிய நாடுகளும், குறிப்பாக இந்தியாவும் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டன. அமெரிக்காவில் இருந்து கப்பல்களில் வரும் கோதுமையை நம்பியே இந்திய மக்களின் அன்றாட பசி ஆறியது.

    இந்த அவல நிலையை மாற்ற, பிலிப்பீன்ஸ் நாட்டில் உள்ள பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) ஒரு புதிய நெல் ரகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது.

    அங்குள்ள விஞ்ஞானிகள் குழு, இந்தோனேசியாவின் அதிக மகசூல் தரும் பீட்டா என்ற நெல் ரகத்தையும், தைவானின் குள்ளமான டீ-கீ-வூ-ஜென் என்ற நெல் ரகத்தையும் கலந்து 38 கலப்பினங்களை உருவாக்கினர்.

    Advertisement

    அதில் எட்டாவது இடத்தில் வென்று சாதனை படைத்ததுதான் இந்த IR8 அதாவது International Rice 8. 1966 நவம்பரில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட இந்த நெல் ரகம், உலக வேளாண் வரலாற்றில் அதிசய அரிசி என்று கொண்டாடப்பட்டது.

    ஐயாரெட்டு ஏன் ஒரு அதிசயம்?

    அதற்கு முன்பு வரை பயிரிடப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மிக உயரமாக வளர்ந்து, காற்றில் சாய்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேலும், அவை முதிர்ச்சியடைய 160 முதல் 180 நாட்கள் வரை ஆகும். ஆனால், IR8 நெற்பயிர் வெறும் 90 முதல் 95 சென்டிமீட்டர் உயரம் மட்டுமே வளரக்கூடிய ஒரு குள்ள ரகம். இதனால் எவ்வளவு பலத்த காற்று வீசினாலும் இந்த பயிர்கள் சாயாது.

    Advertisement

    அனைத்திற்கும் மேலாக, இது வெறும் 130 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். பாரம்பரிய நெல் ரகங்கள் ஹெக்டேருக்கு 1 முதல் 2 டன்கள் மட்டுமே மகசூல் தந்த நிலையில், IR8 ரகம் முறையான ஹெக்டேருக்கு 5 முதல் 10 டன்கள் வரை கொடுத்தது. அதாவது 5 முதல் 10 மடங்கு வரை அள்ளிக் கொடுத்தது!

    பசுமைப் புரட்சி!

    இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தையான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் அப்போதைய மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியம் ஆகியோரின் முயற்சியால் இந்த ரகம் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் வட ஆற்காடு மாவட்ட விவசாயிகளிடம் இந்த ரகம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    Advertisement

    குறைந்த காலத்தில் அதிக லாபம், வறட்சியையும் காற்றையும் தாங்கி நிற்கும் வலிமை என ஐயாரெட்டு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது.

    இதன் தாக்கம் எவ்வளவு ஆழமானது என்றால், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு விவசாயி, இந்த நெல் ரகத்தின் மீதான நன்றியால் தனது மகனுக்கு 'ஐயாரெட்டு' என்றே பெயரிட்டார் என்பதை எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு மாநாட்டில் நினைவு கூர்ந்தார்.

    தமிழகத்தின் கிராமப்புறப் பொருளாதாரத்தை மீட்டெடுத்த இந்த நெல் ரகம், நாளடைவில் மக்களின் பேச்சு வழக்கிலும், சினிமா பாடல்களிலும் ஒரு வார்த்தையாகவே மாறியதுதான் இதன் வரலாறு!

    Topics: #rice #history

    English Summary

    IR8: Why this rice so famous in Tamil Songs? What is the story behind it?