முதல்வர் விஜய்யின் பலமே பலவீனமாகும் வாய்ப்பு.. திணறும் எதிர்க்கட்சிகளின் புதிய யுக்தி


  • சென்னை: முதல்வர் விஜய்யின் பலமே மௌனம் தான்.. இதை சமாளிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறுகின்றன. ஆனாலும் பலமே பலவீனமாகும் வாய்ப்பும் உள்ளது. ஆதவ் அர்ஜுனா தான் விஜய்யை கட்டுப்படுத்துகிறார் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட மட்டும் மக்கள் நம்ப தொடங்கினால் விஜய்க்கு பெரிய சிக்கலாகும். அவர் பேசாமால் மௌனமாக இருப்பதும் பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்

    Advertisement

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் ஆதரவுடன தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரியணையில் ஏறியிருப்பது இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு தனித்துவமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த இமாலய வெற்றிக்கு விஜய்யின் "மௌனம்" ஒரு மிகச்சிறந்த ஆயுதமாகப் பயன்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    Advertisement

    விஜய் ஜெயித்த யுக்தி

    அரசியல் களம் என்பது வழக்கமாக வார்த்தைப் போர்களால் நிரம்பி தான் இருக்கும். ஆனால், விஜய் ஆரம்பத்திலிருந்தே தேவையற்ற அரசியல் விவாதங்களைத் தவிர்த்து, தன் மௌனத்தையே முதன்மை உத்தியாக பயன்படுத்தினார். எதிர்க்கட்சிகள் அவரை நோக்கி எய்த பல விமர்சனக் கணைகளுக்கும், கேள்விகளுக்கும் அவர் வாய்திறந்து பதிலளிக்கவே இல்லை. இந்த மௌனம் எதிர்க்கட்சிகளைப் பெருமளவில் திணறடித்தது. ஏனெனில், அவர் என்ன நினைக்கிறார், அவரது அடுத்த நகர்வு என்ன, தேர்தல் வியூகம் என்ன என்பது எதிரிகளுக்குக் கடைசி வரை 'சஸ்பென்ஸ்' ஆக இருந்து வந்ததது. இந்த யூகிக்க முடியாத தன்மையே தவெக-வின் பலமாக மாறி, 108 தொகுதிகளில் 'விசில்' சின்னத்தை நோக்கி மக்களைப் படையெடுக்க வைத்தது.

    Advertisement

    புஸ்ஸியை விட ஆதவ் அதிகமாக பேசுகிறார்

    ஆனாலும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, இந்த மௌனமே பின்னாளில் விஜய்க்குப் பெரிய பலவீனமாக மாறவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். குறிப்பாக, தவெக-வின் திரைமறைவு வியூகங்களை வகுக்கும் முதன்மைப் புள்ளியாகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுனா தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் தான் கட்சியில் அனைத்திற்கும் பதில் அளிக்கிறார். புஸ்ஸி ஆனந்த் கூட பெரிதாக எந்த பதிலும் சட்டசபையில் கூட அளிக்கவில்லை. இதனால் விஜய் குறித்த பிம்பம் இங்கு கவனிக்கத்தக்கதாக உள்ளது.

    ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் விஜய்?

    "விஜய்யை சுயசார்பாகச் செயல்பட விடாமல், பின்னால் இருந்து ஆதவ் அர்ஜுனாதான் கட்டுப்படுத்துகிறார்; கட்சியின் முக்கிய முடிவுகளை அவர்தான் எடுக்கிறார்" என்ற எண்ணம் மக்கள் மத்தியில் திமுக, அதிமுகவால் வேகமாக விதைக்கப்பட்டு வருகிறது.. ஒருவேளை அதனை மக்கள் நம்பத்தொடங்கினால், அது விஜய்யின் தனிப்பட்ட தலைமைத்துவத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறும் அபாயமும் உள்ளது. தமிழக மக்கள் எப்போதும் ஒரு 'வலுவான, தனித்து முடிவெடுக்கும்' தலைவரையே விரும்புவார்கள். தங்களின் முதலமைச்சர் யாரோ ஒரு வியூகவாதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்ற சந்தேகம் எழுந்தால், அது மக்களின் நம்பிக்கையை ஒரே நாளில் சிதைத்துவிடும்.

    Advertisement

    மௌனம் ஏற்படுத்தப் போகும் பின்னால் சிக்கல்கள்

    தேர்தல் நேரத்தில் வாக்குகளைக் கவர சஸ்பென்ஸ் மௌனம் உதவியிருக்கலாம். ஆனால், இப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்! தீவிர நிர்வாகத்திலும், மக்கள் பிரச்சினைகளிலும் நீண்ட மௌனம் நிச்சயம் எடுபடாது. மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள், அண்டை மாநில நீர் நதிமன்ற விவாதங்கள் அல்லது சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் வரும்போது, முதலமைச்சர் தன் சொந்தக் குரலில், தெளிவான நிலைப்பாட்டை மக்கள் முன்னிலையில் தைரியமாகப் பேசியே ஆக வேண்டும். தொடர்ந்து மௌனமாகவே இருந்தால், "அவருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை" என்றோ, "பின்னால் இருப்பவர்கள் இன்னும் ஸ்கிரிப்ட் எழுதித் தரவில்லை" என்றோ எதிர்க்கட்சிகள் உருவாக்கும் எதிர்மறை எண்ணத்தை மக்கள் நம்ப தொடங்கிவிடுவார்கள்.

    Advertisement

    யார் கட்டுப்பாட்டிலும் இல்லை

    தேர்தல் களம் வரை விஜய்யைக் காப்பாற்றிய மௌனம், ஆட்சிப் பொறுப்பில் தற்போது இருக்கும்போது அவருக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம். அரசியல் ஆலோசகர்களின் பங்கு ஒரு கட்சிக்குத் தேவைதான் என்றாலும், "நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, மக்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கிறேன்" என்பதை விஜய் தனது ஆளுமையான பேச்சின் மூலமும், அதிரடி முடிவுகளின் மூலமும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார் என அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    English Summary

    Chief Minister Vijay's strength is silence. But there is also a possibility that strength becomes weakness. It will be a big problem for Vijay if people including DMK and AIADMK start believing that Aadhav Arjuna is controlling Vijay. If he does not speak, his silence will also cause problems later, say political experts