கட்சியை கலைச்சிட்டு போக வேண்டியதுதான்.. கடைசி காலத்தில் அதிமுக! எடப்பாடியை புடைத்த நிர்வாகிகள்

  • சென்னை: அதிமுகவிலிருந்து கொத்துக்கொத்தாக முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் , முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைவது தினசரி நடக்கும் நிகழ்வாக மாறி விட்டது. இதுவரை சுமார் 35 சதவீதம் நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவிவிட்டதாக அதிமுகவிலேயே ஒரு புள்ளிவிபரங்களைத் தெரிவிக்கிறார்கள். அதிமுக கூடாரம் வேகம் வேகமாக காலியாகிறதோ என எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா விசுவாசிகள் கவலைப்படுகிறார்கள் ; கண்ணீர் சிந்துகிறார்கள். இந்த கவலையும் கண்ணீரும் எடப்பாடி பழனிச்சாமியை காட்டமாக விமர்சிக்குமளவுக்கு நிலைமை சீரியஸாகியிருக்கிறது.

    Advertisement

    இந்த நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து விவாதித்தார் எடப்பாடி பழனிசாமி. அவருடன் இணைந்து நிற்கும் சில சீனியர் தலைவர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்த விவாதம் நடந்தது.

    Advertisement

    அப்போது, ''அதிமுகவிலிருந்து நிறைய பேர் தவெகவுக்கு போவதால் அதிமுக என்னவாகுமோ என்கிற கவலை உங்களிடம் இருக்கிறது என்பதை அறிந்து தான், உங்களை அழைத்துப்பேசுகிறேன்'' என எடுத்த எடுப்பிலேயே நேரடியாக பாயிண்ட்டுக்கு வந்தார் எடப்பாடி.

    தொடர்ந்து அவர் பேச முயற்சிப்பதற்கு முன்பு இடைமறித்த சில நிர்வாகிகள், ''கவலை மட்டும் இல்லே அண்ணே... கட்சியின் எதிர்காலம் இனி என்னவாகும் என்கிற மன உளைச்சலும் ஏற்பட்டு இருக்கு. இதனால், இது வரை பி.பி. இல்லாதவங்களுக்கும் கூட பி.பி. எகிறியிருக்கிறது. அப்படின்னா... எந்த அளவுக்கு மன உளைச்சலும் எதிர்காலத்தை நினைத்து கவலையும் எங்களுக்கு இருக்கும்னு யோசியுங்க. புரட்சித் தலைவரும், அம்மாவும் இருந்த வரைக்கும் இப்படியெல்லாம் ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. உங்களையும் அப்படித்தானே பார்த்தோம். ஆனா, நிலைமை இன்னைக்கு என்னாச்சுன்னு பார்த்தீங்களா? மூத்தவர்கள் தொடங்கி கீழ்மட்ட தொண்டர்கள் வரை தவெகவுக்கு சாரைசாரையாக போக நீங்க அனுமதிச்சிருக்கக்கூடாது. தேர்தல் தோல்விக்கு பிறகு உங்களிடம் மனமாற்றம் வந்திருக்க வேண்டும். ஆனா, உங்கள்கிட்ட அது இல்லைங்கிறது ரொம்ப வருத்தம் அண்ணே...'' என்று மனக் குறைகளை கொட்டியிருக்கிறார்கள்.

    Advertisement

    அவர்களை சமாதானப்படுத்திய எடப்பாடி, '' இந்தளவுக்கு நீங்க யோசிக்க வேணாம். தவெகவுக்கு போனவங்க எல்லாம் ஓரிரு மாசத்துல திரும்பி நம்மக் கிட்டே ஓடி வந்துருவாங்க. அதை நீங்க பார்க்கத்தான் போறீங்க. ஏதோ ஒரு எதிர்பார்ப்புல எல்லாரும் அங்க போறாங்க. ஆனா, அவங்க எதிர்பார்ப்பு அங்க நடக்காது. ஏன்னா... எல்லாத்துக்கும் பொறுப்பு கொடுக்கலைன்னாலும் நம்ம கட்சியில சீனியர்னு சொல்லிக்கிட்டு பதவியில இருந்தவங்களுக்கு அங்க பதவி கொடுத்துதானே ஆகணும்? பதவி கொடுக்காம எத்தனை நாளைக்கு அந்த தம்பி (விஜய்) சும்மா இருந்திட முடியும் ? ஒரு கட்டத்துல அவங்களுக்கு பொறுப்பு கொடுக்கிறதா வெச்சுக்குவோம்... அந்த பொறுப்புகளில் ஏற்கனவே தவெக காரங்க இருப்பாங்க.

    Advertisement

    அதை பறிச்சித்தான் இவங்களுக்கு கொடுக்கனும். இல்லைன்னா, அவங்களுக்கு மேலே இருக்கிற பொறுப்பை கொடுக்கனும். இந்த ரெண்டுல எது நடந்தாலும் அதை ஒரிஜினல் தவெக காரங்க ஏத்துப்பாங்களா? அதுவும் தவெக ரூலிங் பார்ட்டியாக இருக்கும் போது நமக்கு மேலே ஒரு அதிமுக காரன் வந்து உட்கார்வதை எப்படி ஏத்துக் குவான்? அதனால் குழப்பம் தான் வரும். அப்போ, அதிமுக நபர்களுக்கு பொறுப்பு கிடைக்காத சூழல் வரும். அந்த நிலைமையில மீண்டும் இங்கே ஓடி வருவாங்க. அதனால கவலைப்படாம நீங்க இருங்க. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்'' என்று நம்பிக்கைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

    Advertisement

    விவாதக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி சொன்னதை அசை போட்டபடியே வெளியேறியிருக்கிறார்கள். அவர்களிடம் கூட்டத்தில் நடந்ததை விசாரித்தபோது, எடப்பாடி சொன்னதை விவரித்த அவர்கள், ''எங்க தலைவருக்கு (எடப்பாடி), தவெக துணிஞ்சு செய்து கொண்டி ருக்கும் அரசியலின் சீரியஸ்னஸ் புரியற மாதிரி தெரியலை சார். அவரை பொறுத்த வரைக்கும், எந்த பதவியும் நமக்கு வேண்டாம் ; அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி மட்டும் இருந்தா போதும். அதை பாதுகாப்பதில் தான் தீவிரமா இருக்கார். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை துரத்த துடிக்கும் அத்தனை பேரும் தவெகவுக்கு போகட்டும் அல்லது அதிமுகவில் சாதாரண நிர்வாகியா இருந்துட்டு போகட்டும் என நினைக்கிறார். தினம் தினம் கட்சி கரைஞ்சிக்கிட்டிருக்கேங்கிற கவலை அவருக்கு சுத்தமா இல்லை சார்'' என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்கள்.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Is AIADMK on the end game of Politics? Party leaders are very angry against Edappadi Palanisamy