சென்னை: தமிழக அரசியலில் தற்போதைய பரபரப்பான பேசுபொருளாக இருப்பது தவெகவின் நட்பு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும், அதில் இருந்து இடதுசாரிக் கட்சிகள் விலகி இருப்பதும் ஆகும். விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ, இன்று நடைபெற உள்ள தவெகவின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த திடீர் முடிவு தமிழக அரசியல் களத்தில் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பல அரசியல் நிபுணர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவர்களின் பார்வையில், இந்த விலகல் என்பது ஒரு உண்மையான முறிவு அல்ல.. மாறாக, திமுகவை குழப்புவதற்காகவும், பொதுமக்களின் மத்தியில் தங்களின் தனித்துவத்தை காட்டிக்கொள்வதற்காகவும் நடத்தப்படும் ஒரு வகையான அரசியல் நாடகமாகவே பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் தனது ஆதரவுக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு வலுவான அரசியல் அணியை முறைப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறார். இதற்காக இரண்டாவது முறையாக ஆலோசனைக் கூட்டத்திற்கு நட்பு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தாங்கள் தவெக அரசுக்கு பொது நலன் சார்ந்த ஆதரவு மட்டுமே தருகிறோம் என்றும், அமைச்சரவையில் பங்கேற்கவோ அல்லது முறையான கூட்டணிக்குள் முழுமையாக இணையவோ இப்போது விரும்பவில்லை என்றும் வாதிடுகின்றன. இருப்பினும், அரசியல் பார்வையாளர்களின் ஆழ்ந்த கணிப்பு வேறுவிதமாக உள்ளது. இடதுசாரிகள் தவெக கூட்டத்தைப் புறக்கணித்தாலும், ஆளும் அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராது. அவர்கள் தொடர்ந்து இந்த அரசுக்குத் தேவையான ஆதரவை வழங்குவார்கள். அதேசமயம், எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் தவெகவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளே மிக அதிகம் என்றும் நிபுணர்கள் அடித்துக் கூறுகிறார்கள். உதாரணமாக சிபிஎம், சிபிஐ தனது நிலைப்பாட்டில் உறுதி என்றால்.. வருகின்றன 2 தொகுதி இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லையே! அப்படி என்றால் இப்போது உள்ள தவெக எதிர்ப்பு எல்லாம் வெறும் நாடகம் தானே என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில், ஆளும் கட்சிக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவது போலக் காட்டிக் கொள்ளவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகளில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யவும் இந்த புறக்கணிப்பு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் காலம் வரும்போது நடைமுறை அரசியலின் யதார்த்தம் காரணமாக, இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இணைவதைத் தவிர்க்க முடியாது என்பதே தற்போதைய கள நிலவரமாகும். இந்த விவகாரம் திமுக தரப்பிலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த விலகல் போக்கு திமுகவிற்கு ஒரு தற்காலிகமான குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இது ஒரு நீண்ட கால அரசியல் கணக்கின் ஒரு பகுதி என்பதை அரசியல் அறிந்தவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தத்தில், தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், வரவிருக்கும் தேர்தல்களை நோக்கி அரசியல் கட்சிகள் நகரும் போது மேலும் பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.கூட்டணி