திருச்சி கிழக்கில் போட்டியா? விஜய்யின் நண்பர் சஞ்சீவ் சொன்ன பதிலால் அதிகரித்த எதிர்பார்ப்பு

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் தனது திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் பெற்ற வெற்றியை ராஜினாமா செய்தார். பெரம்பூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக விஜய் முதல்வர் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் தான் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் சொன்ன பதில் அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் விஜய் அமோக வெற்றி பெற்றார்.

    Advertisement

    நம் நாட்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒருவர் 2 தொகுதிகளில் எம்எல்ஏவாக இருக்க முடியாது. ஏதாவது ஒரு தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இதனால் விஜய் முதல்வரான உடன் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் பெற்ற வெற்றியை ராஜினாமா செய்தார். பெரம்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக முதல்வர் பதவியில் உள்ளார். இந்நிலையில் தான் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் இன்னும் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் யார் போட்டியிட உள்ளனர்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக கூட்டணியில் இணைந்துள்ள விசிக தலைவர் தொல் திருமாவளவனை கூட விஜய் களமிறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    Advertisement

    இப்படியான சூழலில் தான் விஜய்யின் நண்பரான நடிகர் சஞ்சீவ்விடம் இதுபற்றி கேட்கப்பட்டது. விஜய் ராஜினாமா செய்துள்ளதால் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்வி நடிகர் சஞ்சீவ்விடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு நடிகர் சஞ்சீவ், ''சூழ்நிலையை பொறுத்து இருக்கிறது. தற்போது அதை பற்றி யோசிக்கவில்லை. அனைத்தையும் காலம் தான் முடிவு செய்யும்'' என்று கூறியுள்ளார்.

    இதன்மூலம் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டேன். அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை சஞ்சீவ் கூறவில்லை. இதனால் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடிகர் சஞ்சீவ் களமிறங்குகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Advertisement

    நடிகர் சஞ்சீவ்வை எடுத்து கொண்டால் விஜய்யின் நெருங்கிய நண்பராக உள்ளார். விஜய்யுடன் சேர்ந்து புதிய கீதை உள்பட இன்னும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு சென்னையில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து சஞ்சீவ் பிரசாரம் செய்தார். இருப்பினும் சஞ்சீவ் தவெகவில் எந்த பொறுப்பையும் வகிக்கவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை.

    ஆனால் விஜய்யை எடுத்து கொண்டால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். அவர் தவெகவில் பொறுப்பில் இல்லாமல் இருந்தாலும் கூட தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதா ஜீவனை எதிர்த்து விஜய் நிறுத்தினார். அங்கு நடிகர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரை முதல்வர் விஜய் மீன்வளத்துறை அமைச்சராக ஆக்கினார்.

    Advertisement

    இந்நிலையில் தான் திருச்சி கிழக்கில் போட்டியிடுவது சூழ்நிலையை பொறுத்து உள்ளது என்று நடிகர் சஞ்சீவ் கூறியுள்ளார். இதனால் ஸ்ரீநாத்தை தொடர்ந்து முதல்வர் விஜய் தனது நண்பரான சஞ்சீவ்விற்கு திருச்சி கிழக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த திமுகவின் இனிகோ இருதயராஜை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் விஜய் மொத்தம் 91,381 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளரான இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனால் விஜய் 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வெறும் 19,715 ஓட்டுகள் மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Is Actor Sanjeev contest in Trichy East?: Tamil Nadu CM Vijay resigned after winning his Trichy East Assembly constituency. Vijay is serving as Chief Minister as the MLA of Perambur Assembly Constituency. Will you contest the by-election for the Trichy East assembly seat? Vijay's friend and actor Sanjeev's answer to the question has raised eyebrows.