50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா

  • சென்னை: தமிழ்நாட்டில் பல வருடங்களாகவே சமூக நீதியின் அடையாளமாக திகழும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.. தமிழகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான நாளாகப் இது பார்க்கப்படுகிறது.. 69 சதவீத இட ஒதுக்கீடு என்றால் என்ன, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்ல என்ன காரணம்? நாளை என்ன நடக்க போகிறது? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குச் சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் ஒரு முக்கியமான இட ஒதுக்கீட்டு முறையே 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும்.

    Advertisement

    இட ஒதுக்கீடு 50 சதவீதம்

    பொதுவாக இந்தியாவில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் இருந்தாலும், தமிழகத்தின் சமூக சூழல் மற்றும் வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, இந்த மாநிலத்தில் மட்டும் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

    இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) 26.5 சதவீதம் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (BCM) 3.5 சதவீதம் என மொத்தம் 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) 20 சதவீதமும், பட்டியல் இனத்தவர் (SC) 15 சதவீதம் மற்றும் அருந்ததியினர் (SCA) 3 சதவீதம் என மொத்தம் 18 சதவீதமும், பழங்குடியினர் (ST) 1 சதவீதம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது..

    Advertisement

    இந்த இட ஒதுக்கீட்டு முறையானது, சமூகத்தில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்கள் அதிகாரம் பெறுவதையும், அரசுப் பணிகளிலும் உயர்கல்வியிலும் உரிய பங்களிப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது..

    அரசியலமைப்பின் 9வது அட்டவணை

    இதற்காகவே 1994-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு தனிச் சட்டத்தை இயற்றி, அதனை இந்திய அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் சேர்த்தது.. இதன் மூலம் இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது..

    இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்தை நிலைநாட்ட தேவையான ஒன்று என்பதை தமிழக அரசு தொடர்ந்து தனது கொள்கையாகவே முன்னெடுத்து வருகிறது.. அரசியலமைப்பின்படி இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் "இந்திரா சஹானி" வழக்கில் 1992ம் ஆண்டு தீர்ப்பளித்தாலும், சில தனித்துவமான சூழல்களில் இந்த வரம்பை மீறலாம் என்றும் நீதிமன்றம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது..

    Advertisement

    69 சதவீத இட ஒதுக்கீடு

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் தனிச் சட்டத்தைக் கொண்டுவந்து, அதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்தது.

    பொதுவாக 9-வது அட்டவணையில் ஒரு சட்டம் சேர்க்கப்பட்டால், 1973-ம் ஆண்டு ஏப்ரல் 24-க்கு பிறகு சேர்க்கப்பட்ட சட்டங்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பைப் பாதிக்கும் பட்சத்தில் மட்டுமே அவை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட முடியும்.. இதுவே இந்த வழக்கின் மிக முக்கியமான சட்டப் புள்ளியாக மாறியுள்ளது.

    9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து, வாய்ஸ் போன்ற அமைப்புகளும் மற்றும் சில மாணவர்களும் 50 சதவீத வரம்பை மீறுவது பொதுப்பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று வாதிட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்..

    Advertisement

    இடைக்கால தடை

    இந்த வழக்கின் விசாரணையின் போது, இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்த தரவுகள் முக்கியமானது என்று நீதிமன்றம் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறது. நம்முடைய தமிழக அரசும் இதற்காகப் பல்வேறு ஆணையங்களை அமைத்து தரவுகளைத் திரட்டும் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது..

    கடந்த காலங்களில் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது..

    சுப்ரீம் கோர்ட்டில் நாளை என்னாகும்?

    இப்படிப்பட்ட சூழலில்தான் நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.. சமூக நீதிக்கும் அரசியலமைப்பு சட்ட வரம்புகளுக்கும் இடையிலான மிக முக்கியமான உரையாடலாகவே நாளை நடைபெறவுள்ள விசாரணை அமையும் என்றே தெரிகிறது..

    Advertisement

    நாளை வழங்கப்போகும் தீர்ப்பு, எதிர்காலத்தில் பிற மாநிலங்கள் தங்கள் சமூக சூழலுக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க அதிகாரம் உண்டா என்ற கேள்விக்கும் விடை அளிக்கும்.. அதுமட்டுமல்ல, இந்த வழக்கின் முடிவு தமிழகத்தின் வருங்காலக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கொள்கைகளில் ஒரு நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், ஒட்டுமொத்த மாநிலமும் ஆவலுடன் காத்திருக்கிறது...!!

    English Summary

    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 50 சதவீத வரம்பை மீறி ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட இந்த சட்டத்தின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்யும். இந்த விசாரணை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தமிழகம் முழுவதும் ஆவலுடன் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கு பிற மாநிலங்களின் கொள்கைகளிலும் மாற்றத்தை உண்டாக்கும்.