சென்னை: கார்த்திகாவை எப்படி வெளியே கொண்டுவருவது என்பதில்தான் நாம் தமிழர் கட்சியின் கவனம் இருக்கும். தவெகவுக்கு இது ஒரு விடுமுறை கிடைத்ததுபோல இருக்கும். இதெல்லாம் பழைய அரசியல் உத்திதான்... இது ஒன்றும் கொலை வழக்கு கிடையாது. உடனடியாகச் சென்று கைது செய்ய வேண்டிய அளவுக்கு என்ன அவசரம்?" என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வள்ளுவம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகரும், வழக்கறிஞரும், பத்திரிகையாளருமான கோடீவரன், "கார்த்திகா கைது விவகாரத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள். பாலியல் சீண்டல், பலாத்காரம், போதைப்பொருள் வியாபாரம், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, இன்ஸ்டாகிராமில் கத்தியை வைத்துக் காட்டி மிரட்டுவது, தலை உருளும் என்று பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் வெளியில் சுற்றிக்கொண்டும், பொதுவெளியில் பேசி கொண்டிருக்கிறார்கள்.
சகோதரி கார்த்திகாவும் பொதுவெளியில் பேசுகிறார். ஒரு வேட்பாளராக மக்களைச் சந்திக்க வேண்டும், எங்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று கேட்கிறார். அவரிடம் கோபம், தைரியம், வீரம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. அதற்கு காரணம் என்னவென்றால், அண்ணன் சீமானிடம் அவருக்கு இருக்கும் ஈர்ப்பும் தமிழ் தேசியமும்தான் அவரை அப்படிப் பேச வைக்கின்றன. அவர் கடுமையாக பேசுகிறார் என்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறீர்கள். வன்மத்தை வெளிப்படுத்துகிறீர்கள். கார்த்திகா அரசியல் ரீதியாக கருத்து தெரிவித்திருக்கிறார். அதை கொஞ்சம் கடுமையாகச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் சொன்ன கருத்து தவறு என்றால், அதை நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கலாம். ஆனால், காவல்துறை ஏதோ ஒரு தீவிரவாதியைக் கைது செய்து அழைத்துச் செல்வதுபோல நடவடிக்கை எடுக்கிறது. கார்த்திகா ஒன்றும் டிபன் பாக்ஸ் குண்டு வைக்கவோ, மதக்கலவரத்தில் ஈடுபடவோ, சாதி ஆணவக் கொலை செய்யவோ, கள்ளநோட்டு அடிக்கவோ, கஞ்சா கடத்தவோ இல்லை. அவரது வீட்டுக்காரர் சாராய வியாபாரம் செய்வது போன்ற தவறுகளிலும் ஈடுபடவில்லை. அரசியல் ரீதியாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். அதற்காக இந்த அளவுக்கு நடவடிக்கை எடுப்பது ஏன்? கார்த்திகாவை எப்படி வெளியே கொண்டுவருவது என்பதில்தான் நாம் தமிழர் கட்சியின் கவனம் இருக்கும். தவெகவுக்கு இது ஒரு விடுமுறை கிடைத்ததுபோல இருக்கும். இதெல்லாம் பழைய அரசியல் உத்திதான்... இது ஒன்றும் கொலை வழக்கு கிடையாது. உடனடியாகச் சென்று கைது செய்ய வேண்டிய அளவுக்கு என்ன அவசரம்? கார்த்திகாவால் அதிகபட்சம் என்ன செய்ய முடியும்? பேச முடியும். அவ்வளவுதான். நாம் தமிழர் கட்சி இவர்களுடன் கூட்டணிக்குச் சென்றது கிடையாது. இவர்களுக்கு ஆதரவாகப் பேசியதும் கிடையாது. சீமான் இப்போது தவெகவை விமர்சித்துக்கொண்டிருக்கிறார். அதேபோல அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக எனப் பல கட்சிகளையும் பல வருடங்களாக விமர்சித்திருக்கிறார். ஆனால், பொதுவான பார்வையில் தவெக செய்தது தவறான செயல் என்று பலருக்கும் தோன்றுகிறது. அதனால்தான் அனைவரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். தவெக இந்த மாதிரியான அரசியலை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அண்ணன் சீமானுக்கும் திமுகவுக்கும் பெரிய நெருக்கம் கிடையாது. திமுக தலைவர் ஸ்டாலின், இதற்கெல்லாமா கைது செய்வீர்கள் என்று சில கண்ணியமான கேள்விகளை எழுப்புகிறார். எடப்பாடி பழனிசாமி இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார். அதிமுகவினர் தேர்தலையே குதிரை பேரம் போன்றதாக விமர்சிக்கிறார்கள். கார்த்திகா முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்காக வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்கள் என்றால், அதேபோல தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் முதலமைச்சரின் தாயைப் பற்றி விமர்சித்திருக்கிறார். அவர் ஒரு படி மேலே சென்று பேசியிருக்கிறார். ஆனால், அங்கே கைது நடவடிக்கை வரவில்லை. இங்கே கைது செய்கிறார்கள் என்றால், இது என்ன அரசியல்? இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெண் வேட்பாளரையோ பெண் பேச்சாளரையோ கைது செய்தது கிடையாது. வளர்மதி பேசாத பேச்சா? திமுகவை பற்றி கிண்டலாகவும் கடுமையாகவும் பேசியிருக்கிறார். விஜயகாந்த் அவர்களே, யார் கருப்பு எம்ஜிஆர், நீ கருப்பு எம்ஜிஆரா என்று கேட்கும் அளவுக்குப் பேசியிருக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் கோபமாகவும், அழுத்தமாகவும் பேசும் பெண் பேச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் பெண் பேச்சாளர்களுக்கு முழுசுதந்திரம் இருந்தது. பெண் பேச்சாளர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், அம்மாவே நேரடியாகக் களத்தில் இறங்குவார்.. இதனால் பலரும் அமைதியாக விட்டுவிடுவார்கள். திமுகவும்கூட இந்த மாதிரியான கண்ணியக் குறைவான நடவடிக்கைகளைச் செய்ததாக நான் பார்க்கவில்லை. ஒரு பெண் வேட்பாளரைக் கைது செய்திருப்பதை அநாகரிகமான செயலாகத்தான் பார்க்கிறேன். சட்டப்படி சரியா, தவறா என்பதைச் சட்டம் பார்த்துக்கொள்ளும். ஆனால், தவெகவின் நேரம், ஆற்றல் ஆகியவற்றை இந்த அளவுக்குச் செலவிடுவது தேவையற்றது. இதனால் தவெகவுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.தவெகவின் காழ்ப்புணர்ச்சி
கார்த்திகா கைது ஏன்
சீமான் - நாம் தமிழர் கட்சி
வளர்மதி பேசாத பேச்சா
ஜெயலலிதா - அம்மா ஆதரவு