மொட்டை ராஜேந்திரன் என்ன லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரா? கேரவன் கேவலங்கள்.. நொந்து கொண்ட பாலாஜி பிரபு

  • சென்னை: கேரவன் கலாச்சாரம் என்பது தனிக்குடித்தனம் என்பது போலாகிவிட்டது.. சின்ன சின்ன நடிகர்களும் கேரவன் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.. இதுபோன்ற தங்களின் ஆடம்பரக் கோரிக்கைகளை கைவிட்டு எளிமையை நடிகர், நடிகைகள் பின்பற்ற வேண்டும். இனியாவது சம்பந்தப்பட்ட அமைப்புகளும், திரைக் கலைஞர்களும் விழித்துக்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மனம் நொந்து கேட்டுக் கொண்டுள்ளார்.

    Advertisement

    Aramnaadu சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் கேரவன் கலாச்சாரம் பெருகிவிட்டது. இது தயாரிப்பாளர்களாகிய எங்களுக்கு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்தக் கேரவன்களால் எங்கள் தயாரிப்புச் செலவுகள் பல மடங்கு உயர்ந்துவிட்டன.

    Advertisement

    கேரவன் கேலவம்

    படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளும் இந்த கேரவனுக்கான அதிகப்படியான வாடகை, அதற்கான எரிபொருள் செலவு மற்றும் நடிகர், நடிகைகளுடன் வரும் ஏராளமான உதவியாளர்களுக்கான தினசரி பேட்டா, போன்றவை எங்களின் ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தை முற்றிலுமாக சீர்குலைக்கின்றன.

    முன்பெல்லாம் சினிமாவில் மனிதநேயம் நிலவியது. ஆனால் இப்போது ஆடம்பரக் கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டுள்ளன. நடிகர் பிரபு போன்ற மூத்த கலைஞர்கள் ஷூட்டிங்குக்கு வரும்போது, அவர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தே எல்லாருக்கும் சாப்பாடு சமைத்து எடுத்துவந்து உபசரிக்கும் பண்பை கொண்டிருந்தார்கள். படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவரையும் ஒரே குடும்பமாகப் பார்த்து அன்பு செலுத்திய காலம் அது.

    Advertisement

    மொட்டை ராஜேந்திரன்

    முன்பெல்லாம் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றால், அவரது பக்கத்தில் சென்று, சார், ஷாட் ரெடி என்று உதவி இயக்குனர்கள் அழைப்பார்கள். சத்யராஜ் சார் உட்பட இப்படித்தான் அனைவரையும் நேரடியாக சென்று அழைப்பார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. கேரவன் உள்ளே இருந்தால், யாரும் யாருடனும் பேசுவதில்லை.. யார் எந்த படம் நடிக்கிறார்கள் என்று தெரிவதில்லை.. யார் யாருடன் நடிக்கிறார்கள் என்று தெரிவதில்லை.

    கேரவனில் சென்று கூப்பிட்டாலும் உடனே ஷாட்டுக்கு வருவதில்லை. கேரவன் உள்ளே இருக்கும் நட்சத்திரம், எப்போது வெளியே வருவார் என்று தெரியாது. அதனால் கேரவன் வெளியிலேயே காத்திருக்க வேண்டி உள்ளது.

    Advertisement

    நடிகர் மொட்டை ராஜேந்திரனும் கேரவன் கேட்கிறாராம்.. கேரவன் தந்தால்தான் நடிக்க வருவேன் என்று கண்டிஷன் போடுகிறார்.. அவருக்கு சம்பளம் ஒன்றரை லட்சம், அவருடன் வரும் நபர்களுக்கு ஆளுக்கு 5 ஆயிரம், 5 ஆயிரம் தர வேண்டும் என்கிறார்.. இதனால் எக்ஸ்ட்ரா 20 ஆயிரம் தினசரி செலவாகிறது.. கேரவன் வேண்டும் என்கிறாரே, அவரென்ன லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனா?

    தயாரிப்பாளர்களுக்கு வீண் செலவு

    பெரிய நட்சத்திரங்களுக்கு இணையான வசதிகளைத் தங்களுக்கும் கேட்கும் இந்த மனப்போக்கு தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நிதிச் சுமையை உருவாக்குகிறது. ஹீரோவுக்கு, ஹீரோயினுக்கு மட்டும் வந்த கேரவன் வந்தது.. ஆனால் இப்போதெல்லாம் பெரிய பெரிய படம் எடுத்தால், 40 கேரவன்கள் வந்து நிற்கின்றன..

    Advertisement

    மேக்கப் ஆர்ட்டிஸ்ட், காஸ்ட்யூம், ,அவர்களின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு வழங்கப்படும் தினசரிப் படப்படியால் 5 ஆயிரம், 10 ஆயிரம் என தினமும செலவாகிறது.. சில நேரங்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை தயாரிப்பாளர்களின் பணம் தேவையின்றி வீணடிக்கப்படுகிறது. இத்தகைய ஆடம்பர செலவுகளால் சிறிய மற்றும் நடுத்தரப் பொருட்செலவில் படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய அளவிலான நிதி இழப்புகளைச் சந்திக்கிறார்கள்.

    இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கேமரா துறை மட்டுமே மானிட்டர் கேட்கவேண்டும்.. நயன்தாரா போன்றோர் தனியாக மானிட்டர் கேட்கிறார்களாம்.. இப்படி மானிட்டர் கேட்பது இயக்குநரையே அசிங்கப்படுத்துவது போலாகும்.. அப்படி தனியாக மானிட்டர் கேட்டால் இயக்குநர்கள் அனுமதி தரக்கூடாது..

    Advertisement

    முதலீடு + செலவு

    ஏவிஎம், விஜயா வாஹினி போன்ற பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ஏன் சினிமா எடுப்பதில்லை? அவர்களிடம் இல்லையா என்ன? அன்று இந்த தொழிலில் ஒரு கவுரவம் இருந்தது.. இன்று அது இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறார்கள்.

    தமிழ் திரைப்படத் துறை இனிவரும் காலங்களில் சீரான முறையில் இயங்க வேண்டுமானால், முதலில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களின் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த சினிமாவில் கடுமையான விதிகள் உடனடியாக உருவாக்கப்பட்டு, அவை உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

    சின்ன சின்ன நடிகர்கள் தங்களின் ஆடம்பரக் கோரிக்கைகளைக் கைவிட்டு எளிமையைப் பின்பற்ற வேண்டும். இனியாவது சம்பந்தப்பட்ட அமைப்புகளும், திரைக் கலைஞர்களும் விழித்துக்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்" என்கிறார்.

    English Summary

    Is Motta Rajendran S.S. Rajendran? Balaji Prabhu Slams Tamil Cinema’s Caravan Culture