பண்ருட்டி மோகன் அடுத்த விக்கெட்? அன்று சட்டமன்றத்தில் அம்மா அம்மான்னு அழுதாரே.. இப்போ? பின்னணி என்ன

  • சென்னை: கடலூர் வடக்கு மாவட்ட அதிமுகவிலும், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலும் இப்போது ஒரே பரபரப்பாக இருக்கிறது.. ஏன் தெரியுமா? பண்ருட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன், இப்போது தவெகவில் இணையப் போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. ஏற்கனவே அதிமுகவுக்குள் கோஷ்டி பூசல்கள் நிலவி கொண்டிருக்கும் சூழலில், இப்போது கடலூரிலும் பூசல் வெடித்துள்ளதோ என்ற சலசலப்பு எழுந்துள்ளது.. என்ன நடக்கிறது பண்ருட்டி அதிமுகவில்?

    Advertisement

    கடலூர் வடக்கு மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை சமீபகாலமாகவெ உட்கட்சி மோதல்கள் நீடித்து வருகின்றன. இந்த மாவட்டத்தின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கும், பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வத்திற்கும் இடையே நிலவி வந்த அரசியல் முரண்பாடுகளும், கருத்து மோதல்களும் கட்சித் தொண்டர்களிடையே பெரும் தொய்வை ஏற்படுத்தி வந்தன..

    Advertisement

    பிறகு சட்டமன்றத் தேர்தலில் கடலூரில் போட்டியிட்டு எம்.சி.சம்பத் தோல்வியுற்ற போதிலும், தேர்தல் முடிந்ததுமே அவர் தவெகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, எம்.சி.சம்பத்திடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார்.

    பண்ருட்டி மோகன்

    கட்சியைச் சீரமைக்கும் நோக்கில், எம்.சி.சம்பத்தின் அண்ணன் எம்.சி.தாமோதரனை புதிய மாவட்ட செயலாளராகத் தலைமை நியமித்தது. இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து எம்.சி.சம்பத் தவெகவில் இணைந்தார். மாவட்டத் தலைமை மாற்றப்பட்டதால் இனிமேல் கட்சியில் எந்த ஒரு கோஷ்டி பூசலும் இருக்காது, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என அடிமட்டத் தொண்டர்களும் நம்பினார்கள். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை..

    Advertisement

    இப்படிப்பட்ட சூழலில்தான் கடலூரில் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம், புதிய மாவட்டச் செயலாளர் எம்.சி.தாமோதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.. இந்த கூட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன் கலந்து கொள்ளாதது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

    தவிக்கப்படுகிறாரா?

    இதுகுறித்து மோகனின் ஆதரவாளர்கள் தரப்பில் சொல்லும்போது, "மாவட்டத் தலைமை நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தங்களுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படுவதில்லை, புறக்கணிப்பு காரணமாகவே சட்டமன்ற உறுப்பினர் இக்கூட்டங்களைத் தவிர்த்து வருகிறார்" என்று குற்றம் சாட்டுகிறார்கள்,

    ஆனால் மாவட்டத் தலைமை வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்களின் கருத்து வேறுவிதமாக உள்ளது.. அதாவது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் தலைமையிலான தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த பண்ருட்டி எம்எல்ஏ மோகனை, பெரும்பாலான அதிமுக மூத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் இன்னமும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

    Advertisement

    இந்த பரஸ்பர நம்பிக்கையின்மை மற்றும் தொடர் புறக்கணிப்பு காரணமாக, மோகன் தனது எம்எல்ஏ பதவியை விரைவில் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய தீவிரமாக ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பண்ருட்டி மோகன் யார் தெரியுமா?

    பண்ருட்டி தொகுதியில் அதிமுக சார்பில் முதன்முறையாகப் போட்டியிட்டு வென்றவர் மோகன். இதற்கு முன்பும் பலமுறை வாய்ப்புக் கேட்டும் கிடைக்காத நிலையில், கடந்த தேர்தலில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே சான்ஸ் கிடைத்து சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார். இதனால், எம்எல்ஏவாகப் பதவியேற்றபோது அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார்.

    சட்டசபை செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் பதவியேற்ற மோகன் திடீரென்று கண்கலங்கினார். சபையிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோவை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மோகன், ''மாண்புமிகு புரட்சி தலைவர் அம்மா (ஜெயலலிதா) நான் முதலில் வந்து இருக்கிறேன். மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அம்மா எங்களுக்கு நல்லது பண்ணுங்க'' என்று கூறி கண்கலங்கினார்.

    Advertisement

    அன்று எளிய பின்னணியில் இருந்து வந்து, ஜெயலலிதா மீதான விசுவாசத்தோடு சட்டமன்ற உறுப்பினரான மோகன், தற்போதைய உட்கட்சி அரசியல் நெருக்கடிகளால் தவெகவை நோக்கி நகர முற்படுவது கடலூர் மாவட்ட அதிமுகவிற்குப் பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Is Panruti Mohan the Next Big Political Catch? He Once Broke Down in the Assembly Over Amma... What’s the Story Now?