மஞ்ச தாலியை கழற்றினாலே டைவர்ஸ்? அப்பீலுக்கு போன மதம் மாறிய மனைவி.. மதுரை ஹைகோர்ட் சொன்னது என்ன

  • சென்னை: திருமண உறவில் தாலியை அகற்றுவது என்பது கணவருக்குக் கடுமையான மனரீதியான கொடுமையைக் கொடுப்பதற்குச் சமம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்து வாழும் தம்பதியரின் விவாகரத்தை உறுதி செய்து, மனைவியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அனைவரது கவனத்தையும் பெற்றுள்ள இந்த வழக்கின் பின்னணி என்ன என்பது இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    ராணுவத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவருக்கும், ஒரு பெண்ணிற்கும் இந்து மதச் சடங்குகளின்படி முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    Advertisement

    திருமணமான சில வருடங்களிலேயே, தன் கணவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகப்பட்டார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

    கணவரை சந்தேகப்பட்ட மனைவி

    இந்த சந்தேகத்தின் உச்சக்கட்டமாக, ராணுவத்தில் பணியாற்றி வந்த தன் கணவரின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில், அவரது உயரதிகாரிகளுக்கு மனைவி புகார்களை அனுப்பினார். அதில் கணவரின் நடத்தை குறித்துப் பல அவதூறான கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே மனைவி,.இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அந்த மதத்தின் நடைமுறைகளைப் பின்பற்றத் தொடங்கினார். ஒருகட்டத்தில் கணவரைப் பிரிந்து வாழவும் தொடங்கினார்.

    Advertisement

    தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, கணவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். தன் மனைவி தன்னைத் தொடர்ந்து மன ரீதியாகத் துன்புறுத்தி வருவதாகவும், தங்களுக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக இனி இருவரும் சேர்ந்து வாழ எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்பதால், இந்து திருமண சட்டப் பிரிவின் கீழ் தமக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

    மதம் மாறிய மனைவி

    இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது கணவரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

    Advertisement

    ஆனால், கீழமை நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து, மனைவி உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி. வடமலை முன்னிலையில் விசாரணைக்கு நேற்று வந்தது.

    அப்போது கணவர் தரப்பில், தன் மனைவி இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதன் காரணமாக, திருமணத்தின் சாட்சியாக விளங்கும் தாலியை அகற்றிவிட்டார், அவர் எந்த ஒரு தங்க நகைகளையும் அணிவதில்லை,கணவருக்குப் பிற பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்தது என்ற மனைவியின் குற்றச்சாட்டை, போதிய சான்றுகளுடன் நிரூபிக்க மனைவி தரப்பால் இயலவில்லை என்றெல்லாம் வாதிடப்பட்டது.

    மதுரை ஹைகோர்ட் நீதிபதி

    இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி பி. வடமலை தன்னுடைய தீர்ப்பில் சொன்னதாவது: "கணவன் அல்லது மனைவி தங்களின் துணையைப் பற்றி அவரது உயரதிகாரிகளிடம் ஆதாரமற்ற அவதூறு புகார்களைத் தெரிவிக்கும் பட்சத்தில், அதுவே சட்டரீதியாக விவாகரத்து கோருவதற்குப் போதுமான மற்றும் வலுவான காரணமாக அமைகிறது.

    Advertisement

    மனைவி மதம் மாறியதை சாதாரண விஷயமாகப் புறந்தள்ளிவிட இயலாது. மனைவி தாலியை அகற்றிவிட்டு தங்க நகைகள் எதையும் அணிவதில்லை என்பது சாட்சியங்களின்படி நிரூபணமாகி உள்ளது. அத்துடன் மனைவி தன் மகளுக்குக் கிறிஸ்தவப் பெயரைச் சூட்டியுள்ளார், மகள் ஒரு கிறிஸ்தவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதும் சான்று ஆவணங்கள் மூலம் தெளிவாகிறது.

    விவாகரத்து கேஸில் அதிரடி

    இந்து பண்பாட்டின்படி, தாலியை அகற்றுவது என்பது ஒரு வகையான மனரீதியான கொடுமையின் வெளிப்பாடாகவே அமைகிறது. மனுதாரரான கணவரும், அவரது மனைவியும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்கள். எனவே, இருவரையும் சேர்த்து வைக்க சாத்தியமில்லை.. கீழமை நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவில் தலையிட வேண்டிய அவசியமும் எழவில்லை" என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    Advertisement

    அத்துடன் மனைவியின் மேல்முறையீட்டு மனு முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டு, விவாகரத்தையும் உறுதி செய்தார் நீதிபதி வடமலை.

    English Summary

    Is Removing the Manjal Thali Mental Cruelty? What Madurai High Court Said in the Appeal of a Converted Wife