அம்பாசமுத்திரத்தில் சீமான் பொது வேட்பாளராக இறங்குகிறாரா? மறுக்காத ஆர்எஸ் பாரதி.. என்ன சொன்னார்?

  • சென்னை: அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளார். இந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக சீமான் நிறுத்தப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், இதுபற்றி திமுகவின் ஆர்.எஸ் பாரதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஆர்.எஸ் பாரதி, திட்டவட்டமாக மறுக்காமல், தேர்தல் நேரத்தில்தான் சொல்ல முடியும். அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். அதெல்லாம் தலைவர்தான் சொல்வார்" என்று பட்டும் படாமல் பதிலளித்தார்.

    Advertisement

    அதிமுக எம்.எல்.எக்கள் 6 பேர் தற்போது வரை தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த 6 தொகுதிகள் மற்றும் விஜய் போட்டியிட்டு ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    மறுப்பு தெரிவிக்காத ஆர் எஸ் பாரதி

    சீமான் இந்த தொகுதியில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஆர்.எஸ் பாரதி கூறியதாவது:- தேர்தல் நேரத்தில்தான் சொல்ல முடியும். அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். அதெல்லாம் தலைவர்தான் சொல்வார்" என்று அதனை மறுக்காமல் பதில் அளித்தார்.

    சீமான் பொதுவேட்பாளராக போட்டியா என்ற கருத்துக்கு ஆர்.எஸ் பாரதி மறுப்பு எதுவும் தெரிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து ஆர்.எஸ் பாரதியிடம், இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது.. தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு ஆர்.எஸ் பாரதி அளித்த பதிலில், "தேர்தல் வரப்போகிறது. இன்னும் 6, 7 தொகுதிகளுக்கு தேர்தல் வரப்போகிறது. ஸ்டாலின் சொல்கிறார் என்றால் பொருள் இருக்கும். அந்த பொருளுக்கு ஏற்ற மாதிரி அரசியல் இருக்கும்" என்றார்.

    Advertisement

    மாணிக்கம் தாகூர்

    திமுக விமர்சிக்கும் அதேபாணியில் தான் நாங்கள் திருப்பி அடிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ் பாரதி, "நாங்கள் பண்டிதர் நேரு, இந்திர காந்தியையே பார்த்தவர்கள். இவர் யாரு? நேற்று முளைத்த காளான்.. வரட்டும் பார்த்துக்கலாம். நாங்கள், நேருவே எங்களை கண்டு பயந்து ஓடிய காலம் உண்டு.. இந்த வரலாறு எல்லாம் அவருக்கு தெரியாது. அவர் பிறந்து கூட இருக்க மாட்டார். புதுசா வந்து இருக்கார்.. பேசனும் என்று பேசியிருக்கிறார். கொஞ்ச நாளில் அடங்கிவிடுவார்கள்" என்றார்.

    Advertisement

    அமைச்சர் சரத்குமாரை மாற்ற இருக்கிறார்கள்

    டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்த அரசாங்கத்தில் எது சரியாக நடக்கிறது. எல்லாமே தப்பா நடக்கிறது. எதேதோ நடக்கிறது. யாரோ இரண்டு பேர் உக்காந்து கொண்டு உத்தரவு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் நீங்கள்தான் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். திமுக போராட்டம் நடத்தியதால்தான் தவெக அமைச்சர் சரத்குமார் யார் என்றே தெரியவந்தது.

    இதை செய்தார் என்று.. அவரை மாற்ற இருக்கிறார்கள் என்று நீங்கள்தானே செய்திபோட்டீர்கள். திமுக ஒரு போராட்டம் நடத்தியது என்றால், அர்த்தத்தோடு நடத்தும். அதற்கு வெற்றி கிட்டும். இன்னைக்கு இல்லையென்றாலும் நாளைக்கு கிடைக்கும். இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். தலைவர் தெளிவாக முடிவாக எடுப்பார். நாங்கள் ஸ்டெடியாக போய்க்கொண்டு இருக்கிறோம். மக்கள் செய்ததவறுக்காக வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.. எங்கள் பக்கம் திரும்பி வருகிறார்கள்.. எல்லா இடத்திலும் மாற்றம் தெரிகிறது. மக்கள் சரிவர இருக்கிறார்கள்" இவ்வாறு பேசினார்.

    English Summary

    Seeman has announced that he will contest the by-election for this constituency. Amidst speculation in political circles that Seeman might be fielded as a common candidate for the opposition parties, reporters questioned DMK's R.S. Bharathi about the matter; he responded without categorically denying the possibility.