சென்னை: திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகி உள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடும் நிலையில் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் இப்படி செய்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவின் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதியின் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜிக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய புகாரில் செந்தில் பாலாஜி சிக்கினார். செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமாரின் தூண்டுதலின் பேரில் தான் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக கூறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இதனால் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றனர். அப்போது நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை விதித்தது. தினமும் 2 முறை சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்றைய தினம் செந்தில் பாலாஜி கையெழுத்திட செல்லவில்லை. அசோக் குமார் மட்டுமே போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். இந்த சமயத்தில் செந்தில் பாலாஜி எங்கே என்று கேட்டதற்கு, ''அண்ணனுக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனையில் உள்ளார்'' என்று அசோக் குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்சனை? அவர் எந்த மருத்துவமனையில் உள்ளார்? என்பது மர்மமாக உள்ளது. இதனால் தான் தற்போது இன்னொரு சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து செந்தில் பாலாஜி மருத்துவமனை சென்றாரா? என்ற கேள்வி வந்துள்ளது. இந்த கேள்வியின் பின்னணியிலும் முக்கியமான மேட்டர் உள்ளது. செந்தில் பாலாஜி முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக கூறி அவர் மீது கடந்த 28 ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செந்தில் பாலாஜியின் இல்லம், அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறை உள்பட 41 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமின்றி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் பெற்றதால் அவரை கைது செய்ய முடியாது. இதனால் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அவரை கைது செய்ய தமிழக அரசு முடிவெடுத்ததாக சொல்லப்பட்டது. இதனால் செந்தில் பாலாஜி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். ஆனால் நேற்றைய தினம் அவரது மனு தள்ளுபடியானது. இதனால் மீண்டும் கைது பீதி செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலையில் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் செந்தில் பாலாஜி தற்போது டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளார். அவரது மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதால் செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு எனக்கூறி மருத்துமனையில் உள்ளதாகவும் ஒரு தரப்பினர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.