சென்னை: தவெக எம்எல்ஏ பேர வழக்கில் கையெழுத்திட திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி இன்றாவது வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய தினம் டாஸ்மாக் வழக்கில் அவரது முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதை பொருத்தே செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.
திமுக அமைச்சராக இரு்த செந்தில் பாலாஜி, டாஸ்மாக்கில் ரூ 1000 கோடி முறைகேடும், டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ 397 கோடி முறைகேடும் செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
இது போதாக்குறைக்கு தவெக அரசை கவிழ்ப்பதற்காக தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் 6 நாட்கள் தலைமறைவாக இருந்து பின்னர் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றனர். அதாவது இருவரும் தினமும் காலை, மாலையும் ஆஜராகி கையெழுத்து வருகிறார்கள். இந்த நிலையில் செந்தில் பாலாஜியையும் வழக்குகளையும் பிரிக்க முடியாது என்பதை போல் டாஸ்மாக் முறைகேடு வழக்கும் சேர்ந்து அவரை துரத்துகிறது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எஃப்ஐஆகில் குறிப்பிட்டுள்ள குற்றசாட்டுகளில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை. பொத்தாம் பொதுவாக செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகிகள் செய்த குற்றத்திற்காக செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டுவது சரியல்ல என வாதிட்டார். அது போல் காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "100 கோடி முறைகேடு புகாரின் புலன் விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கவே கூடாது" என வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகாரி துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது" என கூறி செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் செந்தில் பாலாஜியை ஊழல் தடுப்பு துறை கைது செய்யும் என தகவல்கள் வெளியானது. இதனால் குதிரை பேர நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட ஆஜராக வேண்டிய நிலையில் செந்தில் பாலாஜி நேற்று ஆஜராகவில்லை. ஆனால் அசோக்குமார் மட்டும் ஆஜரான போது அவரிடம் செய்தியாளர்கள் செந்தில் பாலாஜியை கேட்ட போது, "செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு போயிருக்கிறார்" என தெரிவித்தார். அது போல் மாலை கையெழுத்திட காவல் நிலையம் வந்த போது செந்தில் பாலாஜியை நலம் விசாரித்த போது "அவரை பற்றி எனக்கு தெரியவில்லை" என பதில் அளித்தார். இதனால் செந்தில் பாலாஜி தலைமறைவாகிவிட்டாரா அல்லது ஏதாவது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாரா என்பது தெரியவில்லை. டாஸ்மாக் முறைகேடு முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடியான நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதியின் உத்தரவை பொருத்தே போலீஸாரின் என்ன செய்வார்கள் என்பது தெரியவரும். அது போல் இந்த முன்ஜாமீன் மனுவில் தீர்ப்பை பொருத்தே செந்தில் பாலாஜி வெளியே வருவாரா இல்லை தலைமறைவாக இருப்பாரா என்பது தெரியவரும். எது எப்படியிருந்தாலும் செந்தில் பாலாஜி இப்படி செய்வதால் குதிரை பேர வழக்கில் அவரது நிபந்தனை முன்ஜாமீனும் ரத்தாகும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.