சென்னை: பணியிடமாற்றம் செய்யப்படும் நீர்வளத் துறை அலுவலர்கள், புதிய பணியிடத்தில் சேராமல் விடுப்பில் சென்றால், ஊதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.
தமிழகத்தில் நீர்வளத் துறையில் கோவை, மதுரை, திருச்சி, சென்னை ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் இந்த துறையில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வழக்கம் போல் ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றப்பட்டனர். தமிழகத்தில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. ஆனால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அலுவலர்கள், இடமாற்றத்தால் அதிருப்தி அடைந்து புதிய அலுவலகத்தில் இணைய விரும்பவில்லை. அவர்கள் ஏற்கெனவே பழைய இடத்திலேயே பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் விடுப்பில் சென்றுவிட்டனர். அவர்கள் பழைய இடத்தில் பணியாற்றவே விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதிலும் பணியிடமாற்றம் பெற்ற செயற்பொறியாளர்கள் பலர் இன்னும் புதிய பணியிடத்தில் சேரவில்லை. பணியில் சேருவதற்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பிறகும் அவர்கள் பணியில் சேராதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பணிக்கு வராத பொறியாளர்களின் ஊதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர்கள் பணிக்கு செல்லாததால் மானியக் கோரிக்கைகள் மீது அமைச்சர்கள் பதிலளிக்க தேவையான புள்ளி விவரங்களை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், நீர் வளத் துறை செயலாளரிடம் அளிக்க வேண்டும். ஆனால் பொறியாளர்கள் இல்லாததால் இந்த டேட்டாக்கள் எடுப்பது தாமதத்தை ஏற்படுத்தும். அத்துடன் பொது சேவைகளும் பாதிக்கப்படுகிறது. புதிய திட்டங்களுக்கு பொறியாளர்கள் கையெழுத்திட வேண்டும். இவர்கள் பணிவிடுப்பில் சென்றுவிட்டால் அந்த பணிகளும் தேங்கி இருக்கும் என்பதால் இது போன்று ஒரு முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பருவமழை காலம் இன்னும் 2 மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை பணியும் இவர்களால் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அது போல் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. மேலும் ஆற்று படுகைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நதிகள் புனரமைப்பு பணிகளை செயல்படுத்துதல் உள்ளிட்டவையும் அப்படியே கிடக்கின்றன.