“மீனவர் பிரச்சனையில் கடமைக்கு கடிதம் மட்டும் எழுதினால் போதுமா?” - விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

  • சென்னை: மீனவர் பிரச்னையில் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா என முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பி உள்ளார். ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இலங்கையின் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    Advertisement

    மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்களும், சில நேரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

    முதல்வர் விஜய் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

    Advertisement

    மீனவர் பிரச்சனையில், 'மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?' என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?

    ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த சோஃபா மாடல் அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.

    இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Opposition Leader Udhayanidhi has questioned CM Vijay, asking if merely writing a letter regarding the fishermen's issue is sufficient. He stated that one should not engage in deceptive tactics concerning the fishermen's issue, just as is done with other matters.