சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் திடீர் திருப்பமாக அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏவாக மீண்டும் செயல்பட அனுமதி கோரி இசக்கி சுப்பையா, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. மேலும் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக இசக்கி சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் எம்எல்ஏ இல்லாததால் அங்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் அந்த தொகுதியின் எம்எல்ஏவாக மீண்டும் செயல்பட அனுமதி கோரி இசக்கி சுப்பையா கடந்த 28ஆம் தேதி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளித்திருந்தார்.
மேலும் இடைத்தேர்தல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை எம்எல்ஏவாக தொடர அனுமதிக்குமாறும் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற விரும்புவதாகவும் சென்னை ஹைகோர்ட்டில் அவர் கூடுதல் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என ஹைகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது. தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக பெரும்பான்மையை பெறாத நிலையிலும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. பெரும்பான்மை இல்லாததால் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தவெக அரசு நம்பிக்கை கோரிய தீர்மானத்தின் மீது அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் அக்கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். இந்த நிலையில் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த போது அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி, ராஜகோபால் ஆகியோர் இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி திருப்தியைந்த பின்னர் அதை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த விசாரணை என்பது பெறும் சம்பிரதாயம் அல்ல, அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என குறிப்பிட்டனர். சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ்.வைத்தியநாதன், "ராஜினாமா ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகி விடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானது தான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும் படி அவரை நிர்பந்திக்க முடியாது. எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும் என தெரிவித்திருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பிறப்பித்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.