லேண்டர் உடைந்தாலும் தளராத இஸ்ரோ.. நிலவின் 1.1 கிமீ பள்ளத்தில் தடயம்! வரலாற்றை மாற்றிய சந்திரயான் 2

  • சென்னை: நிலவின் தென் துருவத்தில் ஒளிந்திருந்த மிக பிரம்மாண்டமான ரகசியத்தை சந்திரயான் 2 விண்கலம் தற்போது கண்டுபிடித்து உலகையே அதிர வைத்துள்ளது.. கடந்த 2019ம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் லேண்டர் பகுதி செயலிழந்தாலும், அதன் ஆர்பிட்டர் பகுதி தொடர்ந்து நிலவை சுற்றி வந்து இந்த சாதனையை படைத்துள்ளது.. அங்குள்ள இருண்ட பள்ளங்களுக்கு கீழே பல கோடி ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் பனிப்பாறை வடிவ தண்ணீரை கண்டறிந்து இந்தியா இப்போது விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியிருந்தது.

    Advertisement

    வானில் அதிசயம்

    இந்த விண்கலத்தின் லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக செயலிழந்த போதிலும், அதன் ஆர்பிட்டர் பகுதி தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்து சாதனை படைத்து வருகிறது.. கடந்த 7 ஆண்டுகளாக நிலவை மிக துல்லியமாக சுற்றி வரும் இந்த ஆர்பிட்டர், இப்போது நிலவின் தென்துருவ பகுதியில் நிலத்தடி பனிப்பாறை நீர் உள்ளதற்கான மிக வலுவான தடயங்களை கண்டறிந்துள்ளது.

    அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (PRL) விஞ்ஞானிகள் இந்த ஆர்பிட்டர் அனுப்பியுள்ள ரேடார் தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்து இந்த புதிய விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்..

    Advertisement

    இந்த ஆய்வின் முடிவில், நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி எப்போதுமே படாத, கடுமையான குளிர்கொண்ட நிரந்தர நிழல் பிரதேசங்களின் மேற்பரப்பிற்கு அடியில் மிக அதிகமான அளவில் பனிப்பாறை வடிவ நீர் மூலக்கூறுகள் உறைந்திருப்பது முற்றிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சந்திரயான் 2 ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள DFSAR (Dual-Frequency Synthetic Aperture Radar) என்ற அதிநவீன ரேடார் கருவி மூலமாகத்தான் இந்த நிலத்தடி பனிப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பனிப்பாறைகள் - சின்ன பள்ளத்தில் தண்ணீர்

    இந்த அதிநவீன கருவி நிலவின் மேற்பரப்பை தாண்டி உள்ளே ஊடுருவிச் சென்று மைக்ரோவேவ் சிக்னல்களை அனுப்பி பாறைகளுக்கும் பனிப்பாறைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை துல்லியமாக கணக்கிட்டுள்ளது.. குறிப்பாக, அங்குள்ள Faustini என்ற மிகப்பெரிய பள்ளத்தின் உள்ளே அமைந்துள்ள 1.1 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு குட்டி பள்ளத்தின் நிலத்தடிப் பகுதியில்தான் இந்த நீர் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருக்கிறதாம்.

    Advertisement

    சூரிய வெளிச்சமே படாத அந்த ஆழமான பள்ளங்களில் வெப்பநிலை மைனஸ் 248 டிகிரி செல்சியஸ் வரை மிக கடுமையாக இருக்கும்.. இவ்வளவு கடுமையான குளிர் நிலவுவதால்தான் அங்குள்ள பனிப்பாறைகள் பல கோடி ஆண்டுகளாக அழியாமல் அப்படியே உறைந்து போயுள்ளன.

    விண்கல் - பனிப்பாறைகள்

    அதுமட்டுமல்ல, அந்த குறிப்பிட்ட பள்ளத்தின் விளிம்பு பகுதி ஒரு தனித்துவமான வடிவத்தில் உறைந்து போயுள்ளதும் தெரியவந்துள்ளது.. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் ஒன்று நிலவின் மீது மிக பயங்கரமாக மோதிய போது, நிலத்தடிக்கு கீழே இருந்த பனிப்பாறைகள் உருகி வெளியேறி பின்னர் அப்படியே மீண்டும் உறைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

    Advertisement

    நிலவில் கண்டறியப்பட்டுள்ள இந்த உறைந்த பனிப்பாறைகள் மனிதர்களின் அடுத்தகட்ட விண்வெளி ஆராய்ச்சி பயணத்திற்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவும், முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது..

    பூமியிலிருந்து விண்கலங்களில் தண்ணீரை எடுத்துச் செல்வது மிக கடினமான மற்றும் அதிக செலவு பிடிக்கும் காரியம் என்பதால் இந்த கண்டுபிடிப்பு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராக்கெட்டுக்கு எரிப்பொருள் ரெடி

    நிலவிலேயே தண்ணீர் இருப்பது உறுதியாகியுள்ளதால் எதிர்காலத்தில் நிலவுக்கு செல்லும் மனிதர்கள் இந்த பனிப்பாறைகளை உருக்கி தங்களின் குடிநீராகவும், சுவாசிப்பதற்கான ஆக்சிஜனாகவும் மாற்றியமைக்க முடியும்.. அதுமட்டுமில்லாமல் தண்ணீரில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை தனித்தனியாக பிரித்து விண்கலங்களுக்கு தேவையான ராக்கெட் எரிபொருளாகவும் மாற்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    Advertisement

    அமெரிக்காவின் நாசா மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகள் நிலவின் தென்துருவத்தை நோக்கி படையெடுக்க இந்த தண்ணீர்தான் மிக முக்கிய காரணம் ஆகும்.. இந்த உலகளாவிய விண்வெளி போட்டியில் சந்திரயான் 2 விண்கலம் மூலமாக இந்தியா தற்போதே மிக முக்கியமான இடத்தை பிடித்து உலக அரங்கில் சாதனை படைத்துள்ளது..!!

    English Summary

    ISRO Proves Resilience: Chandrayaan 2 Orbiter Finds Massive Secret in Moon's 1.1 km Deep Crater, Changing Space History Forever