சென்னை: சென்னையில் ஐடி நிறுவனத்தில் புராஜெக்ட் மேனேஜராக பணியாற்றும் ஒருவர் பெண்ணின் தங்கசங்கிலியை பறிக்க முயன்று சிக்கி உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் 'ஆன்லைன் டிரேடிங்'கில் பல லட்சம் பணத்தை இழந்து, சொந்த வீட்டையும் விற்பனை செய்தாலும் கடன் தொல்லை தீராததால் தங்கசங்கிலி பறிப்பில் ஈடுபட முயன்றதாக கூறியது திடுக்கிட வைத்துள்ளது.
சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 24). எம்பிஏ முடித்துள்ள இவர் தாம்பரத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். தாம்பரம் அருகே சானடோரியம் நடைமேம்பாலம் அருகே ஆதரவற்ற முதியவர்கள் இருந்தனர். அவர்களுக்கு லட்டு கொடுக்க சென்றார். இந்த சமயத்தில் அங்கு வந்த நபர் ஒருவர் புவனேஸ்வரி முகத்தில் 'பெப்பர் ஸ்பிரே' அடித்ததோடு, அவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட புவனேஸ்வரி கூச்சலிட்டார். உடனடியாக அருகே இருந்தவர்கள் உதவிக்கு வந்தனர். தங்கசங்கிலி பறிக்க முயன்ற நபர் அங்கிருந்து ஓட முயன்றார். அவரை விரட்டி சென்ற பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அவருக்கு தர்மஅடி கொடுத்தனர். உடனடியாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் போலீசார் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்தனர். புவனேஸ்வரி கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைதான நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பெயர் குப்புசாமி (46) என்பதும், பம்மல் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பிகாம் முடித்த அவர் ஓஎம்ஆர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் புராஜெக்ட் மேனேஜராக பணியாற்றி வருவதும், அவர் ஆன்லைன் டிரேடிங்கில் பல லட்சம் பணத்தை இழந்ததும் தெரியவந்தது. இதனால் அவர் பம்மல் பகுதியில் உள்ள தனது வீட்டை ரூ.60 லட்சத்துக்கு விற்பனை செய்தாலும் கூட தொடர்ந்து நிதி நெருக்கடி, கடன் பிரச்சனையில் சிக்கி உள்ளார். இதனால் குப்புசாமி வேறு வழியின்றி தங்கசங்கிலி பறிக்க முயன்று சிக்கியது தெரியவந்தது. 'ஆன்லைன் டிரேடிங்'கில் பணத்தை இழந்த ஐடி நிறுவன புராஜெக்ட்மேனேஜர் தங்கசங்கிலி பறிப்பில் ஈடுபட்டது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.