சென்னை: ''முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பங்கு பெற உள்ளது. பாபநாசம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷாஜகான் அமைச்சராகிறார்'' என்று கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: ''இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 3 முக்கிய செய்திகள் பரிமாறப்பட்டன. ஒன்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஆட்சி உருவாவதற்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி உள்ளனர். வாணியம்பாடி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ சையது பாரூக் பாஷா, பாபநாசம் தொகுதியை சேர்ந்த ஏஎம் ஷாஜகான் ஆகிய இருவரும் தவெகவின் ஆட்சி தொடர்வதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தனர். அதன்மூலம் தவெகவின் ஆட்சி சிறப்பாக தொடர்கிறது. நாங்கள் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த சமயத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நிபந்தனையும் வைக்கவில்லை. புதிய கோரிக்கையையும் வைக்கவில்லை. இருந்தாலும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பெருந்தன்மையோடு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும் அமைச்சரவையில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். 2 எம்எல்ஏக்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம் என்று என்னிடம் ஒப்புதல் கேட்டனர். இது எங்களுக்கு எதிர்பாராத செய்தி. இதுபற்றி நேற்று முதல் இன்று வரை கலந்து பேசினோம். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பிஏசி (Political Advisory Committee) கமிட்டியிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர்களும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இன்று நாங்கள் ஆலோசனை வழங்கினோம். தமிழகத்தின் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இடம்பெற்று ஆதரிப்பது என்று முடிவெடுத்துள்ளோம். இதையடுத்து தவெக அமைச்சரவையில் பாபநாசம் தொகுதியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ ஏஎம் ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்'' என்றார். அமைச்சராகும் ஏஎம் ஷாஜகான் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு அவர் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அசாருதீன் உடுமன் அலியை (பெற்ற வாக்குகள் 68,219) வீழ்த்தினார். இதன்மூலம் ஷாஜகான் 1,065 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் அமைச்சராக பதவியேற்க உள்ளார். ஷாஜகானுக்கு இப்போது வயது 57. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் உள்ள தெற்கு சேனியத்தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் ஷமிம் நிஷா. 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.