சென்னை: முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்தான் என இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாரூக் பாஷா தெரிவித்துள்ளார். விஜய் பிரதமராவார் என்பது தனது சொந்த கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் எம்எல்ஏக்கள் தலைமைத்துவ பயிற்சி விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் விஜய்க்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரட்டும்.
விஜய் பிரதமரானால் ஆனந்த்தான் மத்திய உள்துறை அமைச்சர், ஆதவ் அர்ஜுனாவுக்கு நிதித் துறை பொறுப்பு வழங்கினால் பொருத்தமாக இருக்கும். அது போல் தமிழக சட்டசபை சபாநாயகராக உள்ள ஜேசிடி பிரபாகர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும். விஜய்க்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளது என நான் கூறியது எனது சொந்த கருத்தாகும் என எம்எல்ஏ சையது பாரூக் பாஷா தெரிவித்துள்ளார். வாணியம்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார் சையது பாரூக் பாஷா. இவர் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் கடந்த 2026 தேர்தலில் போட்டியிட்டு வென்றார். திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் வாணியம்பாடியில் சையது பாரூக்கும், பாபநாசத்தில் ஷாஜகானும் போட்டியிட்டு வென்றனர். தமிழகத்தில் தவெக 108 இடங்களில் வென்ற நிலையில் அமைக்க பெரும்பான்மை கிடைக்கததால் அக்கட்சிக்கு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது. அதில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுக்கு ஆதரவு கொடுத்தவர்களை திமுக நிர்வாகிகள் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். அது போல் சட்டசபையில் தவெக ஆட்சியை பாராட்டும் போதும் அவர்களை திமுக எம்எல்ஏக்கள் விமர்சித்ததுண்டு. அண்மையில் கூட அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி, திருவண்ணாமலையில் நடந்த ஐயூஎம்எல் கூட்டத்தில் எம்எல்ஏ சையது பாரூக் பாஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் பேசுகையில், சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு 2 பெட்டிகளில் கோடி கோடியாக பணத்தை கொண்டு வந்து "உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும்? உள்ளாட்சியா? போக்குவரத்துத் துறையா?" என எங்களிடம் கேட்டனர். இவ்வாறு சையது பாஷா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கெனவே தவெக ஆட்சி குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சையது பேசியதை திமுகவினர் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் அப்போது நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அதற்கு அமைச்சர் ஷாஜகான் விளக்கமளித்திருந்தார். அதாவது சையது பாஷா பேசியதை சிலர் திரித்து தவெக குதிரை பேரம் செய்ததாக தவறாக பரப்புகிறார்கள் என விளக்கமளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், "ஐயூஎம்எல் எம்எல்ஏக்களாகிய எங்கள் இருவருக்கும் கோடி கோடியாக பணம் கொடுப்பதாக குதிரை பேரம் நடத்தி ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தவர்கள் யார், எங்களுக்கு காவலுக்கு இருந்தவர்கள் யார் என்பதை வெளியே சொன்னால் அவர்கள் அரசியலே செய்ய முடியாது என ஷாஜகான்" தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் கூறி வருகிறார்கள். இதை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மறுத்து வருகிறது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள். இந்த நிலையில் விஜய் பிரதமராவார் என ஐயூஎம்எல் கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ
108 இடங்களில் தவெக வெற்றி
திமுக கூட்டணி
திருவண்ணாமலை
மேயர் பதவியை எதிர்பார்க்கும் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக.. விஜய் முடிவு? கலக்கத்தில் தவெக!
குதிரை பேரம்
திரித்து பேசும் திமுக